under review

மயிலன் ஜி. சின்னப்பன்

From Tamil Wiki
Revision as of 14:48, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)
மயிலன் ஜி சின்னப்பன்

மயிலன் ஜி சின்னப்பன் (மயிலன் சின்னப்பன்) (ஜூன் 12, 1986) தமிழில் சிறுகதைகள் எழுதிவரும் எழுத்தாளர். மருத்துவராகப் பணிபுரிகிறார். தமிழ் வரலாற்றில் இருந்தும் மருத்துவத்துறையில் இருந்தும் உளவியல் கோணத்தில் புதிய கருக்களை எடுத்து சிறுகதைகள் எழுதிவருபவர்.

பிறப்பு, கல்வி

மயிலன் சின்னப்பன் ஜூன் 12, 1986 அன்று தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகாசூரப்பள்ளத்தில், ஜி‌. சின்னப்பன் - பிரேமா இணையருக்கு மகனாக பிறந்தார். மயிலாடுதுறை ராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்றார். இளநிலை மருத்துவ படிப்பை சென்னை எம்.எம்.சியிலும் முதுநிலை படிப்பை தஞ்சை மருத்துவக் கல்லூரியிலும் பயின்றார்.

தனிவாழ்க்கை

மயிலன் சின்னப்பன் அக்டோபர் 28, 2012 அன்று அனுஷ்யாவை மணந்தார். அவர்களுக்கு ரிஷி மித்திரன், அதிரூபன் என இரு குழந்தைகள் உள்ளனர். திருச்சியில் தொழில்முறை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

அசோகமித்திரனையும் ஆதவனையும் தனது இலக்கிய ஆதர்சமாக கருதுகிறார் மயிலன். 2017-ல் எழுதத்தொடங்கி 2019-ல் பிரசுரமான 'பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்'எனும் நாவல் அவரது முதல் படைப்பு. மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவர்களின் பின்புலத்தில் அவர் எழுதிய 'ஆகுதி' 'ஓர் அயல் சமரங்கம்' ஆகிய சிறுகதைகள் பரவலாக கவனிக்கப்பட்டன. 2020-ஆம் ஆண்டு அவரது முதல் சிறுகதை தொகுப்பான 'நூறு ரூபிள்கள்' வெளியானது. முதுநிலை மருத்துவப் படிப்பின் போது நேர்ந்த நண்பனின் மரணத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதியதாக 'பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்' நாவல் உருவான பின்புலத்தைப் பற்றி குறிப்பிடுகிறார். 'தற்கொலையை நாம் எப்படி அணுகுகிறோம் என்ற சிறிய கேள்விக்கான மிக நீண்ட பதிலாக அந்த நாவல் மாறியது' என அந்நாவலின் கருப்பொருள் பற்றி சொல்கிறார்[1].

இலக்கிய இடம்

மயிலன் அகஅடுக்குகளை புனைவுகளின் ஊடாக எழுத முற்படுகிறார். அவரது நேர்காணலில் 'அகம்தான் இங்கே அவ்வளவு ஆட்டங்களுக்குமான ஆதாரம். மந்தை மனநிலையைக் கடந்து பார்த்தால், ஒரே சம்பவத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் உள்வாங்கியிருப்பார்கள்.' என குறிப்பிடுகிறார். எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் மயிலனின் சிறுகதைகள் குறித்து எழுதிய கட்டுரையில்[2] 'ஓராயிரம் கால்கொண்டு நூறாயிரம் திசையில் தறிகெட்டு ஓடுவது அகம். கால்தடங்களைத் தொடர்ந்து அது சென்றடைந்த இடத்தை கண்டடையவே கலைகளும் நவீன அறிவியலும் தத்துவங்களும் தொடர்ந்து முயல்கின்றன. உளம் கொள்ளும் திரிபுகளையும் பாவனைகளையும் பகுத்துணர முயலும் மயிலனின் இக்கதைகளும் அந்த பெருமுயற்சியின் பகுதியாகவே அமைகின்றன. மயிலனின் கதைகளில் குறிப்பிடத்தக்க அம்சம் கதைக் களத்துக்கேற்ப அவர் தேர்ந்துகொள்ளும் மொழி. 'வீச்சம்’,' என குறிப்பிடுகிறார்.

விருதுகள்

  • சிறந்த அறிமுக எழுத்தாளர் - 2019-2020, வாசகசாலை
  • யாவரும் பதிப்பகம் ஒருங்கிணைத்த புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டியில், 'முப்போகம்' குறுநாவல் பரிசு பெற்றது.

நூல்கள்

நாவல்
  • பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் - 2019
சிறுகதைத்தொகுதி
  • நூறு ரூபிள்கள் - 2020
  • அநாமதேயக் கதைகள் - 2021

உசாத்துணை

குறிப்புகள்


✅Finalised Page