பூவை கலியாணசுந்தர முதலியார்

From Tamil Wiki
Revision as of 11:19, 7 March 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "பூவை கலியாணசுந்தர முதலியார் ( 1854- 1918) (பூவை கல்யாணசுந்தர முதலியார்) தமிழறிஞர், எட்டுசெயல்களை ஒருங்கே செய்யும் எண்கலைக் கவனகம் கலையில் தேர்ந்தவர். பதிப்பாளர். இராமலிங்க வள்ளலாரின...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பூவை கலியாணசுந்தர முதலியார் ( 1854- 1918) (பூவை கல்யாணசுந்தர முதலியார்) தமிழறிஞர், எட்டுசெயல்களை ஒருங்கே செய்யும் எண்கலைக் கவனகம் கலையில் தேர்ந்தவர். பதிப்பாளர். இராமலிங்க வள்ளலாரின் அருட்பா குறித்த விவாதத்தில் கலந்துகொண்டவர்.

பிறப்பு கல்வி

தொண்டை மண்டலம்,புலியூர்க் கோட்டத்தில் உள்ள புத்தவேடனுநத்தம் எனும் ஊரில் அண்ணாசாமி-உண்ணாமுலை இணையருக்கு 10-மே-1854 ல் பிறந்தார். அவர்களின் பரம்பரை போர்வீரர்களாகவும் அறிஞர்களாகவும் புகழ்பெற்றது. அவருடைய முன்னோரான சாமி முதலியார் புலியுடன் போரிட்டு கொன்றவர் என்பதனால் புலிக்குத்தி முதலியார் என அழைக்கப்பட்டவர். அவர் மகன் சுப்பராய முதலியார் ஹைதராபாத் நிஜாம் போன்றவர்களின் படையில் இருந்தவர். அவர் மகன் அண்ணாசாமி முதலியார். அவர் பஞ்சதந்திரம் நூலை தமிழில் எழுதிய தாண்டவராய முதலியாரிடம் தமிழ் கற்றவர். சிலம்பக்கலையில் வல்லவர். அக்காலத்தில் வாழ்ந்த இராமச்சந்திரக் கவிராயர் என்பவர் அண்ணாசாமி முதலியாரைப் புகழ்ந்து பாடல்களை எழுதியிருக்கிறார். அண்ணாசாமி முதலியார் ரங்கூனில் வேலைபார்த்து சேர்த்த செல்வத்துடன் சென்னை பறங்கிமலை அருகே வீடுகளும் நிலங்களும் வாங்கி அங்கே தங்கினார்.

அண்ணாசாமி முதலியார் 1859ல் பூவிருந்தவல்லியில் குடியேறினார். பூவை கலியாணசுந்தர முதலுயார் பூவிருந்தவல்லியில் தொடக்கக் கல்வியை முடித்தார். அங்கே அவருக்கு ஆசிரியராக இருந்த பூங்காவனக் கவிராயர் அவருக்கு தமிழ்க்கல்வியை ஊட்டினார். கலியாணசுந்தர முதலியார் தந்தையிடமும் தமிழ் பயின்றார். 1869 இல் சென்னை பச்சையப்பன் பாடசாலையில் தமிழும் ஆங்கிலமும் கற்றார். சைவ சித்தாந்தத்தை இராமலிங்கத் தம்பிரானிடம் பயின்றார். 1875 முதல் செங்கல்பட்டு மிஷன் பாடசாலையில் பயின்றார். அங்கு பேறை ஜெகந்நாதப் பிள்ளையிடம் தமிழ் இலக்கணங்கள் கற்றார்.

பூவை கல்யாணசுந்தர முதலியார்

தனிவாழ்க்கை

பூவை கல்யாணசுந்தர முதலியார்1879-ல் மேடவாக்கம் வெங்கடாசல முதலியார் மகள்பாப்ப்பாத்தியம்மாளை மணந்து சிவஞானம் என்னும் பெயருள்ள ஒரு பெண்குழந்தைக்கு தந்தையானார். சென்னை புரசைவாக்கம் பொதுப்பணித்துறை பொறியாளயர் அலுவலகத்தில் குமாஸ்தா வேலை கிடைத்தது. பின்னர் பரங்கிமலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டபோது தொலைவுக்குச் செல்லமுடியாது என வேலையை துறந்து பூவிருந்தவல்லியில் தன் மைத்துனர் கடையிலேயே வேலைபார்த்தார்

இலக்கியப்பணி

பூவை கலியாணசுந்தர முதலியார் பழைய கவிமரபைச் சேர்ந்தவர். சிற்றிலக்கியங்களின் வகைகளை இறுக்கமான சொற்சேர்க்கைகள் கொண்ட செய்யுட்களாக எழுதினார். பெரும்பாலும் சைவ மரபைச் சேர்ந்த பக்தித் தோத்திரங்கள். 877-ல் செங்கல்பட்டு சுந்தரவிநாயகர் பதிகம்,ஏகாம்பரேசர் பதிகம், காமாட்சியம்மன் பதிகம் ஆகியவற்றை இயற்றினார்.

பொதுவாக அவர் பாடிய நூல்களில் முக்கியமானவை இரண்டு. அன்று நூல்வடிவில் ஆங்கிலத்தில் வெளியான இந்திய தேச வரலாற்றை 700 விருத்தபாடல்களில் பரதகண்ட இதிகாசம் என்னும் நூலாக இயற்றினார். இந்தியன் பீனல் கோடு சட்டத்தை, 500 விருத்தங்களால் நீதிசாகரம் என்ற பெயரில் எழுதினார். பதிகங்களைத் தவிர முதலியார் இயற்றிய நூல்கள் 40. பரிசோதித்து அச்சிட்ட நூல்கள் 96. சாற்றுகவிகள் முதலிய தனிப்பாடல்கள் 864.

மோசூர் கந்தசாமி முதலியார், வல்லை சண்முகசுந்தர முதலியார், புழலை திருநாவுக்கரசு முதலியார், மணி திருநாவுக்கரசு ஆகியோர் குறிப்பிடத்தக்க மாணவர்கள். நாராயணி அம்மையார், மனோன்மணி அம்மையார், அகிலாண்டநாயகி அம்மையார் ஆகிய மாணவிகளுக்கும் தமிழ் கற்பித்தார். அது அக்காலத்தில் மிக அரிய ஒரு செயல்.

அஷ்டாவதானம்

1878-ல் தசாவதனியார் முன்னிலையில், திருக்கழுக்குன்ற வேதமலை அடிவரத்தில் அஷ்டாவதானம் செய்து காட்டினார்.

சமயப்பணி

ஜே.எம். நல்லுச்சாமிப்பிள்ளை தொடங்கி நடத்திய சித்தாந்தம் எனும் இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்று சைவசித்தாந்தக் கருத்துக்களை எழுதினார். சித்தாந்தர் சரபம் என அழைக்கப்பட்டார்

சென்னையில் மெய்கண்ட சந்தானசபை என்ற சபையை நிறுவி, அதில் சைவ நூல்நிலையம் ஒன்றை அமைத்தார்.பெரியபுராணம் முதலிய நூல்கள் பற்றி பேருடைகள் ஆற்றினார். நடராஜ சபை என்ற பெயரில் சைவ வழிபாட்டுப் பணிகளைச் செய்தார்.

அருட்பா மருட்பா விவாதம்

பூவை கல்யாணசுந்தர முதலியார் அருட்பா மருட்பா விவாதத்தில் இராமலிங்க வள்ளலார் தரப்பின் நின்று வாதிட்டவர்

மறைவு

வாழ்வின் இறுதியில் காஞ்சிபுரம் ஞானப்பிரகாச சுவாமிகளிடம் துறவு மேற்கொண்டு கலியாணசுந்தர யதீந்தரர் என்ற பெயருடன் துறவியாக வாழ்ந்தார்.1918 ஆம் ஆண்டு மறைந்தார்.

நூல்கள்

முதலியார் இயற்றிய நூல்கள் 40. பரிசோதித்து அச்சிட்ட நூல்கள் 96.

  • பரதகண்ட இதிகாசம்
  • நீதிசாகரம்

உசாத்துணை