under review

மதுரைக் கூத்தனார்

From Tamil Wiki
Revision as of 14:48, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மதுரைக் கூத்தனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூற்றில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

மதுரையில் பிறந்தார். நாடகம் இயற்றும் கூத்தர் தொழில் செய்தார்.

இலக்கிய வாழ்க்கை

மதுரைக் கூத்தனார் பாடிய பாடல் ஒன்று அகநானூற்றில் (334) உள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்
  • பின்வாங்காத புலியோடு போரிட்ட ஆண் யானையின் தோல் போர்த்திய வெற்றி முரசை இடைவிடா ஓசையுடன் முழக்கிப் பகைநாட்டு அரசர்கள் கொடுத்த திறையைப் பெற்றுக்கொண்டோம்.
  • கடலலை முழக்கத்தோடு தானும் சேர்ந்து முழங்கும் மேகமானது, யானைக் கூட்டம் போல ஒன்று கூடி அவற்றின் கைகள் போல மழைக்காலை இறக்கி, மகளிர் விளையாடும் கழங்கு போல ஆலங்கட்டிகள் சிதறும்படி மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
  • வெண்ணிறமான அன்னத்தின் சிறகு போன்ற நிறம் கொண்ட, தாவும் குதிரைகளைக் கொடித்தளம் கொண்ட தேரில் பூட்டு.
  • மயில்கள் கூவும் கார்காலத்தில், இரும்புக் கட்டுப் போட்ட தேர்ச் சக்கரம் ஈர நிலத்தை அறுத்துக்கொண்டு பாயும்படி குதிரை ஓடட்டும். தழைத்த கூந்தலுக்கு இடையே தோன்றும் முகத்தில் குவளைப் பூவைப் போல் பொலியும் கண்ணோடு காத்திருக்கும் தலைவியை இப்பொழுதே காணவேண்டும்.

பாடல் நடை

  • அகநானூறு 334: முல்லை: வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.

ஓடா நல் ஏற்று உரிவை தைஇய
ஆடு கொள் முரசம் இழுமென முழங்க,
நாடு திறை கொண்டனம்ஆயின் பாக!
பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு
பெருங் களிற்றுத் தடக் கை புரையக் கால் வீழ்த்து,
இரும் பிடித் தொழுதியின் ஈண்டுவன குழீஇ,
வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும்
கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறி,
பெயல் தொடங்கின்றால், வானம்; வானின்
வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப,
நால்கு உடன் பூண்ட கால் நவில் புரவிக்
கொடிஞ்சி நெடுந் தேர் கடும் பரி தவிராது,
இன மயில் அகவும் கார் கொள் வியன் புனத்து,
நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப,
ஈண்டே காணக் கடவுமதி பூங் கேழ்ப்
பொலிவன அமர்த்த உண்கண்,
ஒலி பல் கூந்தல் ஆய் சிறு நுதலே!

உசாத்துணை


✅Finalised Page