மண்புழுக்கள்

From Tamil Wiki
Revision as of 22:10, 24 June 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|மண்புழுக்கள் மண்புழுக்கள் ( ) மலேசிய எழுத்தாளர் சீ.முத்துசாமி எழுதிய நாவல். சீ.முத்துசாமி எழுதிய முதல் நாவல் இது. மலேசியத் தோட்டக்காட்டு மக்களின் வாழ்க்கையை அவர்களி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
மண்புழுக்கள்

மண்புழுக்கள் ( ) மலேசிய எழுத்தாளர் சீ.முத்துசாமி எழுதிய நாவல். சீ.முத்துசாமி எழுதிய முதல் நாவல் இது. மலேசியத் தோட்டக்காட்டு மக்களின் வாழ்க்கையை அவர்களின் மொழியிலேயே முன்வைப்பது இப்படைப்பு

எழுத்து, வெளியீடு

சீ.முத்துசாமி 2006ல் இந்நாவலை எழுதினார்.

கதைச்சுருக்கம்

மலேசியாவில், நாவலில் பெயர் சுட்டப்படாத ஒரு தோட்டத்தில் வாழும் மக்களின் கதை இது. இதில் மையக் கதை என எதுவும் இல்லை. உதிரிக் கதைமாந்தர்களின் வாழ்க்கை வழியாக தோட்டக்காட்டின் வாழ்வுச்சித்திரம் அளிக்கப்படுகிறது. ஆட்டுக்காரச் சின்னக் கருப்பன், வெற்றிலை பயிரிடும் சாலபலத்தார், புட்டுக்கார கிழவன், கசியடி முனியப்பன், ரத்தினம் டிரைவர், பாம்பு பாலா, அம்மா வூட்டுக் குஞ்சான், வேட்டைக்காரர், பொன்னுசாமித் தண்டல், புடுக்கு மணியம், தொப்பை தொரைசாமி வாத்தியார், ரொட்டி வங்காளி, மசிரு மிட்டாய் இருளப்பன் என பல கதாபாத்திரங்கள் நாவலுக்குள் வருகிறார்கள். அவர்கள் மண்ணோடு மண்ணாக வாழ்ந்து மண்ணை வளப்படுத்துவோர். ஆகவே மண்புழுக்கள். தோட்ட உரிமையாளர் டன்லப் துரைக்கோ, மனேஜர் மேனனுக்கோ, பெரிய கிராணி சுப்பையாவுக்கோ அவர்கள் அருவருப்பான புழுக்கள். ஆட்டுக்கார சின்னக் கருப்பனைச் சுற்றி அவனுடன் தொடர்புடைய கதைகளாக இந்நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன.

இலக்கிய இடம்

விமர்சகர் ம.நவீன் மூன்று காரணங்களுக்காக இந்நாவல் மலேசிய இலக்கியத்தில் முக்கியமானது என கருதுகிறார். இந்நாவல் மலேசியத் தோட்டக்காடுகளை மிக நுண்ணிய தரவுகள் வழியாகவும், புலன்வழி அனுபவப்பதிவுகள் வழியாகவும் சித்தரிக்கிறது. பொதுவாக மலேசிய இலக்கியங்களில் அரசியல் நிகழ்வுகளும், சமூகநிகழ்வுகளுமே முதன்மைகொண்டிருக்கும், ஆனால் இந்ந்தாவலில் கதைமாந்தரின் அகவுலகம் விரிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்நாவல் குழந்தைகளின் உலகை உருவாக்கிக் காட்டுகிறது.(சீ.முத்துசாமி நாவல்கள். ம.நவீன்) ‘அநேகமாக எல்லா அத்தியாயங்களிலும் சொல்லுகின்ற ஒவ்வொரு நிகழ்வையும் அந்த நிகழ்வில் வருகின்ற பொருள்களையும் இப்படி நுணுக்கமான தூரிகையை வைத்தே தீட்டியிருக்கிறார். ஆகவேதான் இந்தத் தோட்ட ஓவியம் இத்தனை அடர்த்தியாகவும் செறிவாகவும் இருக்கிறது’ என்று ரெ.கார்திகேசு குறிப்பிடுகிறார்.

உசாத்துணை