standardised

மதுரை சொக்கநாதர் உலா

From Tamil Wiki
மதுரை சொக்கநாதர் உலா
மதுரை சொக்கநாதர் உலா

மதுரை சொக்கநாதர் உலா (மதுரை உலா) பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் புராணத் திருமலை நாதரால் இயற்றப்பட்ட உலா இலக்கியம்.

பதிப்பு

மதுரை சொக்கநாதர் உலா 1931-ஆம் ஆண்டு உ.வே. சாமிநாதையர் எழுதிய குறிப்புரையுடன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது.  

இந்நூலுக்கான ஏட்டுப்பிரதி கிடைத்த விதம் குறித்து, ”சற்றேறக்குறைய 40 வருஷங்களுக்கு முன்பு இந்நூலின் ஏட்டுப்பிரதி ஒன்று திருநெல்வேலியிலிருந்த வித்வான் ஸ்ரீ சாலிவாடீசுவர ஓதுவாரவர்கள் வீட்டிற் கிடைத்தது. அப்பிரதி மிகவும் பழமையானது. அதன் முதலில் ஏகாம்பரநாதருலாவும் அப்பால் இந்த உலாவும், இதற்குப் பின் திரிசிரகிரியுலாவின் இறுதிப் பகுதியுள்ள ஓரேடும் இருந்தன..இந்நூலின் முதற் பகுதி கிடைக்கவில்லை. இந்தச் சொக்கநாதருலாப் பிரதிகள் வேறு கிடைக்குமோவென்று இதுகாறும் தேடிப்பார்த்தும் அகப்படாமையால், இதுவும் வீணாய்விடுமே யென்னும் அச்சத்தாலும், இது தக்கவச்**கள் வீட்டிலிருந்து கிடைத்த பிரதி யென்னும் துணிவாலும் இப்பொழுது இதனை ஆராய்ந்து வெளியிடலானேன். ” என்று இந்நூலின் முகவுரையில் உ.வே.சா குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்

மதுரை சொக்கநாதர் உலா இயற்றிய ஆசிரியர் திருமலைநாதர். இவர் காஞ்சீபுரம் ஞானப்பிரகாசமடத்துச் சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்தவர். திருமுறைகளிலும் பழைய தமிழ் நூல்களிலும் ஸ்தல புராணங்களிலும் பிரபந்தங்களிலும் சைவ சாஸ்திரங்களிலும் பயிற்சியுள்ளவர். இவர் சாலிவாகன சகாப்தம் 1430-ஆம் வருடத்தில் சிதம்பரபுராணத்தைத் தமிழில் செய்யுள் நடையில் மொழியாக்கம் செய்யத் தொடங்கியதாகக் கூறுவதால் இவர் காலம் பொ.யு. 1507 என்று தெரிகிறது.

சொக்கநாதர் உலாவிலுள்ள, "மன்னன்குடைவீர மாறன குலதிலகன்" (33) என்னும் கண்ணியில் இருந்து, மதுரையை அரசாண்ட வீரமாறனென்பவனால் ஆதரிக்கப்பெற்றவரென்றும் அவனது வேண்டுகோளின்படி இந்நூல் இயற்றி அரங்கேற்றப் பட்டதென்றும் தெரிகிறது.

இவர் இயற்றிய நூல்களாக இப்பொழுது சிதம்பர புராணமும் சொக்கநாதர் உலாவும் மட்டுமே கிடைக்கின்றன.

உருவாக்கம்

மதுரை சொக்கநாதர் உலா உலா இலக்கியத்தின் இலக்கணத்தைக் கடந்து ஒரு புதுமையைக் கையாண்ட படைப்பு. உலா என்னும் சிற்றிலக்கியம் பொதுவாக உலாவரும் பாட்டுடைத் தலைவனை ஏழு பருவத்தைச் சேர்ந்த பெண்கள் கண்டு காதல் கொள்வதாகப் பாடப்படும். இந்த உலாநூல் மதுரை சொக்கநாதர் ஏழு நாள் ஏழு வகையான வாகனங்களில் உலா வந்ததாகப் பாடுகிறது.

  • முதல் நாள் - தேர்
  • இரண்டாம் நான் - வெள்ளை யானை
  • மூன்றாம் நாள் - வேதக்குதிரை
  • நான்காம் நாள் - இடப-வாகனம்
  • ஐந்தாம் நாள் - தரும-ரிஷபம்
  • ஆறாம் நாள் - கற்பக விருட்சம்
  • ஏழாம் நாள் - சித்திர விமானம்

சொக்கநாதர் ஏழுநாட்கள் ஒவ்வொரு நாளும் வேறு வேறான வாகனங்களில் உலா வந்தார்; ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பருவப்பெண் அவரை தரிசித்து காதல் கொண்டாள் என்று கூறுகிறது.

மதுரையில் பண்டைய நாட்களில் ஏழுநாளில் ஒரு திருவிழா நடந்ததென்று, "கழுநீர் கொண்ட வெழுநா ளந்தி" (427) என்ற மதுரைக்காஞ்சிப் பகுதியால் தெரிகின்றது. அதே போல திருக்குறுக்கை வீரட்டத்திலும்(சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் ஆகிய கொருக்கை) ஏழுநாளில் ஒரு திருவிழா நடைபெற்றதை,

ஆத்தமா மயனும் மாலும் அன்றி மற்றொழிந்த தேவர்,

சோத்தமெம் பெருமானென்று தொழுது தோத்திரங்கள் சொல்லத்,

தீர்த்தமா மட்ட மீமுன் சீருடை ஏழு நாளும்,

கூத்தராய் வீதி போந்தார் குறுக்கைவீரட்ட னாரே

என்ற தேவாரப் பாடலில் அறியலாம். இந்தத் திருவிழா பவுநம் எனப்பட்டது.

இந்த நூல் 516 கண்ணிகள் கொண்டது[1]. கலிவெண்பா யாப்பில் அமைந்துள்ளது.

இந்நூலில் சொக்கநாதர் இயற்றிய 64 திருவிளையாடல்களும் ஒன்பது பகுதிகாளாகப் பிரிக்கப்பட்டு முதல் மூன்று திருவிளையாடல்கள் முதற்பகுதியிலும், அடுத்த ஐந்து திருவிளையாடல் குழாங்களின் கூற்றிலும், மற்றவை பின் வரும் ஏழு பருவத்திலும் ஒவ்வொன்றிலும் எட்டு வீதம் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நூல் பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம் எழுதப்படுவதற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தது.  திருவிளையாடல் புராணத்தில் கூறப்பட்டுள்ள இறைவன் சொக்கநாதரின் 64 திருவிளையாடல்களும் இந்த உலாவில் முறைப்படுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது. பரஞ்சோதி முனிவர் இந்நூலாசிரியருக்கு பிற்காலத்தவரென்பதால் அவருடைய புராணத்திற்கு முதல் நூலாகிய நூலில் இருந்தே இம்முறை இதன் ஆசிரியராலும் அறிந்து அமைக்கப்பட்டதெனக் கொள்ளவேண்டும் என உ.வே.சா குறிப்பிடுகிறார். மதுரை குறித்த பல குறிப்புகள் இந்நூலில் இடம்பெறுகின்றன.

பாடல் எடுத்துக்காட்டு

கன்னலணி கல்லானை வாங்கியதுங் காரமணர்

துன்னுமத யானை துணித்ததுவும் - உன்னரிய

ஓர்விருத்த வால குமாரனுரு வுற்றதுவும்

ஆர்முடித்தோன் கான்மாறி யாடியதும் - பாரித்

துரைத்தா னவளை யுகந்தருளிச் செந்தா

மரைததான மாதிலுயர் மாதும் - உரைத்தவற்றுப்

பூணுங் கருத்தும் புனிதன் றிருவுலாக்

காணும் பெருவிருப்புங் கைக்கொண்டாள்

உசாத்துணை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.