being created

பெருஞ்சித்திரனார்

From Tamil Wiki
Revision as of 08:26, 15 July 2023 by ASN (talk | contribs) (Para Added; Image Added)
பெருஞ்சித்திரனார்

பெருஞ்சித்திரனார் (பெருஞ்சித்திரன்; துரைமாணிக்கம்; இராசமாணிக்கம்) (மார்ச் 10, 1933 – ஜூன் 11, 1995) தனித்தமிழ் இயக்க அறிஞர். கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர். தனித் தமிழை ஆதரித்து இதழ்களை நடத்தினார். இந்தி எதிர்ப்புப் போராட்டம், தமிழீழப் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றார். பாவலரேறு என்று போற்றப்பட்டார். தமிழக அரசு பெருஞ்சித்திரனாரின் நூல்களை நாட்டுடைமை ஆக்கியது.

பிறப்பு, கல்வி

இராசமாணிக்கம் என்னும் இயற்பெயரை உடைய பெருஞ்சித்திரனார், சேலம்மாவட்டத்தில் உள்ள சமுத்திரம் என்ற ஊரில், மார்ச் 10, 1933 அன்று, இரா. துரைசாமி - குஞ்சம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். சேலம் நகராட்சித் தொடக்கப்பள்ளியிலும், கோட்டை நகராட்சி உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்றார். சேலம் நகராண்மைக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

பெருஞ்சித்திரனார், சேலத்தில் கூட்டுறவுத்துறையில் ஆய்வாளராகப் பணியாற்றினார். வனத்துறையில் எழுத்தராகச் சில ஆண்டுகள் பணிபுரிந்தார். தொடர்ந்து புதுச்சேரி அஞ்சல் துறையில் எழுத்தராகச் சில வருடங்கள் பணியாற்றினார். கடலூர் அஞ்சலகத்தில் துணை அஞ்சல் தலைவராகப் பணிபுரிந்தார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றதால் பணி நீக்கம் செய்யப்பட்டார். பெருஞ்சித்திரனார் மணமானவர். மனைவி, கமலம் (எ) தாமரை. மகன்கள்:பூங்குன்றன், பொழிலன். மகள்கள்: பொற்கொடி, தேன்மொழி, செந்தாழை, பிறைநுதல்.

இலக்கிய வாழ்க்கை

தொடக்கம்

பெருஞ்சித்திரனார் பள்ளியில் படிக்கும்போதே மல்லிகை, பூக்காரி என்னும் பாடல் தொகுப்புகளை இயற்றினார். தமிழறிஞர் வை. பொன்னம்பலனார், சேலம் க. நடேசனார் ஆகியோர் பெருஞ்சித்திரனாரின் உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியர்களாகவும், தேவநேயப் பாவாணர், பேராசிரியர் வீ. உலகவூழியனார், பேராசிரியர் காமாட்சி குமாரசாமி ஆகியோர் கல்லூரியில் தமிழாசிரியர்களாகவும் அமைந்து பெருஞ்சித்திரனாரின் தமிழ்ப் பற்றை வளர்த்தனர்.

இதழ்களில் பங்களிப்பு

பெருஞ்சித்திரனார் வானம்பாடி, குயில், தென்றல், தமிழ்நாடு, முல்லை, பகுத்தறிவு, குத்தூசி, ஜனநாயகம், செந்தமிழ்ச் செல்வி, தமிழீழம், பூஞ்சோலை, தமிழ்ப்பொழில், நெய்தல், தமிழ்நெஞ்சம், தமிழ்ப் பார்வை, குறள் நெறி, தேனமுதம், உரிமை முழக்கம், பாவை, செம்பருதி போன்ற இதழ்களில் பல மரபுப் பாடல்களை எழுதினார்.  மெய்மைப்பித்தன், தாளாளன், அருணமணி, பாஉண்தும்பி, கெளனி போன்ற புனைபெயர்களில் எழுதினார்.

நூல் வெளியீடு

பெருஞ்சித்திரனார், கவிஞர் பாரதிதாசனுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்ட பின்னர், தனது  ‘பூக்காரி’ என்னும் பாடால் தொகுப்பைச் செம்மைப்படுத்தி ‘கொய்யாக்கனி’ என்று பெயர் மாற்றம் செய்தார். அந்நூல் பாரதிதாசனின் ‘குயில்’ இதழ் அச்சகத்தில் அச்ச்சிடப்பட்டது. இந்நூலுக்குப் தேவநேயப் பாவாணர் அணிந்துரையும் பாரதிதாசன் வாழ்த்துப் பாடலும் அளித்து ஊக்குவித்தனர். பெருஞ்சித்திரனார், கொய்யாக்கனியை தொடர்ந்து பல பாடல் தொகுப்புகளையும், கட்டுரை நூல்களையும் வெளியிட்டார்.

பெருஞ்சித்திரனார், தமது படைப்புகளில் புதிய தமிழ்ச்சொற்களை உருவாக்கியும், பிறமொழிச் சொற்கள் கலவாமலும் எளிய நடையில், தனித் தமிழில் எழுதினார். பெருஞ்சித்திரனார், 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.

இதழியல்

பெருஞ்சித்திரனார் பள்ளியில் படிக்கும்போதே குழந்தை, மலர்க்காடு போன்ற கையெழுத்து இதழ்களை நடத்தினார்.

தென்மொழி - தனித்தமிழ் இதழ்
தென்மொழி (1952)

பெருஞ்சித்திரனார், 1952-ல், ’தென்மொழி’ என்ற பெயரில் தனித் தமிழ் இயக்க ஆதரவு இதழ் ஒன்றைத் தொடங்கி நடத்தினார். தேவநேயப் பாவாணர் இதழின் சிறப்பாசிரியராகப் பணிபுரிந்தார். பெருஞ்சித்திரனார், அரசுப் பணியில் இருந்ததால் தன் இயற்பெயரான துரை மாணிக்கம் என்பதற்குப் பதிலாக ‘பெருஞ்சித்திரன்’ என்ற புனைபெயரைச் சூட்டிக் கொண்டு அவ்விதழை நடத்தினார். இந்தி மற்றும் வடமொழியை எதிர்த்தும், தனித்தமிழை ஆதரித்தும் பல கட்டுரைகளை அவ்விதழில் எழுதினார். ம. இலெ. தங்கப்பா, மு. தமிழ்க்குடிமகன் தொடங்கி பலர் இவ்விதழுக்குப் பங்களித்தளனர். ’தென்மொழி’ இதழ் சில ஆண்டுகாலம் அரசால் தடை செய்யப்பட்டுப் பின் மீண்டும் வெளிவந்தது.

தமிழ்ச்சிட்டு - சிறார் இதழ்
தமிழ்ச் சிட்டு (1965)

பெருஞ்சித்திரனார், சிறார்களிடம், இளம் வயது முதலே தமிழ்ப் பற்று வளர வேண்டும் என்று விரும்பினார். குறிப்பாக, தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் தமிழ்ப் பற்று மிக்கவர்களாக உருவாக வேண்டும் என்று விரும்பினார். அதற்காகவே தனித் தமிழ் சிறார் இதழான தமிழ்ச்சிட்டு இதழை, 1965-ல் தொடங்கினார். இளம் மாணவர்களுக்குத் தேவையான கலை, அறிவியல், வாழ்வியல் கருத்துகளைத் தாங்கி அவ்விதழ் வெளிவந்தது.

தமிழ்நிலம் (1982)

பெருஞ்சித்திரனார், 1981 ஆம் ஆண்டு தமிழ், தமிழர் நலன்களைக் காக்க, ‘உலகத் தமிழின முன்னேற்றக் கழகம்’ என்பதனைத் தொடங்கினார். அவ்வியக்கத்திற்காக வெளியிடப்பட்ட செய்தி இதழ் தமிழ்நிலம்.

பதிப்பு

பெருஞ்சித்திரனார், தனது நூல்களை அச்சிடுவதற்காக தென்மொழி மின் அச்சகம் என்பதைக் கடலூரில் தொடங்கி அதன் மூலம் பல நூல்களையும், தென்மொழி உள்ளிட்ட இதழ்களையும் வெளியிட்டார். பின் சென்னையில் ‘தென்மொழி பதிப்பகம்’ என்பதைத் தொடங்கி அதன் மூலம் நூல்களையும், இதழ்களையும் வெளியிட்டார்.

அமைப்புப் பணிகள்

பெருஞ்சித்திரனார், தமிழகம் முழுவதும் பயணம் செய்து பல சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். பெருஞ்சித்திரனார் தமிழகத்தில் மட்டுமின்றித் தமிழ் மொழியின் தனித்தன்மை குறித்து, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மலையகம், ஐரோப்பா போன்ற  வெளிநாடுகளுக்கும் சென்று சொற்பொழிவாற்றினார் உலகத் தமிழ் மாநாடுகளில் பங்கேற்று உரையாற்றினார். தமிழ்நாட்டு ஆலயங்களில் தமிழ் மொழி வழி்பாட்டு மொழியாக வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றார்.

பெருஞ்சித்திரனார் மொழி, இன, நாட்டு விடுதலை முயற்சிகளை வலுவாக்கவும் உலகத் தமிழ்களை ஒன்றிணைக்கவும் 1981-ல்,  ‘உலகத் தமிழர் முன்னேற்றக் கழகம்’ என்பதைத் தோற்றுவித்தார். ‘தமிழக மக்கள் விடுதலைக் கூட்டணி’ என்பதை ஒருங்கிணைத்து அதன் பொறுப்பாளராகச் செயல்பட்டார். ‘ஒடுக்கப்பட்டோர் உரிமை மீட்டுக் கூட்டமைப்பு’ என்ற அமைப்பின் தலைவராகப் பணிபுரிந்தார். ‘தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு’ என்பதன் அமைப்பாளராகப் பணிபுரிந்தார். தேவநேயப் பாவாணர் தலைவராக இருந்த  ’உலகத் தமிழ்க் கழக’த்தின் பொதுச் செயலாளராகப் பணிபுரிந்தார். ‘தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாடு' என்ற பெயரில் பல மாநாடுகளை நடத்தினார்.

தனித்தமிழ் இயக்கப் பணிகள்

பெருஞ்சித்திரனார் கல்லூரியில் படிக்கும்போது பாவாணரின் தமிழாராய்ச்சி, தனித்தமிழ்க் கொள்கை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார். தனித்தமிழ் இயக்க ஆதரவாளரானார். வடமொழியும்  பிறமொழியும் கலவாத தூய தமிழ் வழக்கு, தமிழின நலமுன்னேற்றம், பொதுவுடைமைக் கோட்பாடு போன்றவற்றை லட்சியமாகக் கொண்டு செயல்பட்டார். தமிழ்மொழியின் சிறப்பு குறித்தும் இந்தி எதிர்ப்பு குறித்தும் இதழ்களில் எழுதினார், பேசினார். போராட்டங்களில் கலந்துகொண்டார். தனித்தமிழில் இதழ்களையும் நூல்களையும் படைத்தார். தனித் தமிழ் இயக்க வளர்ச்சிக்காக மூன்று இதழ்களைத் தொடங்கி நடத்தினார். தம்முடைய இதழ்களில் பல தமிழறிஞர்கள் குறித்தும் அவர்களின் தமிழ்ப் பணிகள் குறித்தும் எழுதி கவனப்படுத்தினார்.




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.