ப. ஜீவானந்தம்

From Tamil Wiki
Revision as of 12:31, 12 February 2023 by Ramya (talk | contribs) (Created page with "ப. ஜீவானந்தம் (ஆகஸ்ட் 21, 1907 – ஜனவரி 18, 1963) எழுத்தாளர், பேச்சாளர், இதழாசிரியர், காந்தியவாதி, அரசியல்வாதி. == வாழ்க்கைக் குறிப்பு == ப. ஜீவானந்தம் நாகர்கோயில் பூதப்பாண்டியில் பட்டத்தார் ப...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ப. ஜீவானந்தம் (ஆகஸ்ட் 21, 1907 – ஜனவரி 18, 1963) எழுத்தாளர், பேச்சாளர், இதழாசிரியர், காந்தியவாதி, அரசியல்வாதி.

வாழ்க்கைக் குறிப்பு

ப. ஜீவானந்தம் நாகர்கோயில் பூதப்பாண்டியில் பட்டத்தார் பிள்ளை, உமையம்மாள் ஆகஸ்ட் 21, 1907இல் இணையருக்குப் பிறந்தார். இயற்பெயர் சொரிமுத்து.

தனிவாழ்க்கை

ப. ஜீவானந்தம் கடலூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகள் கண்ணம்மாவைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு குமுதா என்ற பெண். மகள் பிறந்த சில நாள்களில் கண்ணம்மா காலமானார். 1948இல் பத்மாவதியை கலப்புத் திருமணம் செய்தார். இவர்களுக்கு உஷா, உமா என்ற இரு மகள்கள். மணிக்குமார் என்ற மகன்.

நாடக வாழ்க்கை

நாடகம் அரங்காற்றுகை செய்த அஞ்சாநெஞ்சன் விஸ்வநாத தாஸுக்கு நாடகங்களை எழுதிக் கொடுத்தார். ’ஞானபாஸ்கரன்’ என்ற நாடகத்தை அவரே எழுதித் தயாரித்து அரங்கேற்றினார். அதில் நடித்தார். 1954இன் இறுதியில் நாடகங்களை நெறிப்படுத்த அரசு ஒரு மசோதாவைச் சபையில் தாக்கல் செய்தது. இவை மத நோக்கங்களைப் புண்படுத்தும் எம்.ஆர்.ராதாவின் நாடகங்களைத் தடை செய்வதற்காக என அறிந்து ப. ஜீவானந்தம் எதிர்த்தார்.

அரசியல் வாழ்க்கை

வைக்கம் சத்தியாக்கிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் தனிப் பங்கேற்றவர். 1952இல் வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருகூடசுந்தரம் பிள்ளையின் அன்னியத் துணி எதிர்ப்புப் பிராசாரக் கூட்டத்தின் மூலம் ஈர்க்கப்பட்டு கதர் அணியத் தொடங்கினார். பகத்சிங்கின் தூக்கு தண்டனை அவரை பாதித்தது. அவரின் புத்தகத்தை மொழிபெயர்ப்பு செய்ததற்காக ஆங்கில அரசு அவரை கைதுசெய்து, கை - கால்களில் சங்கிலியிட்டு வீதி வீதியாக இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தனர். பின்னர் சோசலிசக் கொள்கையால் ஈர்க்கப்பட்டார். தன் ஊரில் தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார். பதினேழு வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். வ.வே.சு. ஐயர் நடத்திய தேசிய குருகுலத்தில் ப. ஜீவானந்தம் ஆசிரியர் பணி செய்தார். அந்த ஆசிரமம் மூடப்பட்ட பிறகு காரைக்குடிக்கு அருகில், சிராவயல் என்ற ஊரில் காந்தி ஆசிரமத்தை உருவாக்கினார். ஜீவானந்தம், அரசியலில் எதிரணியில் இருந்த காமராசரால் பெரிதும் மதிக்கப்பட்டவர்.

பொதுவுடமைக் கட்சி

ஜீவா 1930களில் தன்னை சுயமரியாதை இயக்கத்தவனாக அடையாளப்படுத்திக் கொண்டார். இந்தியக் காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு 1932இல் சிறை சென்றார். கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பதவி வகித்த ஜீவா, சீனப் படையெடுப்பை எதிர்த்துக் கடும் பிரசாரம் செய்தார். சீன சோஷலிச அரசு இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்ததை ஜீவா ஏற்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றுவதில் ஜீவா முக்கிய பங்கேற்றார்.

கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலங்களில் (1939-42) பம்பாயிலும் சிறையிலும் தனது பெரும்பகுதியான நாள்களைக் கழித்தார். இக்காலங்களில், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலிருந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டுவதற்கான செயல்பாடுகளில் செயல்பட்டார். 1948இல் கம்யூனிஸ்ட் கட்சித்தடை செய்யப்பட்டபோது இலங்கைக்குச் சென்று செயல்பட்டார். இக்காலங்களில் மார்க்சியக் கல்வி பயிலுவதை முதன்மைப்படுத்திக் கொண்டார். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் தொழிலாளர் பாதுகாப்புக் கழகம், சுயமரியாதை சமதர்மக்கட்சி ஆகியவற்றில் தலைமைப் பொறுப்பேற்றார்.

சுயமரியாதைச் சமதர்மக் கட்சி

ஈ.வெ.ராமசாமியோடு கருத்து வேறுபாடு ஏற்பட்ட சூழலில் தோழர்கள் அ. ராகவன், நீலாவதி, ராமநாதன் ஆகியவர்களோடு இணைந்து ‘சுயமரியாதைச் சமதர்மக் கட்சி’யை உருவாக்கினார். அவ்வியக்கத்தின் இதழ்களாகவே ‘சமதர்மம்’, ‘அறிவு’ ஆகியவை செயல்பட்டன. கட்சியின் முதல் மாநாடு திருச்சியில் நடைபெற்றது(1936), டாங்கே அம்மாநாட்டின் தலைமையுரையை நிகழ்த்தினார். இவ்வகையில் காங்கிரசிலிருந்து வெளியே வந்து, சோசலிசக் கருத்தாக்கம் சார்ந்த சுயமரியாதை இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று ஜீவா விரும்பினார். இதற்கு முரணாக ஈ.வெ.ரா. செயல்படுவதாகக் கருதினார். அக்காலங்களில் நடைபெற்ற தேர்தலில், நீதிக்கட்சியுடன் ஈ.வெ.ரா. கொண்டிருந்த தொடர்பை, ஜீவா ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு எதிராகச் செயல்பட்டு காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்காரராகச் செயல்பட்டார். இந்தப் பின்புலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் பெயரில் ஜனசக்தியை வார இதழாக வெளிக்கொண்டு வந்தது (1937).

சென்னை வண்ணாரப்பேட்டைத் தொகுதியிலிருந்து வென்று சட்டமன்றத்திற்கு சென்றார் ஜீவா. 1952 முதல் 1957 வரை அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.1957, 1962 சட்டமன்ற தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டாலும் வெற்றிபெற முடியவில்லை. 1952இல் சட்டசபையில் நடந்த மதுவிலக்கு பற்றிய விவாதத்தில் ஜீவாவின் தரப்பு வெகுவாக பேசபப்ட்டது.

இதழியல்

‘சமதர்மம்’, ‘அறிவு’, ‘ஜனசக்தி’ ஆகிய இதழ்களின் ஆசிரியர். 1961இல் ‘கலை இலக்கியப் பெருமன்றம்’ உருவாக்கினார். அதன் கொள்கைகளைப் பரப்ப ’ஜனசக்தி’ நாளிதழைத் தொடங்கினார். ’தாமரை’ என்ற இலக்கிய இதழை 1959இல் தொடங்கினார். இவ்விதழ்களில் ப. ஜீவானந்தம் கட்டுரைகள் பல எழுதினார்.

இலக்கிய வாழ்க்கை

பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது "சுகுணராஜன் அல்லது சுதந்தரவீரன்" என்ற நாவலை எழுதினார். சிறையிலிருந்து பகத் சிங் தன் தந்தைக்கு எழுதிய "நான் ஏன் நாத்திகனானேன்?" என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார் ஜீவா. 1933இல் ஜீவா எழுதிய "பெண்ணுரிமை கீதாஞ்சலி" என்ற கவிதை நூல் வெளிவந்தது. இதுதான் ஜீவா எழுதிய முதல் நூல்.

குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதினார். நாடு விடுதலை அடையும்வரை பல்வேறு சூழ்நிலைகளில் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஜீவா பல பாடல்கள் எழுதினார். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்க் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தார்.சோசலிசச் சரித்திரம், சோசலிசத் தத்துவம் சார்ந்த மூல நூல்களை வாசித்த அனுபவம் சார்ந்து, தமிழில் அப்பொருண்மை குறித்து எழுதினார். மார்க்சிய கருத்துகளைத் தமிழில் சொல்வதற்கு ஜீவா பல புதிய சொல்லாட்சிகளை உருவாக்கியுள்ளார். ப. ஜீவானந்தம்எழுதிய ‘சோசலிசச் சரித்திரம்’ மற்றும் ‘சோசலிசத் தத்துவம்’ எனும் சிறு நூல்களைத் தொடர்ந்து அத்துறை சார்ந்த சோவியத் நூல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டன.

விருதுகள்

மறைவு

நினைவு

  • தமிழ்நாடு அரசு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் ப.ஜீவானந்தத்திற்கு மணிமண்டபம் அமைத்துள்ளது. அவரது மார்பளவு சிலையும் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்களும் கண்காட்சியாக வைக்ப்பட்டுள்ளன.
  • ப.ஜீவானந்தத்தின் பெயரால் புதுச்சேரியில் ஜீவானந்தம் அரசு மேனிலைப் பள்ளி பெயரிடப்பட்டது.
  • சென்னை மேற்கு தாம்பரத்தில், ரயில்வே நிலையம் எதிரில் முழு சிலை அமைக்கப்பட்டுள்ளது. 1995இல் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார்.

நூல்கள்

  • இலக்கியச்சுவை
  • ஈரோட்டுப் பாதை சரியா?
  • கலை இலக்கியத்தின் புதிய பார்வை
  • சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள்
  • சமதர்மக் கீதங்கள் 1934
  • சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா
  • சோஷலிஸ்ட் தத்துவங்கள்
  • தேசத்தின் சொத்து (தொகுப்பு)
  • நான் நாத்திகன் ஏன்? - பகத்சிங் எழுதிய நூலின் மொழிபெயர்ப்பு; 1934; அரசால் பறிமுதல் செய்யப்பட்டது.
  • புதுமைப்பெண்
  • பெண்ணுரிமைக் கீதங்கள் (கடலூர்ச் சிறையில் இயற்றியவை) 1932
  • மதமும் மனித வாழ்வும்
  • மேடையில் ஜீவா (தொகுப்பு)
  • மொழியைப்பற்றி
  • ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு

உசாத்துணை

இணைப்புகள்