பொன்னையா பிள்ளை

From Tamil Wiki
Revision as of 16:16, 24 April 2022 by Ramya (talk | contribs)

பொன்னையா பிள்ளை (தஞ்சை க. பொன்னையா பிள்ளை) (ஜனவரி 15, 1888 - ஜுன் 30, 1945) கர்நாடக இசைக் கலைஞர், இசைப் பேராசிரியர். இருபதாம்‌ நூற்றாண்டில்‌ சிறந்த இசைவாணராசவும்‌ இசையாசிரியராகவும்‌ இருந்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இசைக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட போது தொடக்கத்திலேயே இசை ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வாழ்க்கைக் குறிப்பு

பொன்னையா பிள்ளை 1888ஆம் ஆண்டில் பந்தணைநல்லூரில் கண்ணுசாமிப் பிள்ளைக்கு மகனாகப் பிறந்தார். தந்தை பரோடாவில் நடன ஆசிரியர். இவர் தஞ்சை நால்வர் என அழைக்கப்படும் சின்னையா, பொன்னையா, சிவானந்தா, வடிவேலு ஆகியோரின் வழித்தோன்றல். பரதநாட்டிய நட்டுவனார்‌ மீனாட்சிசுந்தரம்‌ பிள்ளை இவருடைய மாமன்‌. அக்கால வழக்கப்படி தெலுங்கு கற்றர்‌.

இசை வாழ்க்கை

தனது மாமா நடன ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பவரிடம் 15 ஆண்டுகள் இசை, நடனம், மிருதங்கம் ஆகிய கலைகளைக் கற்றார். இவரது இன்னொரு மாமா நல்லையப்ப பிள்ளை இவரை சென்னைக்கு அழைத்துச் சென்று பெரிய கலைஞர்களின் முன்னிலையில் பாடச் செய்தார். இதன் மூலம் அவர் பிரபலமான கலைஞரானார். பாலக்காடு அனந்தராம பாகவதரிடம் ஆறு மாதங்கள் சிறப்புப் பயிற்சி பெற்றார்.

தந்தை கண்ணுசாமிப் பிள்ளை பரோடாவில் இருந்து திரும்பி வந்த போது அவருடன் பொன்னையா பிள்ளையும் தஞ்சாவூர் சென்றார். அங்கு தந்தையுடன் சேர்ந்து பல மாணவர்களுக்கு இசை, நடனம், மற்றும் மிருதங்கம் கற்றுக் கொடுத்தார். 'தஞ்சை பொன்னையா’ என்று அழைக்கப்பட்டார். தஞ்சை மிருதங்க வித்துவான்‌ வைத்தியநாதய்யர்‌ என்பவர்‌ இவரிடமே மிருதங்கம்‌ கற்றுத்‌ தேர்ந்தார்‌. தந்தை இறந்த பின்னர், சிதம்பரத்தில் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ஆரம்பித்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைப் பேராசிரியரானார். மாணவர்களுக்கு கர்நாடக இசை, மிருதங்கம் ஆகியவை கற்றுக் கொடுத்தார். பல சுவரஜதிகள், வர்ணங்கள், கீர்த்தனைகள், தில்லானாக்களை இயற்றி அவற்றை மாணவர்களுக்கும் கற்றுக் கொடுத்தார். பொன்னையா பிள்ளையின் மகன் க. பொ. கிட்டப்பா பிள்ளை ஒரு பிரபலமான நடன ஆசிரியர். காஞ்சிபுரம்‌ நயினாப்‌ பிள்ளை, வீணை தனம்மாள்‌, திருச்சி வயலின்‌ கோவிந்தசாமிப்‌ பிள்ளை போன்ற பிரபல இசைவாணருக்கு இவரிடத்தில்‌ மிக்க மதிப்பு.

இசைபற்றிய எல்லாப்‌ பிரிவுகளுக்கும்‌ இவர்‌ பாடல்கள்‌ இயற்றியிருக்கிறார்‌. 1928இல்‌ இவருக்கு சுதேசமித்திரன்‌ சீனிவாசய்யர்‌ மூலம்‌ அண்ணாமலைச்‌ செட்டியார்‌ பழக்கம்‌ ஏற்பட்டது. தமிழிசைக்‌ கல்லூரி ஏற்பட்ட காலத்தில்‌ இங்கே வாய்ப்பாட்டு, மிருதங்கம்‌ இரண்டுக்கும்‌ ஆசிரியராக நியமிக்கப்பட்டார்‌. புதிய பல ஐதி சுரங்கள்‌, தாள வர்ணங்கள்‌, தில்லானாக்கள்‌, கீர்த்தனைகள்‌ செய்து மாணாக்கருக்குப்‌ போதித்து வந்தார்‌. அண்ணாமலைப்‌ பல்கலைக்‌ கழக இசைக்கல்லூரியில்‌ பலதுறைகளில்‌ பங்குகொண்டு உழைத்தார்‌. முன்னோருடைய பலவகைப்‌ பாடல்களையும்‌ மாணாக்கர்‌ மூலம்‌ பிரசாரம்‌ செய்தார்‌.

மாணவர்கள்

  • சாத்தூர் ஏ. ஜி. சுப்பிரமணியம்
  • டாக்டர் எஸ். இராமநாதன்
  • வைத்தியநாதய்யர்

விருது

  • சங்கீத கலாநிதி விருது, 1933. வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
  • சென்னை சங்கத வித்வத்‌ சபையில்‌ பெரும்பங்கு கொண்டிருந்து, ஓர்‌ ஆண்டு விழாவில்‌ தலைமை வகித்து 'சங்கதேத கலாநிதி' என்று பாராட்டப்‌ பெற்றார்‌.
  • இசை நூல்‌ எழுதிப்‌ பரிசு பெற்றார்‌.

மறைவு

தஞ்சையில்‌ ஒரு கைவாரப்‌பிரபந்தம்‌ செய்துமுடிக்கும்‌ நிலையில்‌ ஜுன் 30, 1945இல்‌ உயிர்‌ துறந்தார்‌.

நூல்கள்

  • 'இசை இயல்‌' என்ற எளிய இசை இலக்கண நூலை எழுதினார்.
  • தம்‌ முன்னோர்‌ சாகித்தியங்களைச்‌ சுர தாளக்‌ குறிப்புடன்‌ தஞ்சைப்‌ பெருவுடையான்‌ பேரிசை” என்ற நூலாகத்‌ தொகுத்து வெளியிட்டார்‌.
  • இவர்‌ செய்த பல பாடல்கள்‌ இவர்‌ காலத்திற்குப்பின்‌ இவருடைய பிள்ளைகளான கிருஷ்ணமூர்த்தி, சிவானந்தம்‌ ஆகியோரால்‌ தொகுத்து வெளியிடப்பட்டன.
  • இசைபற்றிய எல்லாப்‌ பிரிவுகளுக்கும்‌ இவர்‌ பாடல்கள்‌ இயற்றியிருக்கிறார்‌.
  • இவர் எழுதிய பாடல்களைத் தொகுத்து ராஜா அண்ணாமலை தமிழிசைக் கருவூலம் என்ற பெயரில் ஒரு நூலாக இவரின் பிள்ளைகள் தஞ்சை க. பொ. கிருஷ்ணமூர்த்தி. தஞ்சை க. பொ. சிவானந்தம் ஆகியோர் 1949 ஆம் ஆண்டு வெளியிட்டனர்.

உசாத்துணை

  • தமிழ்‌ இசை இலக்கிய வரலாறு (தொகுதி - 1) - அசிரியர்‌ மு. அருணாசலம்‌: பதிப்பாசிரியர்‌ உல. பாலசுப்பிரமணியன்‌ - அக்டோபர்‌ 2009