second review completed

மனசை ப. கீரன்

From Tamil Wiki
Revision as of 05:44, 24 February 2024 by Tamizhkalai (talk | contribs)
மனசை ப. கீரன்

மனசை ப. கீரன் (ப. கீரன்; பஞ்சாட்சரம் கீரன்) (ஏப்ரல் 24, 1938 – மே 28, 2009) கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர். பொது வாசிப்புக்குரிய சிறுகதை, கட்டுரை, நாடகங்களை எழுதினார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். சென்னை வானொலியில் கல்வி நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணிபுரிந்தார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.

பிறப்பு, கல்வி

ப. கீரன் என்னும் மனசை ப. கீரன், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மன்சுராபாத் என்ற ஊரில், பஞ்சாட்சரம் – சாரதாம்பாள் இணையருக்குப் பிறந்தார். பள்ளிக்கல்வியை மன்சுராபாத்தில் கற்றார். சென்னை கிறித்தவக் கல்லூரியில் இளங்கலை தமிழ் பயின்றார். முதல் நிலையில் தேர்ச்சிப் பெற்று சிறந்த மாணவருக்கான சேதுபதி தங்கப்பதக்கம் பெற்றார். புலவர் ந. ரா. முருகவேள், புலவர் நக்கீரன் போன்றோரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களை முழுமையாகக் கற்றார். கல்வியியலில் பி.டி. (Bachelor of Training - B.T) பட்டம் பெற்றார். தெலுங்கு, ஹிந்தி மொழிகளைக் கற்றார்.

தனி வாழ்க்கை

மனசை ப. கீரன், சென்னை அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்றில் ஐந்தாண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 1976-ல், சென்னை வானொலியில் கல்வி நிகழ்ச்சி அமைப்பாளராகப் பணியில் சேர்ந்தார். உதவி இயக்குநராக ஓய்வு பெற்றார். மணமானவர். மனைவி: கமலவேணி. இவர்களுக்கு இரண்டு மகள்கள்.

இலக்கிய வாழ்க்கை

மனசை ப. கீரன், கவிஞராக இலக்கிய உலகிற்குக் அறிமுகமானார். சிறார்களுக்குப் பாடல்களும் கதைகளும் எழுதினார். கல்கி, குத்தூசி போன்ற இதழ்களில் மனசை ப. கீரனின் படைப்புகள் வெளியாகின.

மனசை ப. கீரன், தமிழ்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல கவியரங்குகளில் கலந்துகொண்டு கவிதைகள் வாசித்தார். சென்னை வானொலியில் பல கவிதைகளை வழங்கினார். மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று கல்வியியல் தொடர்பான சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.

மனசை ப. கீரனின் கவிதைகளும், நாடகங்களும் நூல்களாக வெளியாகின. பல்வேறு பொதுத் தலைப்புகளில் பல கட்டுரை நூல்களை எழுதினார். மனசை ப. கீரன் 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.

நாடகம்

மனசை ப. கீரன் பல நாடகங்களை எழுதினார். இவரது நாடகங்களில் பல சென்னை வானொலி நிலையத்தில் ஒலிபரப்பாகின. ஆணிவேர், உயிர்ப்பொம்மை என்னும் நாடகங்களைத் தயாரித்து இயக்கினார். மனசை ப. கீரனின் நாடகங்கள் சில சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின.

பதிப்பு

மனசை ப. கீரன், மனசை பதிப்பகம், கமலவேணி பதிப்பகம் போன்ற பதிப்பக நிறுவனங்களைத் தொடங்கி நடத்தினார். தனது நூல்களை அப்பதிப்பகங்கள் மூலம் வெளியிட்டார்.

விருதுகள்

  • தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு
  • தமிழ் முன்னேற்றக் கழகம் வழங்கிய கவிதைக் களஞ்சியம் பட்டம்
  • பன்னாட்டு உறவு மன்றம் அளித்த செயல் செம்மல் விருது
  • தேர்க்கூட்டம் நாடக நூலுக்கு தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு (1979)
  • தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம் வழங்கிய கலைமாமணி விருது (1984)
  • கலிஃபோர்னியா உலகக் கவிஞர் மாநாட்டில் அளிக்கப்பட்ட கௌரவ டாக்டர் பட்டம் (1986)

மறைவு

மனசை ப. கீரன், மே 28, 2009 அன்று சென்னையில் காலமானார்.

மதிப்பீடு

மனசை ப. கீரன், வானொலியில், சமூக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் பல நாடகங்களை எழுதி ஒலிபரப்பினார். கல்வியியல் சார்ந்து பல நிகழ்ச்சிகளைத் தயாரித்தளித்தார். மனசை ப. கீரன், கவிதைகளை, பொது வாசிப்புக்குரிய பல படைப்புகளைத் தந்திருந்தாலும், வானொலி நாடக ஆசிரியர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.

நூல்கள்

கவிதைத் தொகுப்புகள்
  • கடை திறக்கலாம்
  • மணமாலை
  • காற்றிலே மிதந்த கவிதைகள்
  • கவிதைப் பாலம்
சிறார் நூல்கள்
  • அறிவியல் அறிஞர்கள்
  • சிறுவர் இராமாயணம்
  • செயற்கரிய செய்தார்
  • அத்தையும் அண்ணனும்
  • செல்லக் குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயர்கள்
சிறுகதைத் தொகுப்புகள்
  • பொன்னி
  • பங்காளி
  • மஞ்சள் மாளிகை
  • மருத்துவச்சி மருதாயி
நாடக நூல்கள்
  • தேர்க்கூட்டம்
  • உயிர்ப்பொம்மை
  • மனசை ப. கீரன் நாடகங்கள்
கட்டுரை நூல்கள்
  • அலைகடலில் ஆறு நாட்கள்
  • உலக நாடுகள்
  • உலகச் சந்தை
  • சில நாடுகள் சில செய்திகள்
  • நாடு போற்றும் நல்லோர்
  • நாடும் ஏடும்
  • சிறுதொழில்கள்
  • காற்றிலே கமழ்ந்தவை
  • ஆழ்வார்கள்
  • நாயன்மார்கள்
  • வழிகாட்டிகள்
  • இரண்டு இதிகாசங்கள்
  • வாழும் வழி
  • ஒன்றுபெற்றால் ஒளிமயம்
  • இராமாயணம்
  • பாரதம்
  • இராமானுசர்
  • கல்வி ஒலிபரப்பின் கதை
  • தமிழ்நாடு, புதுவையில் கல்வி ஒலிபரப்பு
  • வானொலிக் கல்வி
  • பாரத நாட்டின் பண்போவியங்கள்
  • சமயம் வளர்த்த சான்றோர்கள்
  • சமையலறை பாதுகாப்பு
  • நலவாழ்வு வழிகள்
  • நாயன்மாரும் சான்றோரும்

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.