under review

ப. எழில்வாணன்

From Tamil Wiki
Revision as of 10:12, 25 March 2024 by Ramya (talk | contribs)
ப. எழில்வாணன்

ப. எழில்வாணன் (பிறப்பு: பிப்ரவரி 1, 1950) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், ஆசிரியர், பாடலாசிரியர். நூலாக்க பணிகள் செய்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

ப. எழில்வாணனின் இயற்பெயர் சுப்பிரமணியன். வடமொழிப்பெயரான சுப்பிரமணியன் என்பதை எழில்வாணன் என மாற்றிக் கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம் விருப்பாச்சி என்னும் ஊரில் பழனியப்பன், காளியம்மாள் இணையருக்குப் பிப்ரவரி 1, 1950-ல் பிறந்தார். விருப்பாச்சியிலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்றார். ஆர்.சி. பாத்திமா நடுநிலைப் பள்ளியில் பயின்றார். கருவூர் மாவட்டத்திலுள்ள பள்ளபட்டி உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வி பயின்றார். பழனி அருள்மிகு பழனியாண்டவர் கல்லூரியில் புகுமுக வகுப்பு கற்றார். மேலூர் அரசினர் ஆதாராப் பயிற்சிப் பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றார்.

1973-ல் பள்ளபட்டி உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றினார். ஆசிரியர் பணியில் இருந்து கொண்டே படித்துப் புலவர் பட்டமும் இலக்கிய இளையர் பட்டமும் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் வழியாக, இளைஞர் இலக்கியம் – பள்ளிப்பறவைகள் - ஓர் ஒப்பாய்வு என்னும் தலைப்பில் பாரதிதாசன்-பாவலரேறு பெருஞ்சித்திரனார் நூல்களை ஒப்பிட்டு ஆய்வு செய்து மெய்ம்மவியல் முதுவர் (எம்.ஃபில்) பட்டம் பெற்றார். பள்ளபட்டி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணியில் அமர்ந்து, முதுகலைத் தமிழாசிரியராக 2008-ல் பணி நிறைவு பெற்றார்.

பங்களிப்பு

மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாடு(1987), மும்பையில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்குகள் எனப் பல்வேறு மாநாடுகளிலும் கருத்தரங்குகளிலும் கலந்துகொண்டு பங்களிப்பு ஆற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

ப. எழில்வாணன் செந்தமிழ்ச் செய்யுட்கோவை, யாப்பு விளக்கம் ஆகிய நூல்களை எழுதினார். ப. எழில்வாணன் மரபு பாடல்கள், சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் எழுதினார். யாப்பு பாடல்கள் எழுதினார். நூலாக்க பணிகள் செய்தார்.

மாலைமுரசு, வல்லமை, ஏர் உழவன், செந்தமிழ்ச் செல்வி, தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம், இயற்றமிழ், குறளியம், வள்ளுவர் வழி, குறள் மணம், தமிழ்ப்பாவை, எழுகதிர், வண்ணப்பூங்கா, தமிழ்நேசன் (மலேசியா), கவிக்கொண்டல், குயில், தேவி (கிழமை இதழ்), எழுத்துலகம், தமிழ்ப்பேழை, துளி, அன்பே, திறவுகோல், பன்மலர், புதுவெள்ளம், நிலா, ஏழைதாசன், தமிழ்வளம் உள்ளிட்ட பல இதழ்களில் எழுதினார்.

ப. எழில்வாணன் பிற எழுத்தாளர்களுடன் இணைந்து பல நூல்களை எழுதியுள்ளார். இயற்கை வடிவங்கள், நீதிகேட்ட நெடும்பயணம், வாழ்த்துகிறோம், மனிதனைத் தேடுகின்றேன், கூடிக்கூவும் குயில்கள், நெம்புகோல்கள், காவிரி, புதியதோர் உலகு செய்வோம், இன்றைய குலுக்கல்கள், தமிழ்த் தொண்டர் கா.சு, உழைப்புச் செம்மல் கலைஞர், பாவலர் நெஞ்சில் பேராசிரியர் உள்ளிட்ட நூல்களில் இவரின் படைப்புகள் வெளிவந்துள்ளன.

திரைப்படம்

ப எழில்வாணன் அவர்கள் 2014 இல் வெளிவந்த ஒக்கேனக்கல் என்னும் திரைப்படத்தில் பூவே பூவே ஏனோ நாணமோ என்னும் பாடலை எழுதியுள்ளார். எதிர்வினை என்னும் திரைப்படத்திற்கும் பாடல் புனைந்துள்ளார்.

சிறப்பு

ப. எழில்வாணனின் சிறப்பினைப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் கீழ்வரும் பாடலில் சிறப்புறப் புகழ்ந்து பாடியுள்ளார்.

தப்பெழுதாமல் எழுதும் தனித்தமிழ்ப் பெரும்பற்று; தகைசால் பண்பு;
கொப்புளித்துப் பிறமொழிச்சொல் துப்பிவிட்டுத் தூய தமிழ் கூறும் வேட்கை;
அப்பழுக்கில்லாத உள்ளம்; அணையாத நல்லுணர்வு; இங்கு ஆருக்கென்றால்
மெப்புதலுக்கில்லாமல் உரைக்கின்றேன் எழில்வாணன் விழிமுன் நிற்பார்.

விருதுகள்

  • உலகத் தமிழ்க் கவிஞர் பேரவையின் “கவிமாமணி” விருது
  • இலக்கணப் புலவர் சரவணத் தமிழன் அவர்கள் “பைந்தமிழ்ப் பாவலர்” விருது
  • இயற்றமிழ்ப் பயிற்றகம் “யாப்புப் புலவர்” என்ற விருது
  • உலகத் திருக்குறள் உயராய்வு மையத்தின் திருக்குறள் விருது
  • தமிழ்ச் சான்றோர் பேரவை “மொழிப்போர் மறவர்” விருது (1999)
  • தமிழ்நாடு அரசு “நல்லாசிரியர்” விருது, “தமிழ்ச் செம்மல்” விருது
  • சென்னைப் பாவேந்தர் பாசறை “பாவேந்தர் விருது”

நூல் பட்டியல்

  • ஒரு சொட்டுக் கண்ணீர்(1985)
  • நீ தமிழ் மகனா (1987)
  • செந்தமிழ்ச் செய்யுட்கோவை(1990)
  • கலைஞரின் வாகையும் மார்கழிப் பாவையும்(1990)
  • தமிழ்ச்சோலை(2010)
  • பன்மலர்த்தேன்(2010)
  • துன்பம் நீக்க வள்ளுவர் கூறும் வழிகள்(2014)
  • குறும்பாவியங்கள்(2014)
  • சிறுவர் புரட்சிக் கதைகள் (2017)
  • இளைஞர் இலக்கியமும் பள்ளிப்பறவைகளும்(2017)
  • வெற்றி பெறுவோம் (2019)
  • யாப்பு விளக்கம் (2021)

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.