under review

மறைஞான சம்பந்தர்

From Tamil Wiki
Revision as of 12:11, 30 January 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Inserted READ ENGLISH template link to English page)

To read the article in English: Maraignana Sambandhar. ‎

மறைஞான சம்பந்தர்

மறைஞான சம்பந்தர் (கண்கட்டி பண்டாரம் )(பொ.யு. 16-ஆம் நூற்றாண்டு) திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர். சந்தானக் குரவர் மரபில் அருணந்தி சிவாச்சாரியாரின் சீடராக இருந்தார். 'கமலாலய புராணம்' முக்கியமான நூல். சைவ சித்தாந்த தத்துவ உண்மைகளை எளிமையான வடிவில் போதித்தது அவரது குறிப்பிடத்தக்க பணி.

வாழ்க்கைக் குறிப்பு

மறைஞான சம்பந்தர் பொ.யு.16-ஆம் நூற்றாண்டில் வெள்ளாற்றின் கரையோரம் உள்ள பெண்ணாகரத்தில் பராசர கோத்திரத்தில் சாமவேத மரபில் உத்தர நட்சத்திரத்தில் ஆவணி மாதம் பிறந்தார். அருணந்தி சிவாச்சாரியாரிடம் சிவதீட்சை பெற்றார். சிதம்பரத்தில் குகை மடத்தில் வாழ்ந்தபோது இவர் தன் புலன்களை அடக்குவதற்கு உதவியாகத் தன் கண்களைக் கட்டிக்கொண்டு வாழ்ந்ததால் 'கண்கட்டி பண்டாரம்’ என்றழைக்கப்பட்டார். இவருடைய மாணவர்கள் எழுதிய 'பிராயச்சித்த சமுச்சயம்' என்ற நூலின் வழி இவரின் வேறு பெயர்களை அறியலாம். இவர் அருணந்தி சிவாசாரியாரிடம் உபதேசம் பெற்றார். தில்லைச் சிதம்பரத்திற்கு வடகிழக்கிலுள்ள திருக்களாஞ்சேரியில் வாழ்ந்து வந்தார். இவரிடம் சீடராய் இருந்தவர்களுள் முக்கியமானவர் உமாபதி சிவம் எனப்பட்ட சந்தானகுரவரில் நான்காமவர் . இன்னொருவர் மச்சுச் செட்டியார் என்னும் அருள் நமச்சிவாயர். மறைஞான சம்பந்தர் திருக்களாஞ்சேரி அங்கேயே இருந்து முக்தியடைந்ததாய்த் தெரிய வருகிறது. திருக்களாஞ்சேரி தற்போது சிங்காரத் தோப்பு என்ற பெயரில் வழங்குகிறது. இங்கே மறைஞானசம்பந்தரின் மடமும் திருக்களாஞ்சேரி மஹாதேவர் கோயிலும் உள்ளன. மடத்திலேயே மறைஞானசம்பந்தரின் சமாதி உள்ளது. மடமும், சமாதியும் திருவாவடுதுறை ஆதீனத்தின் பொறுப்பில் உள்ளன.

வேறு பெயர்கள்
  • தேசிகர்
  • காளத்தி
  • சிதம்பரம்
  • குகைமடம்
  • கண்கட்டிமடம்

தொன்மம்

உமாபதி சிவம் மறைஞான சம்பந்தரிடம் சீடராகச் சேர்ந்த சம்பவம் பற்றிய ஓர் தொன்மம் நிலவுகிறது. அக்காலத்தில் தில்லை மூவாயிரவரில் முக்கியமாய்த் தலைமைப் பொறுப்பில் இருக்கும் தீக்ஷிதரை மேள, தாளத்தோடு பல்லக்கில் தீவட்டி மரியாதையோடு அனுப்பி வைக்கும் பழக்கம் இருந்து வந்தது. பகல் நேரமானாலும் இந்த தீவட்டி மரியாதை உண்டு. ஒருநாள் உமாபதி சிவம் அப்படியே கோயிலில் வழிபாடுகளை முடித்துக்கொண்டு பல்லக்கில் அமர்ந்து தீவட்டி மரியாதை சகிதம், மேளதாளத்தோடு சென்று கொண்டிருந்தார். அங்கே ஓர் வீட்டில் திண்ணையில் அமர்ந்திருந்த மறைஞான சம்பந்தர் இதைக் கண்டதும், "பட்ட மரத்தில் பகல் குருடு போகுது பார்!" என்று உமாபதி சிவத்தின் காதில் விழும்படி சத்தமாய்ச் சொல்லிச் சிரித்தார். அதைக் கேட்ட உமாபதி சிவத்திற்கு அதன் அர்த்தம் விளங்கியது. பல்லக்கிலிருந்து அப்படியே குதித்து மறைஞான சம்பந்தரின் கால்களில் விழுந்து வணங்கித் தன்னை சீடனாக ஏற்கும்படி கேட்டுக்கொண்டார். மறைஞானசம்பந்தர் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அங்கிருந்து எழுந்து நடக்கத் தொடங்கினார். உமாபதி சிவம் அவரைப் பின்பற்றினார். சற்றுத் தூரம் சென்ற மறைஞான சம்பந்தர் ஒரு வீட்டின் வாசலில் நிற்க அங்கே அவர் கைகளில் கூழை வார்த்தனர். அந்தக் கூழை அப்படியே கைகளில் ஏந்திக் குடித்தார் மறைஞான சம்பந்தர். அப்போது கூழ் அவர் கைகளின் வழியே வழிந்தது. உமாபதி சிவம் சிந்திய கூழை குருப் பிரசாதம் எனக் கூறிவிட்டுக் கைகளில் வாங்கிக் குடித்தார். அன்று முதல் அவரின் சீடரானார்.

இலக்கிய வாழ்க்கை

தனக்கு முன்னர் வாழ்ந்த மெய்கண்டதேவர், அருணந்தி சிவாச்சாரியார் ஆகியோர் அருளிய சித்தாந்த நூல்களாகிய சிவஞானபோதம், சிவஞான சித்தியார், இருபா இருபஃது ஆகிய நூல்களைக் கற்று அவை கூறும் சித்தாந்த உண்மைகளை தம் மாணவர்களுக்குக் கற்பித்தார். 1546-ல் இயற்றிய 'கமலாலய புராணம்' முக்கியமான நூல். 'புவனகோசம்' எனும் நூல் 128 விருத்தப்பாக்களைக் கொண்டது. தஞ்சை சரஸ்வதி மகால் நூல் நிலையத்தில் இதன் ஏடு உள்ளது. 'சிவதருமோத்திரம்' நூலை வடமொழியிலிருந்து மொழிபெயர்த்தார். 'சிவதர்மம்' என்னும் ஆகமத்தின் உத்தரபாகத்தைத் தமிழில் மொழிபெயர்த்ததாகச் சொல்லப்படுகிறது. சதமணிக்கோவை என்னும் நூல் ஒன்றை மறைஞான சம்பந்தர் செய்திருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.

நூல்கள் பட்டியல்

சாத்திரப் பெருநூல்கள்
  • சிவதருமோத்தரம்
  • சமய நெறி
  • பதிபசுபாசப் பனுவல்
  • சங்கற்ப நிராகரணம்
  • உருத்திராக்க விசிட்டம்
  • முத்திநிலை
  • பரமோபதேசம்
  • வருத்தமற உய்யும் வழி
  • ஐக்கியவியல்
சிறு நூல்கள்
  • மகா சிவராத்திரி கற்பம்
  • மாத சிவராத்திரி கற்பம்
  • சோமவாரச் சிவராத்திரி கற்பம்
  • சோமவாரக் கற்பம்
  • திருக்கோயிற் குற்றம்
புராணம்
  • அருணகிரிப் புராணம்
கிடைக்காத நூல்கள்
  • பரமத திமிரபானு
  • இறைவனூறுபயன்
வடமொழி நூல்
  • ஆன்மாத்த பூஜா பத்ததி

உசாத்துணை


✅Finalised Page