under review

மலாக்கா செட்டிகள்

From Tamil Wiki
Revision as of 03:08, 18 November 2022 by Navin Malaysia (talk | contribs) (Created page with "thumb மலாக்கா செட்டிகள் என்போர் பதிமூன்றாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டிலிருந்து மலாக்கா துறைமுகத்துக்கு புலம்பெயர்ந்த தமிழ் வணிகர்களின் சந்ததியினராவர்.இவர்கள்  கால...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Malacca Chetties 2.jpg

மலாக்கா செட்டிகள் என்போர் பதிமூன்றாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டிலிருந்து மலாக்கா துறைமுகத்துக்கு புலம்பெயர்ந்த தமிழ் வணிகர்களின் சந்ததியினராவர்.இவர்கள்  காலவோட்டத்தில் மலாக்கா மக்களின் மொழியையும் பண்பாட்டையும் ஏற்றுக் கொண்டு தங்கள் அடையாளத்தை மாற்றிக் கொண்டனர். பல்வேறு சாதி வணிகர்களின் வாரிசுகள் அவ்வாறு தங்கள் அடையாளத்தை மாற்றிக் கொண்டிருந்தாலும் உள்ளூர் மக்கள் அவர்களை ‘மலாக்கா செட்டிகள்’ என்றே  அடையாளப்படுத்துகின்றனர்.  மலாக்கா செட்டிகள் தமிழ் மொழியையும் பண்பாடுகளையும் மாற்றிக் கொண்டாலும் தங்கள் மூதாதையர் பின்பற்றிய சைவ மதத்தையே தொடர்ந்து பின்பற்றுகின்றனர்.

வரலாற்று பின்னணி

மலாக்கா,  13 - ஆம் நூற்றாண்டில்,  சுல்தான் பரம்பரையால் ஆளப்பட்ட தருணத்தில் உலகின் பல நாடுகளில் இருந்தும் கடலோடிகள், வணிகம் செய்ய மலாக்காவுக்கு வந்தனர். தென் தமிழகத்தின் கடற்கரை பகுதியான பண்ணை என்ற ஊரிலிருந்து வியாபாரம் செய்ய பாய்மரக் கப்பலில் மலாயாவில்  உள்ள மலாக்கா கடற்கரை மாநிலத்துக்கு வந்த வணிகர்கள் குழு அவற்றில் முக்கியமானது. பெருவாரியாக அவர்கள் செட்டியார் சமூகத்தவர்களாக இருந்தனர்.  தமிழை தாய்மொழியாக கொண்ட அவ்வணிகர்கள், மலாக்காவில் பெரும் செல்வந்தர்களாகவும் அரண்மனையில் மதிப்பான நிலையிலும் வாழ்ந்தனர். பரமேஸ்வரா மலாக்காவின் முதல் சுல்தானாக இருந்தபோது அவ்வணிகர்களில் சிலரை அமைச்சர்களாக நியமித்துக் கொண்டார்.

வணிகம் செய்ய வந்த ஆண்கள் கடற் கொந்தளிப்பாலும் பல்வேறு பயண இடைஞ்சல்களாலும் தமிழ்நாட்டுக்கு திரும்ப முடியாத சூழலில் இங்கே இருந்த மலாய்க்காரப் பெண்களை திருமணம் செய்து கொண்டு வாழ ஆரம்பித்தனர். மதிநுட்பம், உழைப்பு, செல்வம் ஆகிய மூன்றும் இருந்தமையால் உள்ளூர் பெண்கள் துணிந்து இவர்களைத் தங்கள் வாழ்க்கைத் துணைகளாக ஏற்றுக் கொண்டனர். ஆனால் கடல் வணிகர்களான ஆண்கள்  மலாக்காவில் அமைந்த  குடும்பத்தை பிரிந்து மீண்டும் பல இடங்களுக்கு வணிகம் செய்யச் சென்றனர். பலர் தங்கள் பூர்வீக ஊருக்கே மீண்டும் சென்று சேர்ந்தனர்.  தாயுடனும் அவளின் குடும்பத்தாருடனும் வளர்ந்த குழந்தைகள் தாயின் மொழியையும் பண்பாடுகளையும் பின்பற்றி வாழத்தொடங்கினர். இவர்களின் வழித்தோன்றல்கள்,  தோற்றத்தாலும் பேச்சு மொழி,  உடை போன்ற அடையாளங்களாலும் தனித்து தெரிந்தனர்.  

இந்து மதத்தை தொடர்ந்து பின்பற்றிவந்த இவர்கள் மலாக்கா செட்டிகள் என்றும் pranakkan India என்றும் அழைக்கப்பட்டனர். தமிழ் பெயர்களோடும் இந்துமத பண்டிகைகளையும் வழிபாடுகளையும் தொடர்ந்து பின்பற்றும் இவர்கள் தங்கள் தாய்மொழியாக மலாய்மொழியையே ஏற்றுக் கொண்டுள்ளனர்.  தேவாரத் திருவாசகப் பதிகத்தைப் மலாய் மொழியில் எழுதி பாடும் வழக்கத்தை அவர்கள் கொண்டுள்ளனர்.

பிற்காலத்தில்  செட்டிமார், பிள்ளை, நாயக்கர், இராஜா, படையாச்சி, முதலியார், பத்தர், பண்டாரம் கலியன் என்ற பிரிவினரும்  மலாக்கா செட்டி இனத்தோடான திருமண பந்தத்தால் கலந்து மலாக்கா செட்டிகள் ஆனார்கள்.

இந்தியா பிரிட்டிசார் காலனித்துவ ஆட்சியின் போது, அந்தமான் தீவில் கைதிகளாக சிறைபட்டிருந்த இந்தியர்களை மலாக்காவுக்குக் கொண்டுவந்து மலாக்கா செட்டிகளின் இடங்களில் பிரிட்டிஷார் குடியமர்த்தினர் என்றும் பின்னர் அவர்களும் தங்களை மலாக்கா செட்டிகளாக்கிக் கொண்டனர் என்ற வரலாற்று தகவலும் உண்டு.

வாழிடம்

மலாக்கா செட்டிகள், மலாக்காவில் காஜா பெராங் என்ற ஊரில் அதிகம் வாழ்ந்தனர். ‘கஜா ‘என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு யானை என்ற பொருள் உண்டு. ‘புரம்’ என்ற சம்ஸ்கிரதச் சொல்லே காலப்போக்கில் பெராங் என்று மருவியிருக்கிறது.

போர்த்துக்கீசியர்கள் மலாக்காவைக் கைப்பற்றித் தங்கள் வசமாக்கிக் கொண்டபோது (1511-1641) அவர்கள் வரைந்த மலாக்கா வரைபடத்தில், மலாக்கா கடற்கரையோரம் அமைந்த 'கம்போங் கிலீங்' என்ற கிராமத்தையும் குறிப்பிட்டு வரைந்து காட்டியுள்ளனர். கிலீங் என்ற சொல் இந்தியர்களை குறிக்கும் கொச்சையான சொல் என்பதால் இந்த ஊர் மலாக்கா செட்டிகள் வாழ்ந்த இடத்தையே குறிப்பிடுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.  அதோடு, அங்கு வாழ்ந்த செட்டி சமூகத்துக்குத் தங்களுக்கே உரிய தனித்த கட்டமைப்பும் ( செயலவைக் குழுமம்) அதற்குரிய பொறுப்பாளர்களும் தங்கள் சமூக நலனை மலாக்கா மன்னர்களிடம் எடுத்துக் கூறி உறவைப் பேணும் நடைமுறை இருந்துள்ளது என்ற தகவலும் உண்டு. போர்த்துக்கீசியரின் தலைமைக் கடற்படைத் தளபதி அல்போன்சோ டி அல்புகர்க் எழுதிய குறிப்பில் இச்செய்திகள் காணக் கிடைக்கிறது. கவர்னர் போர்ட் அறிக்கையின்படி, 1678 ஆம் ஆண்டில் 761 மலாக்கா செட்டிகள் கம்போங் கிலீங்கில் வசித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பண்டைய மலாக்காவின் மலாக்கா செட்டிகள்

தொடக்க கால மலாக்கா சுல்தான்களுக்கு ஆதரவாக இருந்த மலாக்கா செட்டிகள் பின்னர் அரண்மனையில் தமிழ் முஸ்லீம்களின் அதிகாரம் உயர்ந்தபோது தங்கள் அரசியல் ஈடுபாட்டை குறைத்துக் கொண்டனர்.  

14 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீஸியர்கள், மலாக்கா மீது போர்த்தொடுத்தகாலத்தில் மலாக்கா செட்டிகள் போர்த்துகீசியரை ஆதரித்தனர். அதற்கு நன்றிக்கடனாக போர்த்துக்கீசியர்கள் மலாக்கா செட்டிகளுக்கு அரசின் உயர் பதவிகளை வழங்கியதாகவும் வரலாறு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மலாக்கா செட்டிகளின் வணிகம் சீராக நடைபெறவும் போர்த்துக்கீசியர்கள் ஆதரவாக இருந்தனர்.

பல்வேறு காலக்கட்டங்களில் போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள். பிரிட்டிசார், ஜப்பானியர் என மாறி மாறி மலாக்காவை ஆக்கிரமித்து ஆட்சி செய்திருந்தாலும் மலாக்கா செட்டிகள் தங்கள் தனித்த அடையாளத்தையும் கலவையான பண்பாட்டையும் தக்கவைத்துக்கொண்டுள்ளனர்.  

தொழில்

மலாக்கா மாநிலம் பரமேஸ்வரா என்ற முதல் சுல்தானால் நிறுவப்பட்டபோது கடலோடிகளாக வந்தவர்கள் தாங்கள் கொண்டுவந்த பொருட்களை வணிகம் செய்யத் துவங்கினர். பரமேஸ்வரா காலத்திலேயே மலாக்கா செட்டிகள் அரசின் பதவிகளையும் வகித்திருக்கிறார்கள். மலாக்கா சுல்தான் அரசால் மலாக்கா செட்டிகள் தலைமை அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்புத் தளபதிகள், படைத்தளபதிகளாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மலாக்கா டச்சுக்காரர்களுக்குக் கைமாறியபோது மலாக்கா செட்டிகள் வணிகம் தொய்வு நிலையை அடைத்தது. அதனால் அவர்கள் விவசாயம் செய்தும் பிழைத்தனர்.

மொழி / பண்பாடு

போர்த்துகீசியர்கள் மலாக்காவை ஆண்ட காலக்கட்டத்தில் (1511-1641} மலாக்கா செட்டிகள் மெல்ல மெல்ல உள்ளூர் மக்களின்  பண்பாட்டுடன் இயைந்து வாழவேண்டியதாயிற்று. தமிழ் நாட்டு தொடர்பு முற்றிலும் அறுந்த நிலையில், இங்கு வளர்ந்த இளம் தலைமுறை அவர்களின் தந்தையரின் தமிழ் மொழியை மெல்ல மறந்தனர். தங்கள் தாயாரின் தாய்மொழியான மலாய் மொழியே அவர்களின் தாய்மொழியாகவும் ஆனது.  ஆனாலும் மலாக்கா செட்டிகளின் பூர்வீகமான தெய்வ வழிபாட்டு முறைகளையும், செட்டிகளின் பண்பாட்டையும் இன்றைக்கும் பேணி வருகின்றனர். மலாக்கா செட்டிகள் முன்னால் தலைமுறையினர் பொர்த்துக்கீசிய மற்றும்  டச்சு ஆட்சிகாலத்தில் வாழ்ந்தமையால் அந்த இரு இன பண்பாடுகள் சிலவும் மலாக்கா செட்டிகளின் பூர்வீகமான பண்பாடோடு கலந்து வந்திருக்கிறது.

மலாக்காவின் காலனித்துவ ஆட்சியின் போது மலாக்கா செட்டிகள் தங்கள் பூர்வீக அடையாளத்தை முற்றவே இழந்துவிட்டனர். உள்ளூர் மக்களான மலாய்க்காரப் பண்பாடும், சீனாவிலிருந்து வணிக நோக்கத்தோடு வந்து அங்கேயே வாழும் சீனப் பண்பாடும், மலாக்கா செட்டிகளின் பூர்வீகப் பண்பாடும் கலந்த ஒரு புதிய பண்பாட்டோடு வாழவேண்டிய சூழ்நிலை உண்டானது.

சீனர்களின் களிமண் பீங்கான் போன்றவற்றால் செய்யப்படும் கைவினைக் கலையை மலாக்கா செட்டிகளும் பின்பற்றி கலைப்பொருளாக்கினர். உள்ளூர் மலாய்ப்பெண்கள் அணியும் சாரோங், சொங்கோக் போன்ற ஆடைகளையும் அணியத்துவங்கினர்,

மலாக்கா செட்டிகள் புலம்பெய்ர்ந்தபோது கொண்டுவந்த பழம்பொருட்கள், அவர்களின் வரலாறு எழுதப்பட்ட நூல்கள்,மலாக்காவின் செட்டி  கண்காட்சி மையத்தில் இன்றைக்கும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மலாய்க்காரகளின் பாரம்பர்ய ஆடையாக கருதப்படும் கைன் பெலெக்காட்  மலாக்கா செட்டிகளால் அறிமுகப்படுத்தப்பட்டது.

சமயம்

தமிழ்நாட்டிலிருந்து மலாக்கா செட்டிகள் புலம்பெய்ர்ந்தபோது இந்து சமய நம்பிக்கையே பின்பற்றி வந்தனர். வீட்டு வாசலில் இந்துப் பண்பாடான மாவிலைகள் கட்டுதல், வீட்டு வாசலில் அவர்கள் வணக்கும் கடவுள் சிலைகள் அல்லது படங்கள் மாட்டி வைத்தல், பொங்கல், தைப்பூசம். நவராத்திரி, இந்துப் புத்தாண்டு போன்ற பண்பாட்டு விழாக்களை கொண்டாடுதல் போன்ற மூத்தோர் பழக்கங்களை இன்றும் பின்பற்றிவருகின்றனர். .

ஸ்ரீ பொய்யாத வினாயக மூர்த்தி கோயில்

மலாக்கா செட்டிகளின் பாரம்பரிய கோயிலாக ஸ்ரீ  பொய்யாத வினாயக மூர்த்தி கோயில் காஜா பேராங்கில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பல்லவர் காலத்து சிற்பக்கலையைப் பின்பற்றிய சிற்பங்கள் காணக்கிடைக்கின்றன.  போர்த்துக்கீசியர்களிடமிருந்து டச்சுக்காரர்களின் கையில்  மலாக்கா மாறியபோது(1641-1825) மலாக்கா செட்டிகள் அதிகம் வசித்து வந்த கம்போங் கிலீங் என்ற கிராமத்தையும் டச்சுக்காரர்கள் பறிமுதல் செய்து அதற்கு டச்சுக் கிராமம் என்று பெயர் சூட்டிக் கொண்டாலும் மலாக்கா செட்டிகளுக்கும் அங்கு வசிக்க அனுமதித்தனர். டச்சுக் கவர்னர் போர்ட் (Gabenor Bort) இவர்களுக்கு ஒரு காணி நிலத்தையும் நிலப் பட்டாவையும் கொடுத்து அங்குச் ஸ்ரீ பொய்யாத விநாயகர் மூர்த்தி கோயிலையும் எழுப்ப வகை செய்தார். இக்கோயிலில் தேவாரத் திருவாசகப் பாடல்களை மலாய் மொழியில் எழுதி வாசிக்கின்றனர். அதேப்போல் கோயிலின் ஆகம கட்டமைப்பிலும் உள்ளூர் பண்பாட்டுக்கேற்ப சில மாற்றங்கள் நிகழத்தொடங்கின

1770 தொடங்கி மலாக்கா செட்டிகள் நிறுவிய கோயில்கள்

  1. ஸ்ரீஅம்மன் ஆலயம் கஜாபெராங் 1770

2. தர்மராஜா ஆலயம் 1770

3. ஸ்ரீ பொய்யாத வினாயகர் மூர்த்தி ஆலயம், ஜாலான் துக்காங் இமாஸ் 1781

4. ஸ்ரீ காளியம்மன் ஆலயம், பாச்சாங் 1804

5. ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் கஜாபெராங் 1822

6 ஸ்ரீ கைலாசநாதர் சிவன் ஆலயம் கஜாபெராங் 1887

7. ஸ்ரீ அங்கம்மாள் பரமேஸ்வரி ஆலயம் 1888

8. லிங்காதர்யம்மன் ஆலயம். கஜாபெராங்

9.  கட்டையம்மன் ஆலயம்

10.  ஸ்ரீ அய்யனார் ஆலயம், பாச்சாங்

11. ஸ்ரீ காத்தாயி அம்மன் ஆலயம் , கஜா பெராங்

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.