under review

மா. ஜானகிராமன்

From Tamil Wiki
Revision as of 20:16, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
மா. ஜானகிராமன்

மா. ஜானகிராமன் (ஜூன் 23, 1948) ஒரு மலேசிய எழுத்தாளர். மலேசிய இந்தியர்களைச் சார்ந்த ஆவணங்கள் தொகுக்கும் பணியைச் செய்து வருகிறார். தான் தொகுத்த தரவுகளின் அடிப்படையில் நிறைய ஆய்வு கட்டுரைகள் எழுதியுள்ளார்.

தனி வாழ்க்கை

மா. ஜானகிராமன் பத்தாங் பெர்ஜுந்தாய், ஜாவா சிலாங்கூர் தோட்டத்தில் ஜூன் 23, 1948-ல் பிறந்தார். தந்தையின் பெயர் மாணிக்கம். தாயார் பெயர் வள்ளியம்மா. உடன் பிறந்தோர் ஐந்து சகோதரிகள். தந்தையின் மரணத்தால் ஜானகிராமன் தன் படிப்பை படிவம் இரண்டுடன் விட நேர்ந்தது. குடும்ப வறுமையின் காரணமாக தன் பதினான்காவது வயதில் தோட்ட வெளிக்காட்டு தொழிலாளியாகவும் பின்னர் பால்மரம் வெட்டும் தொழிலாளியாகவும் வேலை செய்தார். அவருக்கு பதினாறு வயதானபோது பத்தாங் பெர்ஜூந்தை வட்டாரத்தில், கல்வி தடைபட்ட மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட வகுப்பில் பயின்று எல். சி. இ தேர்வு எழுதினார். அதில் கிடைத்த சான்றிதழைக் கொண்டு 1970-ல் இளைஞர் தொழில் நுட்பப் பயிற்சி மையத்தில் இணைந்தார். 1972-ல் தொலைத்தொடர்பு இலாக்காவில் அவருக்கு அரசு வேலை கிடைத்தது. 1975-ல் திருமணம் செய்துக்கொண்ட ஜானகிராமனின் மனைவியின் பெயர் சுந்தரம்பாள். இவருக்கு ஓர் ஆண் இரண்டு பெண்கள் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

எழுத்து வாழ்க்கை

மா. ஜானகிராமனிடம் எழுத்தார்வத்தைத் தூண்டியவர் அவரது ஆரம்ப பள்ளி ஆசிரியர் பெ. மு. இளம்வழுதி. அவர் அன்று மலேசியாவில் புகழ்பெற்ற எழுத்தாளராகத் திகழ்ந்தார். 1960-களில் நூலகத்தில் தான் வாசித்த விளையாட்டுச் செய்திகள், சிறு தகவல்கள் ஆகியவற்றை மறுபடியும் துணுக்குகளாக நாளிதழுக்கு எழுதி அனுப்பினார் ஜானகிராமன். அந்த ஆர்வம் மெல்ல வளர்ந்து 1970-களின் இறுதியில் உருவான 'புதிய சமுதாயம்' இதழில் 'தோட்டப்புற வாழ்க்கை' எனும் தலைப்பில் முதல் கட்டுரை எழுதினார். பின்னர்சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை அவதானித்து பிற நாளிதழ்களில் கட்டுரைகளாக எழுதத்தொடங்கினார்.

அக்காலக்கட்டத்தில் மேம்பாட்டுத் திட்டங்களாலும் துண்டாடல்களாலும் தோட்டங்கள் கையகப்படுத்தப்பட்டு, தோட்ட மக்கள் நகர்புறங்களுக்கு விரட்டப்பட்டு முற்றிலும் புதிய வாழ்வியல் சூழலுக்குள் இந்தியர்கள் தள்ளப்பட்டனர். ஆகவே, 200 ஆண்டுகாலத் தோட்டப்புற வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டுமென்ற நோக்கில் பதினேழு ஆண்டுகள் மலேசியா முழுவதும் பல தோட்டங்களுக்குச் சென்று உருவாக்கிய நூல்தான் 'மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை' (2006). இதை பின்னர் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து நூலாக்கினார். இந்த வரலாறு இளம் தலைமுறையைச் சென்றடைய மேலும் ஐந்து ஆண்டுகள் உழைப்பில் அறிய புகைப்படங்களின் தொகுப்புடன் 'The Malaysian Indian Forgotten History of the colonoal era' எனும் ஆங்கில நூலை 2016 வெளியிட்டார். 2022-ல் இந்நூல் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.

சமுதாய பணிகள்

மா. ஜானகிராமன் 1969-ல் பத்தாங் பெர்ஜுந்தாய் நகருக்கு வந்த கத்தோலிக பாதிரியார் மறைதிரு காரோப் அவர்களின் வழிகாட்டலில் சமுதாய பணியில் ஈடுபடத் தொடங்கினார். அவரின் தலைமையில் உருவான 'இளைஞர் மேம்பாட்டு சமூக சேவை பயிற்சி மையத்தில்' இணைந்து தோட்டப்புற மக்களின் மேம்பாட்டுக்கு முன்னின்று உழைத்தார். 1970 முதல் 1986 வரை மக்கள் கூட்டுறவு நாணயச்சங்கத்தின் தலைவராகவும், 1980 முதல் 1986 வரை மக்கள் சேவை இயக்கத்தின் செயலாளராகவும், 1988 முதல் 1991 வரை சிலாங்கூர் சமூக முன்னேற்ற இயக்கத்தின் தலைவராகவும், 1988 முதல் 1994 வரை கொம்டாரி சமூக மேம்பாடு ஆய்வுக் கழகத்தின் இயக்குனராகவும் இடைவிடாது சமுதாயப் பணியாற்றிவந்த இவர் 1993-ல் மனித மேம்பாடு ஆய்வு மையம் என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்புகள் மூலம் தோட்ட இளைஞர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி, தோட்ட மக்களுக்கான இலவச சட்ட ஆலோசனைகள், ஏழ்மை நிலையிலிருக்கும் மாணவர்கள் தொழிற்கல்வி பெற நிதியுதவி என அடிப்படை சேவைகளை வழங்கினார். அதே சமயம் தோட்ட மக்களுக்கு நிகழும் அநீதிகளை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள், மறியல்கள் ஆகியவற்றிலும் பங்கெடுத்தார். தோட்ட மக்களின் நலனுக்காக நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களையும் தொழிற்சங்கங்களையும் அமைக்க வழிகாட்டியாகத் திகழ்ந்தார் மா. ஜானகிராமன்.

பல உள்நாட்டு வெளிநாட்டு ஆய்வரங்களில் கட்டுரைப் படைத்துள்ள மா. ஜானகிராமன் 1984-ல் புதுடில்லியில் ஐக்கிய நாட்டு நிறுவனமும், உலகப் பண்பாட்டு தொடர்பு நிறுவனமும் இணைந்து நடத்திய அனைத்துலக கிராமப்புற மேம்பாட்டு கருத்தரங்கில் மலேசியாவைப் பிரதிநிதித்து தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அதுபோல நியூயார்க், லண்டன் மற்றும் பாரிசில் வெளியிடப்பட்ட 'கிராமப்புற செயலாக்க ஆளுமைகளின் குரல்கள்' எனும் ஆங்கில நூலில் இவர் தன் கருத்துகளை நேர்காணல் வழி விரிவாகப் பகிர்ந்துள்ளார்.

பரிசுகள் விருதுகள்

  • மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் 'தனிநாயக அடிகளார் விருது' - 1994
  • இங்கிலாந்து அனைத்துலக வாழ்க்கை வரலாற்று மையம் '20ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதர்' விருது வழங்கியது - செப்டம்பர் 1999
  • இங்கிலாந்து அனைத்துலக வாழ்க்கை வரலாற்று இயக்கம் தொகுத்த 'இருபதாம் நூற்றாண்டின் தனிச்சிறந்த மனிதர்கள்' எனும் நூலில் மா. ஜானகிராமன் இடம்பெற்றுள்ளார் - 2001
  • மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் 'டான் ஸ்ரீ ஆதிநாகப்பன் விருது' - 2003
  • வல்லினம் விருது - 2022

நூல்கள்

  • மலேசியத் தமிழர்களின் இக்கட்டான நிலை - 2006
  • The Malaysian Indian Dilemma - 2009
  • The Malaysian Indian Forgotten History of the colonoal era - 2016
  • மலேசிய இந்தியர்களின் மறக்கப்பட்ட வரலாறு - 2021


✅Finalised Page