மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

From Tamil Wiki
Revision as of 22:14, 21 February 2022 by Subhasrees (talk | contribs) (மதுரை மீனாட்சியம்மை பிள்ளைதமிழ் - முதல் வரைவு)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கடவுள், அரசன் போன்றவர்களை குழந்தையாக உருவகித்துப் பாடுவது பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகை. மதுரை மீனாட்சியம்மை பிள்ளைதமிழ் இவ்வகைமையில் எழுதப்பட்ட முதன்மையான படைப்பு. மதுரை மீனாட்சியம்மையைப் பாட்டுடைத்தலைவியாகக் கொண்டு குமரகுருபரர் என்ற புலவரால் திருமலை நாயக்கர் முன்னிலையில் மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில் பாடப்பட்டது.

ஆசிரியர்

மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழின் ஆசிரியர் குமரகுருபரர். இளமையிலேயே முருகன் அருள் பெற்றவர். இவர் பிறந்து ஐந்தாண்டுகள் ஆகியும் பேசாததால் இவருடைய பெற்றோர் திருச்செந்தூர் முருகனை வேண்டிக்கொள்ள, இவர் பேசும் திறன் பெற்றார் எனப்படுகிறது.  குமரகுருபரர் முதல் நூலாக முருகன் மீது கந்தர் கலிவெண்பா என்னும் பாடல்தொகுப்பை இயற்றினார்.

மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ் மட்டுமின்றி மீனாட்சியம்மைக் குறம், மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, மதுரைக் கலம்பகம், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், சிதம்பர மும்மணிக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, சிவகாமியம்மை இரட்டைமணிமாலை, பண்டார மும்மணிக்கோவை, காசிக் கலம்பகம், சகலகலாவல்லிமாலை ஆகிய சிற்றிலக்கியங்களையும் இயற்றியிருக்கிறார்.

இவர் இயற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேற்றத்தின் போது அன்னை மீனாட்சியே எழுந்தருளி இவருக்குப் பரிசளித்தாள் என்பது தொன்மம். இவரின் காலம் கி.பி. பதினேழாம் நூற்றாண்டு எனப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் திரு வைகுண்டம் என்ற ஊரில் பிறந்து வாழ்ந்தவர்.

தொன்மம்

குமரகுருபரர் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைதமிழ் இயற்றிய முடித்தபோது, மீனாட்சியம்மை திருமலை நாயக்க மன்னர் கனவில் தோன்றி, குமரகுருபரரை அழைத்து வந்து பிள்ளைத்தமிழை அரங்கேற்றுமாறு கூறினார். அதன்படி மீனாட்சியம்மனின் சந்நிதியில் பிள்ளைத்தமிழை அரங்கேற்ற ஏற்பாடு செய்தார். குமரகுருபரர் நாள்தோறும் ஒவ்வொரு பருவமாக விரித்துரைத்து அரங்கேற்றினார். வருகைப்பருவத்தை விரிவுரையாற்றும்போது மீனாட்சியம்மை அர்ச்சகரின் பெண்குழந்தை வடிவில் வந்து திருமலை நாயக்கர் மடியில் அமர்ந்து கதை கேட்டாள். ”தொடுக்கும் கடவுள்” என்ற பாடலுக்கு பொருளுரைத்தபோது மீண்டும் வாசித்துப் பொருள் சொல்லுமாறு கூறினாள். ”காலத்தொடு கற்பனை கடந்த” என்ற பாடலுக்கு பொருள் உரைக்கும் போது குமரகுருபரரின் கழுத்தில் முத்துமாலை ஒன்றை அணிவித்து மறைந்தாள்.

நூல் அமைப்பு

பிள்ளைத்தமிழ் வகைமையில் மிகச்சிறந்த இலக்கிய நயமும் பொருள் நலமும் கொண்ட நூல். இந்நூலின் முதலில் விநாயகர் வணக்கம் இடம் பெற்றுள்ளது. காப்புப் பருவத்தில் திருமால், சிவபெருமான், சித்திவிநாயகர், முருகன், பிரம்மன், தேவேந்திரன், திருமகள், கலைமகள், துர்க்கை, சப்த மாதர்கள், முப்பத்துமூவர் ஆகியோரிடம் பாட்டுடைத்தலைவியாகிய மீனாட்சியம்மையைக் காக்குமாறு பதினோரு பாடல்களில் குமரகுருபரர் வேண்டுகிறார். ஏனைய தால், செங்கீரை முதலிய ஒன்பது பருவங்களில் பருவத்துக்குப் பத்து பாடல்கள் வீதம் தொண்ணூறு பாடல்கள் பாடப்பட்டுள்ளன. மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழில் மொத்தம் 102 பாடல்கள் உள்ளன.

தேவி புராணங்களின் அடிப்படையிலும், கடவுள் தத்துவங்களின் அடிப்படையிலும் இந்த நூல் இயற்றப்பட்டுள்ளது.

இலக்கிய நயம்

தமிழ் குறித்த சொற்றொடர்கள்

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் தமிழ் குறித்து வரும் சொற்கள்:

  • வடிதமிழ்
  • மதுரம் ஒழுகிய தமிழ்
  • தெள்ளித் தெளிக்கும் தமிழ்க்கடல்
  • பண் உலாம் வடிதமிழ்
  • தெளிதமிழ்
  • தென்னந்தமிழ்
  • முதுசொற் புலவர் தெளித்த பசுந்தமிழ்
  • தெய்வத்தமிழ்
  • மதுரம் ஒழுகும் கொழிதமிழ்
  • நறைபழுத்த துறைத் தீந்தமிழ்
  • மும்மைத் தமிழ்