மலேசியாவில் ரப்பர் மரம்

From Tamil Wiki
Revision as of 11:12, 21 January 2023 by Parimitaa KM (talk | contribs) (Created page with "ரப்பர் உற்பத்தி மலேசியாவின் பொருளாதார, சமூக பின்புல அடையாளமாக முக்கியத்துவம் பெற்றது. மலேசியாவின் முதல் கட்ட ரப்பர் மரங்கள் 1877ல் நடப்பட்டன. == பின்னனி == 1873ல் ஹென்ரி அலெக்சன்டர்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ரப்பர் உற்பத்தி மலேசியாவின் பொருளாதார, சமூக பின்புல அடையாளமாக முக்கியத்துவம் பெற்றது. மலேசியாவின் முதல் கட்ட ரப்பர் மரங்கள் 1877ல் நடப்பட்டன.

பின்னனி

1873ல் ஹென்ரி அலெக்சன்டர் விக்ஹம் (Henry Alexander Wickham) எனும் ஆய்வுப் பயணி ரப்பர் விதைகளைப் பெற, அமேசானுக்கான நுழைவுத் துறைமுகமான பாராவில் உள்ள பிரிட்டிஷ் தூதரிடம் உதவி கேட்டார். கியூ அரச தாவரவியல் தோட்டத்திற்கு ரப்பர் விதைகள் வந்து சேர்ந்தது. அதில், பனிரெண்டு ரப்பர் விதைகள் முளைத்து உடனே இறந்தன. 1876ல் விக்ஹம் பிரசிலில் இருந்து 70,000 ரப்பர் விதைகளைக் கியூ தாவரவியல் தோட்டத்திற்குக் கப்பலேற்றினார். எழுபதாயிரம் விதைகளில் துளிர்விட்ட 2397 விதைகளை இலங்கைக்கு அனுப்பினார். 1877ல் இலங்கையிலிருந்து இருபத்திரண்டு நாற்றுகள் சிங்கப்பூருக்குக் கப்பலேற்றப்பட்டது. மொத்த விதைகளும் உயிருடன் சிங்கையை அடைந்தன. சிங்கப்பூரின் தாவரவியல் தோட்டம் இருபத்திரண்டு நாற்றுகளையும் பெற்றுக் கொண்டது. இருபத்திரண்டு நாற்றுகளை சிங்கப்பூரில் பதினொன்று, கோலா கங்சாரில் ஒன்பது, சிரம்பானில் ஒன்று, மலாக்காவில் ஒன்றென நடப்பட்டது.

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் நடப்பட்ட பதினொன்று நாற்றுகளில் இரு மரங்கள் இன்னமும் இருக்கின்றன. ஒரு மரம் சுவான் ஹோ ஜப்பானிய நல்லடக்கப் பூங்காவிலும் மற்றொன்று சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவிலும் உள்ளது.

கோலா கங்சார், பேராக்

எஞ்சிய பதினோரு துளிர்விட்ட நாற்றுகளில் ஒன்பது ரப்பர் நாற்றுகளைக் கோலா கங்சாரில் நட்டனர். கோலா கங்சார் ரெசிடனான (Resident) ஹு லோ (Hugh Low) ரப்பர் நாற்றுகளைப் பராமரித்தார். மலாயாவுக்கு கொண்டு வரப்பட்ட ஒன்பது கன்றுகளில் எஞ்சிய ஒரே ஒரு கன்று வளர்ந்து பெரிய மரமாகி இன்னும் கோலாகங்சாரில் மலேசிய மக்களுக்கும் உலக மக்களுக்கும் காட்சிப் பொருளாக உள்ளது. கோலா கங்சார் கூட்டரசு நிலச் சுரங்க அலுவலகத்திற்கு முன்பாக அந்த மரம் இருக்கிறது.

சிரம்பான், நெகிரி செம்பிலான்

துளிர்விட்ட ஒரு நாற்று சிரம்பானில் நடப்பட்டது. சிரம்பானில் நட்ட முதல் மரம் ஜாலான் கெலிலிங், சிரம்பான் ஆற்றின் அருகே இருக்கிறது. 2017ல் சிரம்பான் நகராண்மைக் கழகம் (Seremban Municipal Council, SMC) இந்த மரத்தைச் சுற்றிலும் வேலியிட்டுள்ளது. நெகிரி செம்பிலானின் முதல் ரப்பர் மரமெனும் அறிவிப்பு பலகையும் நிறுவப்பட்டுள்ளது. இன்று, இந்த ரப்பர் மரம் சுற்றுப்பயணிகளைக் கவரும் அம்சமாகத் திகழ்கிறது.

மலாக்கா

சிங்கப்பூரின் தாவரவியல் தோட்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட கடைசி நாற்று மலாக்காவில் நடப்பட்டது. அந்நாற்று வளராமல் போய்விட்டது.   

தொழில் நுட்பம்

மரத்துக்கு அதிக சேதமில்லாமல் சீவும் முறையை ரிட்லி கண்டுபிடித்தார். இச்சீவும் முறை “Mad Ridley Method” என்றழைக்கப்பட்டது. இந்த மரம் சீவும் அணுகுமுறை இலங்கையில் டாக்டர் எச் டிரிமென் கண்டுபிடித்த ‘herring-bone’ முறையின் மறுசீரமைப்பாகும்.

ரப்பர் ஏற்றுமதி நாடாக மலாயாவின் வளர்ச்சி

1884ல் கூட்டமைப்பு மலாய் மாநிலங்களின் உயர் ஆணையரான (High Commissioner of the Federated Malay States) ஃப்ரங் ஸ்விடன்ஹம் Frank Swettenham நானூறு ரப்பர் விதைகளைக் கோலா கங்சாரில் நடவு செய்தார். 1888ல் [ஹென்ரி நிக்கோலஸ் ரிட்லி] சிங்கப்பூரின் தாவரவியல் தோட்டத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார். ரிட்லி ச்தெரெட்ஸ் வனத் துறையின் (Straits Forest Department) மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டார். இவ்விரு பதவிகளுடன் ரிட்லி மலாயா-சிங்கப்பூர் ரப்பர் வளர்ச்சிக்கான நீண்ட காலத் திட்டங்களை வெளியிட்டார். அதில் ரப்பர் மரம் சீவும் முறையும், ரிட்லியின் 1897ல் வெளியிட்ட ரப்பர் ஆய்வுகளும் அடங்கும். ரிட்லியின் பங்களிப்பு இருபதாம் நூற்றாண்டில் மலாயா ஏற்றுமதி சார்ந்த நாடாக பொருளாதார வலுப்பெற காரணமாக இருந்தது.

அமெரிக்க ஆட்டோமொபைல் தொழில்துறையின் திடீர் வளர்ச்சி மற்றும் ரப்பர் டயர்களுக்கான உலகளாவிய தேவையால், ரப்பர் தோட்டங்கள் மலேசிய தீபகற்பத்தில் பெரிதளவில் நடப்பட்டன. அதில் பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், ஜொகூர் மாநிலங்கள் அடங்கும்.

1895 ஆம் ஆண்டில், டான் சாய் யான் மலாக்காவில் உள்ள புக்கிட் லிண்டாங்கில் உள்ள தனது தோட்டத்தில் 43 ஏக்கர் ரப்பர் பயிரிட்டார், மேலும் கிண்டர்ஸ்லீஸ் சிலாங்கூரில் மேலும் ஐந்து ஏக்கரில் பயிரிட்டார். இவை மலேசியாவின் முதல் வணிக ரப்பர் தோட்டங்கள். காப்பி சந்தை சரிந்ததால், அதிகமான தோட்டக்காரர்கள் ரப்பர் பக்கம் திரும்பினர். ஆரம்பத்தில் காப்பி போன்ற பணப்பயிர்களுடன் ரப்பர் பயிரிடப்பட்டது. 1898 தொடங்கி ஸ்டீபன்ஸ், பேராக்கில், வணிக நோக்கத்தைக் கொண்ட சீரான ரப்பர் தோட்டங்களை/ பயிரிட்டார்.  

1905 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிலப் பயன்பாடு குறித்த நம்பகமான புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதற்கான வழிமுறைகள் எதுவும் இல்லை. இருப்பினும், தொழில் வளர்ச்சியின் வேகத்தை இன்று மலேசியாவில் உள்ள மொத்த ரப்பர் ஏக்கரின் மதிப்பீட்டின் புள்ளிவிவரங்களிலிருந்து பெறலாம்:

  • 1898: 2000 ஏக்கர்,
  • 1900: 6000 ஏக்கர்,
  • 1905: 46,000 ஏக்கர்,
  • 1910: 540,000 ஏக்கர்
  • 1920: 2,180,000 ஏக்கர்.

1930ல் மலாயா உலகத்தின் மிகப்பெரிய ரப்பர் ஏற்றுமதி செய்யும் நாடானது. மலாயாவில் ஜப்பானியர் ஆட்சியைத் தவிர்த்து 1980 வரை ரப்பரின் விலை முப்பது சதவிகிதத்திற்குக் கீழிறங்கவில்லை. (பட்டியல் முறையில் இடுக)

மலேசியாவில் ரப்பர் தொழில் வீழ்ச்சி

1960லிருந்து 1970 வரை மலேசியா உலகத்தின் முதன்மையான ரப்பர் ஏற்றுமதி செய்யும் முதன்மை நாடாக இருந்தது. அதற்குப் பின், மலேசியா ரப்பர் ஏற்றுமதியில் நான்காம் ஐந்தாம் இடங்களில் உள்ளது. இதனால் பெரும் தோட்ட நிறுவனங்கள் செம்பனைத் தோட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ளதைக் கூறலாம். செம்பனை, ரப்பர் ஏற்றுமதியை விட அதிக லாபமும், குறைந்த உழைப்பும் கோரும் தொழிலாகும். இப்போது ரப்பர் தோட்டங்கள் உள்ளூரில் கையுறை செய்வதற்கும் பிற தேவைகளுக்கும் தொடர்ந்து பயிரிடப்பட்டு வருகிறது. மலேசியாவில் முதலாவதாக நட்ட மரங்கள் நூறு வருடங்களைக் கடந்து வரலாற்று/ சின்னங்களாக ஆகியுள்ளன.  

உசாத்துணை

[Development of the rubber industry in Malaysia]

Economic History of Malaya (EHM), Asia-Europe Institute of Universiti Malaya

மலேசியாவின் முதல் ரப்பர் மரம் - பயணப் பகிர்வு

சிராம்பானின் முதல் ரப்பர் மரம்

மலாயாவில் முதல் ரப்பர் மரம் – வயது 140 மலாக்கா முத்துகிருஷ்ணன் -

HENRY WICKHAM

Oldest Rubber Tree of Malaya