மயிலன் ஜி. சின்னப்பன்

From Tamil Wiki
மயிலன் ஜி சின்னப்பன்

மயிலன் ஜி சின்னப்பன் (மயிலன் சின்னப்பன்) (12.ஜூன் 1986) தமிழில் சிறுகதைகள் எழுதிவரும் எழுத்தாளர். மருத்துவராகப் பணிபுரிகிறார். தமிழ் வரலாற்றில் இருந்தும் மருத்துவத்துறையில் இருந்தும் புதிய கருக்களை எடுத்து சிறுகதைகள் எழுதிவருபவர்

பிறப்பு கல்வி

மயிலன் சின்னப்பன் அன்று தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா  சூரப்பள்ளத்தில், ஜி‌. சின்னப்பன் - பிரேமா இணையருக்கு மகனாக பிறந்தார். மயிலாடுதுறை ராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்றார். இளநிலை மருத்துவ படிப்பை சென்னை எம்.எம்.சியிலும் முதுநிலை படிப்பை தஞ்சை மருத்துவக் கல்லூரியிலும் பயின்றார்.

தனிவாழ்க்கை

மயிலன் சின்னப்பன் 28/10/2012 அன்று அனுஷ்யாவை மணந்தார். அவர்களுக்கு ரிஷி மித்திரன், அதிரூபன் என இரு குழந்தைகள் உள்ளனர். திருச்சியில் தொழில்முறை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

இலக்கிய பங்களிப்பு

'பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்' எனும் நாவல் வழியாக அறிமுகமான மயிலன் தொடர்ந்து சிறுகதைகளை எழுதி வருகிறார். அசோகமித்திரனையும்  ஆதவனையும் தனது இலக்கிய ஆதர்சமாக கருதுகிறார் மயிலன். 2017 எழுதத்தொடங்கி 2019ல்  பிரசுரமான 'பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்'  நாவல் நல்ல வரவேற்பை பெற்றது. மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவர்களின் பின்புலத்தில் அவர் எழுதிய 'ஆகுதி' 'ஓர் அயல் சமரங்கம்' ஆகிய சிறுகதைகள் பரவலாக கவனிக்கப்பட்டன.

விருதுகள்

  • சிறந்த அறிமுக எழுத்தாளர் 2019-20 - வாசகசாலை
  • யாவரும் பதிப்பகம் ஒருங்கிணைத்த புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டியில், 'முப்போகம்' குறுநாவல் பரிசு பெற்றது.

நூல்கள்:

நாவல்
  • பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் ( நாவல்)-2019
சிறுகதைத்தொகுதி
  • நூறு ரூபிள்கள் (சிறுகதைத் தொகுப்பு) -2020
  • அநாமதேயக் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)-2021

உசாத்துணை

mayilanchinnappan blogspot