மலைக்காடு (நாவல்)

From Tamil Wiki
Revision as of 14:44, 19 September 2022 by Boobathi (talk | contribs)

மலைக்காடு (2019), எழுத்தாளர் சீ. முத்துசாமியால் மலாயாவில் 1948-1960 வரை நீடித்து வந்த கம்யூனிஸ்டு இயக்கங்களின் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்.

மலைக்காடு முகப்பட்டை.jpg

வரலாற்றுப் பின்புலம்

இந்நாவல் 1948 முதல் 1960 வரையில் மலாயாவில் மலாயா கம்யூனிஸ்டு கட்சி நடத்தி வந்த ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் பின்னணியில் எழுதப்பட்டிருக்கிறது. கம்யூனிஸ்டு இயக்கத்தில் பங்கேற்ற கணிசமான அளவு இந்தியர்களையும் கதைமாந்தர்களாக இந்நாவல் கொண்டிருக்கிறது. அத்துடன், 1942 முதல் 1945 ஆம் ஆண்டு வரையில் மலாயாவில் நிலவிவந்த ஜப்பானியர் ஆட்சிக்காலத்தில் இந்தியச் சுதந்திரத்துக்காக ஆயுதப் போராட்டம் நடத்துவதற்கு இந்தியத் தேசிய ராணுவம் அமைக்கப்பட்டது. அந்த அமைப்பில் மலாயா முழுமையிலிருந்தும் பல தோட்டப்பாட்டாளிகள் பங்கேற்று ராணுவப்பயிற்சி பெற்றனர். 1945 ஆம் ஆண்டு சுபாஸ் சந்திரபோசின் மரணத்துக்குப் பின் அப்படையில் பணியாற்றிய முக்கிய பொறுப்பாளர்கள் சிலரும் தொண்டர்களும் தங்களை மக்கள் சேவையில் இணைத்துக்கொண்டு ‘தொண்டர் படை’ என்ற அமைப்பின் வழி செயல்பட்டனர். தொண்டர் படையின் செயல்பாடுகள் சமூகச் சீர்கேடுகளுக்கு எதிராகவும், முதலாளித்துவத்துக்கு எதிராகவும் இருந்தது. அக்காலகட்டத்தில் சமூகச் சீர்கேட்டு எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு போன்ற அடிப்படை கொள்கைகளோடு ஒத்துபோகும் அமைப்பாக கம்யூனிஸ இயக்கம் இருந்தது. இந்த இரு இயக்கங்களின் போராட்டப் பின்னணியை இந்நாவல் சித்திரிக்கிறது.

கதைச்சுருக்கம்

1940 களின் பிற்பகுதியில் கெடா மாநிலத்தில் அமைந்திருக்கும் புக்கிட் செம்பிலான் தோட்டத்திலிருந்து கதை தொடங்குகிறது. தமிழகத்திலிருந்து மலாயாவுக்கு சஞ்சிக்கூலிகளாக மாரியும் அவர் மகன் உண்ணாமுலையும் வருகின்றனர். உண்ணாமுலையின் பேரனான குட்டியப்பன் ரப்பர் தோட்டத்தில் வேலை செய்யும் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவன். குட்டியப்பன் இளமைக்கே உரிய சாகசங்களும் துடுக்கும் நிறைந்தவனாகவும் தொண்டர் படையின் இளைஞர் பிரிவு தலைவராகவும் விளங்குகிறான். தோட்ட மக்களுக்குத் தொடர்ந்து தூய்மையற்ற குடிநீர் வழங்கப்படுவதும் தோட்ட மேலாளர்களுக்கு மட்டுமே தனியாகத் தூய்மையான குடிநீர் வினியோகம் நடப்பதையும் எதிர்க்கிறான். தோட்டத்துக்குக் குடிநீர் கொண்டுவரும் லாரியை வழிமறித்துக் கொண்டு செல்கிறான். இதனால் தோட்ட மேலாளர்களுக்கு எதிரியாகிறான். ஒருநாள் தோட்டத்தில் இருந்து காணாமல் போனதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இளைஞர்களைத் தேடிக் கொண்டு மலைக்காட்டுக்கு தன் நண்பனோடு சென்றவன் காணாமல் போய்விடுகிறான். குட்டியப்பனின் தொலைதலும் தேடலுமே இந்நாவலின் பிரதான கதையாக வளர்கின்றது. குட்டியப்பனின் திடீர் மறைவால் அவன் தந்தை அம்மா வீடு கோபால், அவன் தாய் முத்தாயி, அவள் தோழி கண்ணம்மா, அவனைக் காட்டுக்கு அனுப்பிய தமிழர் சங்க தலைவர் இங்லீஸ் மணியம் ஆகியோர் அடையும் மனக்குழப்பங்களும் பதற்றங்களும் கதையில் விவரிக்கப்படுகின்றன. காட்டில் காணாமல் போன குட்டியப்பனைத் தேடிக் கண்டுபிடிக்க பணிக்கப்பட்ட காவல்துறை அதிகாரியான காப்ரல் மணியத்தின் வாழ்க்கைக் கதை இன்னொரு கிளைக்கதையாக அமைகின்றது. குட்டியப்பனை தேடிய அவரது பயணம் அரசுக்கு எதிர்திசையில் அவரைப் பயணிக்க வைக்கிறது. காட்டில் அரசுக்கெதிராக வன்முறை வழியிலான போராட்டத்தை முன்னெடுக்கும் மலாயாக் கம்யூனிச இயக்கத்தில் கோப்ரல் மணியம் சேர்வதாகக் கதை முடிகிறது.

கதைமாந்தர்கள்

  • மாரி/உண்ணாமுலை – மலாயாவுக்கு ரப்பர் தோட்டங்களில் பணியாற்ற கொண்டு வரப்படும் முதல் தலைமுறை தொழிலாளர்கள்
  • குட்டியப்பன் – துணிச்சலும் சாகச உணர்வும் நிரம்பியவன். தொண்டர் படை இளைஞர் பிரிவுத்தலைவர்.
  • கோப்ரல் மணியம் – குட்டியப்பனைத் தேடப் பணிக்கப்படும் காவல்துறை அதிகாரி, குடும்ப வாழ்க்கை கசந்து தனித்து நாய்களுக்கு அன்பு செலுத்துபவர்
  • இங்கிலிஸ் மணியம் – தோட்டத்தில் செல்வாக்குடன் இருக்கும் தமிழர்களைப் பிரதிநிதிக்கும் கட்சியின் உள்ளூர் கிளைத்தலைவர்.
  • கோபால், முத்தாயி- குட்டியப்பனின் பெற்றோர்
  • பவானி- குட்டியப்பனின் காதலி

இலக்கிய இடம்

சஞ்சிக்கூலிகளாக மலாயா நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட மக்களின் வாழ்வாதார சிக்கல்களையும் அரசியல் போராட்டங்களையும் சமரசமின்றி விவரிக்க முயலும் மலைக்காடு நாவல் நிஜத்தில் போராட்டங்களை முன்னெடுத்த வரலாற்று மனிதர்களை நாயக வழிபாட்டுக்குரியவர்களாகக் காட்ட முனைவதாக எழுத்தாளர் அ. பாண்டியன் குறிப்பிடுகிறார். மலாயாவுக்குச் சஞ்சிக்கூலிகளாக வந்து மலாயாவில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியலையும் அவர்களின் இடமென்ன என்ற உரையாடல் தொடங்கிய மூன்றாம் தலைமுறைத் தமிழர்களுக்கிடையிலான உரையாடலையும் இந்நாவல் முன்வைக்கிறது என எழுத்தாளர் சு.வேணுகோபால் குறிப்பிடுகிறார்.

உசாத்துணை