under review

மஞ்சரி இலக்கியம்

From Tamil Wiki
Revision as of 17:53, 24 September 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added, Link Created)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

'மஞ்சரி இலக்கியம்' என்பது தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். பலவகைப் பாவும் பாவினமும் கலந்து பாடுவதைக் ‘கலம்பகம்’ என்பர். அதே போல்  பல்வேறு வகையான பாடல் தொகுப்புகளின் திரட்டு நூல்ளுக்கு ‘மஞ்சரி இலக்கியம்’ என்பது பெயர்.

மஞ்சரி : பெயர் விளக்கம்

‘மஞ்சரி’ என்பதற்குப் பூங்கொத்து, பூமாலை, தளிர், மலர்க்காம்பு, ஒழுக்கம், மஞ்சரிப்பா என்னும் ஆறு பொருள்களைச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது. பூங்கொத்துப் போல், பூமாலை போல் பல்வேறு வகையான பாடல் தொகுப்புகளுக்கு ‘மஞ்சரி’ எனப் பெயர் சூட்டியுள்ளனர். பலவற்றையும் ஒருங்கு திரட்டிய திரட்டு நூல் என்பதே ‘மஞ்சரி’ என்பதன் விளக்கம். பல்வேறு வகையான பாடல் தொகுப்புக்கள் அடங்கிய நூல்களே ’மஞ்சரி இலக்கியம்’ என்று அழைக்கப்படுகின்றன.

மஞ்சரி இலக்கியத்தின் இலக்கணம்

பதினாறாம் நூற்றாண்டைச் சார்ந்த பாட்டியல் நூலான பிரபந்த மரபியல்,

கருதுபொருள் இடம் காலம் தொழிலின்

முப்பான் நாற்பான் எழுபான் தொண்ணூறு

நூறான் வெண்பாக் கலித்துறையின் ஆதல்

மன்னும் அவ்வெண்ணான் மாலை மஞ்சரி

காஞ்சி மாலை முல்லைக்கலி சதகமென்று

இயலும் செய்யுட்கு ஏற்ற பெயரே

- என்று ’மஞ்சரி’ப் பாடல் பற்றிய விளக்கத்தைத் தருகிறது.

பொருள், இடம், காலம், தொழில் என்ற நான்கின் அடிப்படையில் வெண்பா அல்லது கலித்துறைப் பாவினால் பாடப்படுவது மஞ்சரி இலக்கியமாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் பொருள், இடம், காலம், தொழில் என நான்கு வகை மஞ்சரிகள் உள்ளன என்பது தெரிய வருகிறது.

மஞ்சரி இலக்கியத்தின் அமைப்பு முறை

காதலை முதன்மைப் பொருளாக வைத்துத் தலைவன் ஒருவனின் புகழைப் பேசுகின்ற முறையில் மஞ்சரி இலக்கியம் அமைந்துள்ளது.

மஞ்சரி இலக்கிய வகைகள்

சிற்றிலக்கியங்களில் மாலை என்னும் சொல் முடிவைப் பெற்று அமைந்த இலக்கியங்கள் போல், மஞ்சரி என்னும் சொல் முடிவைப் பெற்று அமையும் இலக்கியங்கள் பல உள்ளன.

வெற்றிக் கரந்தை மஞ்சரி

ஓர் அரசனின் ஆநிரைகளைக் கவர்ந்து சென்ற மாற்றரசனைப் பின் தொடர்ந்து, கரந்தைப்பூ சூடிச்சென்று அவனுடன் போரிட்டு வென்று, தம் ஆநிரைகளை மீட்ட வீர அரசனின் வெற்றியைப் புகழ்ந்து பாடுவது வெற்றிக் கரந்தை மஞ்சரி.

வாதோரண மஞ்சரி

யானையை வசப்படுத்தி அடக்கியவருக்கும், எதிர்த்த யானையை வெட்டி அடக்கியவருக்கும், யானையை பற்றிப் பிடித்துச் சேர்த்தவருக்கும், அவர் தம் வீரத்தின் சிறப்பை வஞ்சிப்பாவால் தொகுத்துப் பாடப்படுவது வாதோரண மஞ்சரி.

திரிபு மஞ்சரி

திரிபுச் செய்யுட்கள் பல அமைந்தது திரிபு மஞ்சரி.

யமக மஞ்சரி

யமகம் என்பதற்கு ‘வந்த எழுத்துக்களே பொருள் வேறுபடச் செய்யுளின் சீர் அல்லது அடிகளிற் பின்னும் வருவதாகிய மடக்கு என்னும் அணி’ என்பது பொருள். அந்தாதி நடையில் அமைந்தும், அவ்வாறு இல்லாது பல யமகச் செய்யுள்களின் தொடராகவும் அமைவது யமக மஞ்சரி.

ரச மஞ்சரி

ஒன்பது சுவைகள் நவரசங்கள் எனப்படுகின்றன. வீரம், அருவருப்பு, பெருநகை, அச்சம், கோபம், கருணை, சாந்தம், அற்புதம், சிங்காரம் எனும் ஒன்பது சுவைகளும் கொண்டு பாடப்படுவது ரச மஞ்சரி.

தமிழ் இலக்கியத்தில் நூற்றுக்கணக்கான மஞ்சரிப் பாடல்கள் உள்ளன.

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.