under review

மலேசிய காமன் விழா

From Tamil Wiki
Ff.jpg

காமன் திருவிழா மலேசியாவில் காமண்டித் திருவிழா என்று அழைக்கப்படுகிறது. இத்திருவிழா மலேசியாவில் தற்போது ஓர் இடத்தில் மட்டுமே கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது 'காமண்டித் திருவிழா' அல்லது 'காமன் திருவிழா' என்பன மருவி 'காமடித் திருவிழா' என்று பொதுமக்களால் அழைக்கப்படுகிறது.

காமன் திருவிழா நடக்குமிடம்

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள டெங்கில் வட்டாரத்தில் அமைந்திருக்கும் அம்பார்ட் தெனாங் எனுமிடத்தில் இத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

காமன் திருவிழா வரலாறு

தமிழ்நாட்டைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் இந்தத் திருவிழாவை மலேசியாவில் தொடங்கியிருக்கிறார். நான்கு தலைமுறைகளாக அவரது வம்சாவளியினர் டெங்கில் வட்டார மக்களின் ஆதரவோடு இந்த திருவிழாவைச் செய்து வருகின்றனர்.  

காமன் திருவிழா கொண்டாட்டம்

மாசி மாதத்தில் 22 நாட்களுக்கு இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதில் முக்கியமானது கொடியேற்றப்பட்டவுடன் வட்டார மக்கள் எல்லையைக் கடக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு ஆகும். அதன் அடிப்படையில் ஊர் மக்கள் வெளியூர் பயணங்கள் செல்வது போன்றவைத் தவிர்க்கப்படுகின்றன.

முதல் இரண்டு நாட்கள்
கரகம் பாலித்தல்

ஏனையத் திருவிழாக்களில் பாலிப்பது போலவே இந்தத் திருவிழாவில் கரகம் பாலிக்கப்படுகிறது. கலசத்தில் நீர் நிரப்பி அதை வேப்பிலை மற்றும் மலர்களால் அலங்கரித்து பாலிக்கிறார்கள்.

பூமிக்காசு வழிபாடு
Fff.jpg

காமன் திருவிழாவின் முக்கிய அங்கமாக பூமிக்காசு வழிபாடு திகழ்கிறது. காமன் ரதியிடம் நேர்த்திக்கடன்களை வைப்பவர்கள் கம்பம் நடுவதற்காகத் தோண்டப்பட்டிருக்கும் குழியில் காசுகளைப் போடுகின்றனர். பூசாரி பூமி பூசைக்கான சடங்குகளை முடித்தப் பின்பே வேண்டுதல் வைப்பவர்கள் காசுகளைக் குழிக்குள் போடுகின்றனர். வேண்டுதலின்பேரில் போடப்பட்ட இக்காசுகளைப் பூமிக்கு அர்பணித்து விடுவதால் யாரும் இதைத் திரும்ப எடுப்பதில்லை. ஆனால், தற்போது திருவிழா செலவிற்காக கொஞ்சம் நாணயங்களை மட்டும் விட்டுவிட்டு மீதத்தை எடுத்துக் கொள்கின்றனர்.

கம்பம் நடுதல்

காமன் திருவிழாவின் அதிமுக்கியமான சடங்காக கம்பம் நடும் சடங்கு நடைபெறுகிறது. கம்பம் நடுவதற்காக ஒரு பெரிய திடல் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அத்திடலில் காசு போடுவதற்கான குழியையும் தோண்டி வைக்கின்றனர். காசு போடுவதற்காக தோண்டப்படும் இக்குழியிலேயே இந்தக் கம்பம் நடப்படும். நடப்பு ஆண்டில் யார் திருவிழாவிற்கு தலைமை தாங்குகிறாரோ அவரே கரும்பு, செங்கரும்பு, வேம்பு, மா போன்றவைகளாலும் வைக்கோலினாலும் இறுக்கிக் கட்டப்பட்ட கம்பத்தினைச் சுமந்து வர வேண்டும். அவருக்கு முன்பாக பறையிசையை முழக்குகிறார்கள். இக்கம்பத்தை முடிந்தவரை பச்சையாக இருப்பதை உறுதிச்செய்கிறார்கள். மன்மதன் பச்சை நிறத்திலான மேனி உடையவன் என்பதினாலும், இந்தக் கம்பமே 16 நாட்களுக்கு மன்மதனாக பாவிக்கப்பட்டு வழிபடப்படும் என்பதினாலும் அதை உறுதிச்செய்கிறார்கள். தமிழ்நாட்டில் இக்கம்பத்தைச் பேக்கரும்பு, காட்டமணக்கு, சித்தக்கத்தி, காதோலை, கருகமணி போன்றவற்றைக் கொண்டு செய்து ஊன்றுகிறார்கள். கம்பம் காசுக்குழியில் ஊன்றப்பட்டப் பிறகு திருவிழாவிற்கு பொறுப்பெடுத்தவர்களுக்குக் காப்புக் கட்டப்படுகிறது. இவர்கள் 16 நாட்களுக்கு நோன்பு இருக்க வேண்டும்.

இந்த இரண்டு சடங்குகளோடு முதல் நாள் திருவிழா நிறைவடைகிறது.

மூன்றாம் நாள்
Ffff.jpg

திருவிழாவின் மூன்றாம் நாளில் ரதி மன்மதன் இணை தேர்ந்தெடுக்கப்படுகிறது. ரதியாகவும் மன்மதனாகவும் வேடம் போட இளைஞர்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். திருவிழாவின் இறுதி நாட்களில் இளைஞர்கள் ஒருவரையொருவர் தாங்கிக்கொள்ளும்படியான காட்சிகள் இடம்பெறும் என்பதால் இளைஞிகளையும் சிறுமிகளையும் இதில் சேர்த்துக் கொள்ளாமல் இருந்திருக்கலாம். வேண்டுதலுக்காகவோ அல்லது விருப்பத்தின் பேரிலோ எழுதிப்போடப்படும் பெயர்களிலிருந்து இருவரை இந்த வேடங்களைப் புனையத் தேர்ந்தெடுக்கின்றனர். அதில் ஒருவர் மன்மதனாகவும் மற்றொருவர் ரதியாகவும் வேடம் புனைவர். இவர்கள் காப்புக்கட்டிக் கொண்டு நோன்பு நோற்கின்றனர். ஒவ்வொரு வருடமும் கடவுள் யாரை ரதி மன்மதனாகத் தேர்ந்தெடுக்கிறார் என்பதைக் காண மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆறாம் நாள்

ஆறாம் நாளிலிருந்து கோயில் உபயத்துடன் மன்மதன் ரதி ஆட்டம் நடைபெறுகிறது. ஒரு பெரிய விழாவிற்கான ஒத்திகையாகவும், வேடம் புனைந்து ஆடுபவர்களின் உடலில் மன்மதனும் ரதியும் இறங்கி ஆட வேண்டும் என்பதற்காகவும் தினமும் மன்மதன் ரதி ஆட்டத்தினை வைக்கிறார்கள். இது அலங்கார ஒப்பனையில்லாத ஒரு ஒத்திகை நடனம் போலவே மேற்கொள்ளப்படுகிறது.

ஒன்பதாம் நாள்

காமன் திருவிழாவின் ஒன்பதாம் நாளில் நடப்பட்ட கம்பத்தைச் சுற்றி பூப்பந்தல் அமைக்கிறார்கள். அன்றைய தினத்தன்று காமன் ரதி வேடம் ஏற்பவர்கள் முழு அலங்கார ஒப்பனைகளோடு நடனத்தை ஆடுகின்றனர். மேலும், பறையடித்துக் காமன் கூத்திற்கான வாவணிப்பாடல்களையும் பாடுகின்றனர். இந்த ஒன்பதாம் நாளிலிருந்து அடுத்த பதினான்காம் நாள் வரை முழு அலங்கார ஒப்பனைகளுடனே வேடம் கட்டி ஆடுகின்றனர்.

பதினைந்தாம் நாள்
Fffff.jpg

பதினைந்தாம் நாள் இரவுத் தொடங்கி காமன் திருநாளின் முழுக் கொண்டாட்டம் அடுத்த நாள் வரை தொடர்கிறது. இந்தப் பதினைந்தாம் நாளின் தொடர்ச்சியில் பௌர்ணமி வருவதால் அந்த நாளை முக்கியமானதாகக் கருதிக் கொண்டாடுகின்றனர். காமன் பண்டிகையைக் கொண்டாடுவதற்கான வசந்தவிழா அது என்ற நோக்கில் அந்நாளின் கொண்டாட்டம் விமரிசையாக அமைகிறது. இந்த நாளில் பஞ்சாங்கம் பார்த்துக் கணித்த நேரத்தில் மன்மதனும் ரதியும் முழு அலங்காரத்துடன் ஆடத் தொடங்குகின்றனர். இது பூசைகள், ஆராதனைகள் மற்றும் பிரசாதம் வழங்குதலுக்குப் பிறகுத் தொடங்குகிறது. அவர்கள் ஆடத் தொடங்குவதற்கு முன்பு அன்றைய நாள் விழாவிற்கு தலைமை ஏற்றவர்களும் அவர்களின் குடும்பத்தாரும் ரதி மன்மதனாக வேடம் கட்டியவர்களுக்கு மாலைகளி அணிவிக்கின்றனர். பின்னர், ரதி மன்மதன் ஆகியோரின் இடுப்புகளில் நீண்ட துணிகளைக் கட்டி இழுத்துப் பிடித்துக் கொள்கின்றனர். லாவணிப்பாட்டு மற்றும் பறை இசைக்கேற்ப இந்த இணை ஆவேசமாக ஆடத் தொடங்குகிறது. எதிரியைத் தாக்கக்கூடிய வகையில் அவர்கள் நெருங்கி வருவதும், அவ்வாறு வரும்போது துணியைப் பிடித்திருப்பவர்கள் வேகமாகப் பின்னால் இழுப்பதும் சில மணி நேரங்களுக்கு நடைபெறுகிறது. கணவன் மனைவியான ரதியும் மன்மதனும் இவ்வாறு ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதற்கான காரணம் 'காமன் தகனம்' என்ற புராணத்தில் உள்ளது.

காமன் தகனம் புராணம்

சிவபெருமானின் தவத்தைக் கலைக்கச் சென்ற மன்மதனை ரதிப் போகவிடாமல் தடுக்கிறாள். தன்னுடைய கனவில் எமன் போன்றவர்கள் வருவதால் அது தீயச்சகுனம் என்று கூறி அவனைத் தடுக்கிறாள். ஆனால், ரதியின் பேச்சினைக் கேட்காமல் தேவர்கள் தனக்கிட்டக் கட்டளையை நிறைவேற்ற மன்மதன் சிவபெருமான் மீது மலர்க்கணையை விடுகிறான். அதனால், தவம் கலைந்த அவர் தன்னுடைய நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை எரித்து விடுகிறார். தன் கணவர் சாம்பலானச் செய்தியைக் கேட்ட ரதி சிவபெருமானிடம் சென்று ஓலமிடுகிறார். அவளின் இறைஞ்சுதலுக்கு மனமிறங்கி சிவபெருமான் ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியுமாறு மன்மதனை உயிர்ப்பித்துக் கொடுக்கிறார். ஆக, சிவபெருமானின் தவத்தினைக் கலைக்கச் செல்லும் மன்மதனை ரதி தடுத்து நிறுத்தும் காட்சியே அப்பொழுது ஆடப்படுகிறது.

கொஞ்சம் கொஞ்சமாக இருவரின் ஆட்டமும் உச்சக்கட்டம் அடையும் போது அவர்களின் கைகளில் மலர்களினால் ஆன வில்லினைக் கொடுக்கின்றனர். இந்த வில்லில் நாண் இருக்காது. அதைக் கைகளில் பிடித்துக்கொண்டு ஒருவரையொருவர் நோக்கிப் போய்த் திரும்புவர். இது தொடர்ச்சியாய் நடக்கும். அவர்கள் ஒருவரையொருவர் நெருங்கும்போது துணியைப் பிடித்திருப்பவர்கள் லாவகமாகப் பின்னால் இழுத்துவிடுகின்றனர். இந்தப்பிடி கொஞ்சம் தளர்ந்தாலும் ரதி மன்மதனும் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொள்ளும் சம்பவம் நேர்ந்து விடும். அதே போல, கடந்த ஆண்டுகளில் ரதி மன்மதன் வேடம் கட்டியவர்கள் யாராவது திருவிழாவிற்கு வந்திருந்தால் அவர்களையும் கண்காணிக்கிறார்கள். எந்த நேரத்திலும் ரதி மன்மதன் இவர்களுக்குள் இறங்கி வேடம் கட்டியவர்களைத் தாக்கக்கூடும் என்பதால் அவ்வாறு கண்காணிக்கின்றனர்.

பதினாறாம் நாள்

காமன் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக காமத்தகனமும் அவனை உயிர்ப்பித்தலும் திகழ்கின்றன. காமன் ரதி திருமணம் அதிகாலை ஒரு மணிக்குச் செய்யப்படுகிறது. அதன்பிறகு, அதிகாலை மூன்று மணிக்குச் சிவ தரிசனமும், அவர் மன்மதனை நெற்றிக் கண்ணால் எரிக்கும் காட்சியும், மன்மதனாகக் கருதப்படும் கம்பத்துக்குத் தீமூட்டுதலும் நடத்தப்படுகின்றன. விடியும்போது கம்பமும் பூப்பந்தலும் சாம்பலாகி விடுகின்றன. அதற்கு பிறகு, தாலியினை அறுத்து ரதிக்கு வெள்ளை சேலை உடுத்தி வீடு வீடாகச் சென்று மடிப்பிச்சை எடுக்கும் சடங்கினை மேற்கொள்கின்றனர். இதைப் பார்க்க பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அனுமதியில்லை. காமனை எரித்த இடத்தில் கோழிக்குஞ்சு ஒன்று கட்டப்படுகிறது. இது காமனாக வேடமிட்டவரின் உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் நேரக்கூடாது என்பதற்காக என்று கூறுகிறார்கள்.

பதினேழாம் நாள்

மன்மதனுக்கு விளக்கு ஏற்றி வைக்கிறார்கள்.

பதினெட்டாம் நாள்

பதினெட்டாம் நாளிலிருந்து இருபத்தோராம் நாள் வரை மன்மதனுக்குப் பால் ஊற்றப்படுகிறது.

பத்தொன்பதாம் நாள்

மன்மதனை எரித்த மூன்றாம் நாளான இதில் அவனுக்குக் கருமக்கிரியைகளும் அது சார்ந்த சடங்குகளும் செய்யப்படுகின்றன.

இருப்பதிரண்டாம் நாள்

ரதியின் வேண்டுதலுக்கு மனமிறங்கி சிவபெருமான் அவளின் கண்களுக்கு மட்டும் மன்மதன் தெரியுமாறு உயிர்ப்பித்துத் தரும் சடங்கு செய்யப்படுகிறது. அதோடு, திருவிழா ஒரு நிறைவை அடைகிறது.

லாவணிப்பாடலும் ஒப்பாரியும்

இந்தத் திருவிழாவிற்கென்றே கூத்து வகையைச் சேர்ந்த பாடல்களை வைத்திருக்கிறார்கள். இந்தப் பாடல் ரதி மன்மதனைச் சிவனின் தவத்தைக் கலைக்கப் போக விடாமல் தடுக்கின்ற வரிகளையும், அதற்கு மன்மதன் சிவனைப் பழித்துப் பேசும் வரிகளையும் கொண்டுள்ளது. இது ஒரு வாதநிலை பாடலாகவே அமைந்துள்ளது.

காமன் திருவிழா நான்கு தலைமுறைகளாகத் தொடர்ந்து கொண்டாடப்படுவது போல, இப்பாடலைப் பாடுவர்களும் பரம்பரை பரம்பரையாக வருகிறார்கள். தொடக்கக்காலத்தில் இருந்த பாடல் வரிகள் பல தொலைந்துவிட்டதால் பாடலைப் பாடுபவர்கள் பாடிய வரிகளைத் திரும்ப திரும்ப பாடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு, பல பாடலைப் பாடும் வாரிசுகள் பாடலைப் பாடுவதற்கு விருப்பமில்லாமல் ஒதுங்கியும் உள்ளனர். ஆனால், அதிலும் மரியாயி, நிஷா போன்ற 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பாடலைத் தொடர்ந்து பாடலைப் பாடி வருபவர்களும் இருக்கிறார்கள். மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த காமாட்சி என்பவர் தொடர்ந்து காமன் திருவிழாவில் பாடல்களைப் பாடி வந்தாலும் அவரிடமும் முழுமையான பாடல் வரிகள் இல்லை.

காமன் திருவிழாவில் பாடப்படும் பாடல் வரிகள்

38 முனிவர்கள் எல்லாரும் (இரு முறை)

48 ரிஷிமார்கள் எல்லாரும் (இரு முறை)

உன்னை அழைத்து வரச்சொல்லி

ஆள் வந்து நிக்குதடி (இரு முறை)

சண்டைக்கு போறேனென்று

ரதி தகராறு பண்ணாதே

போனால் வரமாட்டேன்

பொடிப்பொடி ஆயிருவேன்

என்னைப் போக விடைகொடுடி

நான் போய் வரேன் தேவசபை

(மன்மதன் ரதியிடத்தில் பாடுகின்ற பாடல் வரிகள்)

கரும்பு வில் மன்மதனே

கங்காளன் மருமகனே

அரும்பு வில் ஏந்தும் கரனே

அருங்கிளி வாகனனே

துரும்பையா ஈசனுக்கு

துணிந்தெதிர்க்கப் போகாது

குறும்பு புரிந்தோர்க்கு -அவர்

கோபமது பொல்லாது

கனிந்தவரை யாரிப்பார்

பணிந்தவர்களுக்கு வரமளிப்பார்

துணிந்தவரை ஜெயிப்பார்

தொண்டர்களுக்கு அருள் புரிவார்

என் தந்தை பெருமைதனை

தானுரைப்பேன் கேளுமையா

அர்த்தமுள்ள மன்மதரே

அன்புடைய அங்கையரே..

(ரதி பாடும் படியான பாடல் வரிகள்)

சிவபெருமான் மன்மதனை எரித்தப் பிறகு பாடப்படும் ஒப்பாரிப் பாடல் வரிகள் தொலைந்துவிட்டிருக்கின்றன.

ஏனையத் தகவல்கள்

குழந்தை இல்லாதவர்கள் இந்தத் திருவிழாவின்போது விரதம் இருந்து வேண்டிக் கொள்கிறார்கள். இந்த வேண்டுதல் நிறைவேறினால் மறுவருடம் திருவிழாவில் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி விடுகின்றனர். மேலும், வேண்டுதலினால் பிறக்கும் குழந்தைகள் ஆண் என்றால் மன்மதன் என்றும் பெண் என்றால் ரதி என்றும் பெயர் சூட்டுகின்றனர். இதனால், டெங்கில் வட்டாரத்தில் இப்பெயர் கொண்டவர்களை அதிகம் காண முடிகிறது. திருமணம் கைக்கூடாமை, காதல் சிக்கல், சொத்துச் சிக்கல், தேர்வில் வெற்றிபெறுவது போன்ற சிக்கல்களுக்கு இந்த வட்டார மக்கள் நம்பிக்கையோடு மன்மதன் ரதியை வேண்டிக்கொள்கின்றனர்.

புனைவுகள்

மலேசிய இலக்கியத்தில் ம. நவீன் எழுதிய மசாஜ் எனும் சிறுகதையில் இந்தத் திருவிழா குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கோள்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.