பொ.வே. சோமசுந்தரனார்

From Tamil Wiki

பெருமழைப் புலவர் என்று தன் பிறந்த ஊரின் பெயரால் அறியப்பட்ட பொ.வே. சோமசுந்தரனார் பல பழந்தமிழ் நூல்களின் உரையாசிரியர், நாடகாசிரியர், வாழ்க்கை வரலாற்றாசிரியர். பண்டிதமணி கதிரேச செட்டியாரின் மாணவர்.தஞ்சை மாவட்டத்தில் பெரும்புயல் வீசிய போது அவர் எழுதிய தனிப்பாடல்கள் புகழ்பெற்றவை. அவரது நூல்கள் பல்கலைக்கழகங்களில் பாடமாகக் கற்பிக்கப்படுகிறன.

பிறப்பு,கல்வி

தனது ஊர்ப்பெயரால் பெருமழைப் புலவர் என பெயர் பெற்ற சோமசுந்தரனார் (05.09.1909 -03.01.1972) திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள மேலைப் பெருமழை என்றும் சிறிய கிராமத்தில், வேலுத்தேவர் - சிவகாமியம்மாள் தம்பதிக்கு செப்டம்பர் 5-, 1909 ல் பிறந்தார். திண்ணைப் பள்ளியில் சேர்ந்து அரிச்சுவடி, ஆத்திச்சூடி, வெற்றிவேற்கை, நிகண்டுகள், நைடதம், கிருட்டிணன் தூது , அருணாசலப் புராணம் முதலிய நூல்களைக் கற்றார். தொடர்ந்து பள்ளியில் படிக்க முடியாமல் உழவு வேலைக்குச் செல்ல நேர்ந்தாலும் கோவில்களிலும் மடங்களிலும் உள்ள நூல்களைப் பயின்றார்..

10 வயதில் தாயை இழந்து , தந்தையின் மறுமணத்துக்குப் பின் சோமசுந்தரனார் தமது தாய்மாமன் இல்லத்தில் தங்கினார். அவரது கல்வி ஆர்வத்தை உணர்ந்த சர்க்கரைப் புலவர், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்குச் சென்று பயிலுமாறு வழிநடத்தி தமிழாசிரியர் பூவராகம்பிள்ளை என்பவருக்கு அறிமுகக் கடிதம் கொடுத்தார்.

சோமசுந்தரனார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சோழவந்தான் கந்தசாமியார், பண்டிதமணி கதிரேசச் செட்டியார், விபுலானந்த அடிகள் முதலியவர்களை ஆசிரியர்களாக அடையும் நல்வாய்ப்பு கிட்டியது.

‘புலவர்’ படிப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றும், தமிழ் அறியாத ஆங்கிலேயே ஆளுநர் எர்ஸ்கின்பிரபு பட்டமளிப்பில் வழங்கிய சான்றிதழை கிழித்தெறிந்துவிட்டு,.விவசாயத்தில் ஈடுபட்டபடியே தன் எழுத்துப்பணியைத் தொடர்ந்தார்.

தனி வாழ்க்கை

சோமசுந்தரனாரின் மனைவி பெயர் மீனாம்பாள். மகன்கள் பசுபதி மற்றும் மாரிமுத்து மேலப்பெருமழையில் வாழ்ந்து வருகிறார்கள்.

இலக்கியப் பணி

சோமசுந்தரானார் உரையாசிரியராக முதலில் எழுதியது திருவாசக உரை. பண்டிதமணி கதிரேசச் செட்டியார் தாம் எழுதிக் கொண்டிருந்த திருவாசக உரையை அவரிடம் ஒப்படைத்து, அதை எழுதி முடிக்க வேண்டினார்.

திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் எழுதிக் கொண்டிருந்த கருப்பங்கிளர் இராமசாமிப் புலவரின் தொடர்பால், சென்னை சென்று கழகத்துக்காக சங்க இலக்கியங்களுக்கு உரைகள் எழுதினார்.தன் உரைகளில் தகுந்த காரணங்களைச் சுட்டி, பழைய உரையாசிரியர்களை மறுத்தும் எழுதியுள்ளார்.

எட்டுத்தொகை நூல்கள் ஐந்திற்கும், ஐம்பெருங்காப்பியங்கள் சில சிறு காப்பியங்களுக்கும், திருக்கோவையார் உள்ளிட்ட பல நூல்களுக்கும் உரையெழுதி அளித்துள்ளார்..

மேலும், ‘செங்கோல்’, ‘மானனீசை’ முதலிய நாடக நூல்களும், பெருங்கதை உரைநடையும், பண்டிதமணி வரலாறு முதலிய உரைநடை நூல்களையும் எழுதி அளித்துள்ளார்.

பரிசுகள், விருதுகள்

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் 1008-வது நூல் வெளியீட்டு பொன்விழாவில் சோமசுந்தரனார் கேடயம் அளித்து போற்றிச் சிறப்பிக்கப்பட்டார். அவரது நூற்றாண்டு விழாவையொட்டி மேலப்பெருமழை ஊராட்சி யில் உள்ள நூலகத்துக்கு பெருமழைபுலவர் சோமசுந்தரனார் நினைவகம் என்று பெயர் சூட்டப்பட்டது.

இறப்பு

சோமசுந்தரனார் ஜனவரி 3, 1972 அன்று புதுச்சேரியில் இயற்கை எய்தினார்.

படைப்புகள்

உரைகள்

  • குறுந்தொகை
  • அகநானூறு
  • ஐங்குறுநூறு
  • கலித்தொகை
  • பரிபாடல்
  • பத்துப்பாட்டு
  • ஐந்திணை எழுபது
  • ஐந்திணை ஐம்பது
  • சிலப்பதொகாரம்
  • மணிமேகலை
  • சீவக சிந்தாமணி
  • வளையாபதி
  • குண்டலகேசி
  • உதயணகுமார காவியம்
  • நீலகேசி
  • புறப்பொருள் வெண்பாமாலை
  • பெருங்கதை
  • கல்லாடம்
  • திருக்கோவையார்
  • பட்டினத்தார் பாடல்கள்

நாடகம்

  • செங்கோல்
  • மானனீகை

வாழ்க்கை வரலாறு

பண்டிதமணி வாழ்க்கை வரலாறு

நூற்றாண்டு விழா

பெருமழைப் புலவருக்கு மேலப் பெருமழை ஊர்மக்கள் முயற்சியால் செப்டம்பர் 5, 210 அன்று நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.. வட அமெரிக்க தமிழ் மக்கள் பேரவையில் ஜூலை 4, 2011 அன்று பெருமழைப் புலவர் நூற்றாண்டு விழா மலர் வெளியிடப்பட்டது.

உசாத்துணை

பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார்-முனைவர் இளங்கோவன் தமிழோடு நான்