புலியூர் முருகேசன்

From Tamil Wiki
புலியூர் முருகேசன், நன்றி : Tamilwriters.in

புலியூர் முருகேசன் (மே 5, 1970) கவிஞர், சிறுகதை மற்றும் நாவலாசிரியர். 'பயணம் புதிது' என்ற சிற்றிதழின் ஆசிரியராக தொடர்ந்து பத்து ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். அரசியல்மயப்படுத்தப்பட்ட சமகால கருத்துக்களை தன் எழுத்துகளின் மையக்கருவாக பயன்படுத்தி வரும் எழுத்தாளர். ‘பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு’ என்ற சிறுகதைத் தொகுப்பு ஏற்படுத்திய சர்ச்சை வழியாகப் பொதுக் கவனத்துக்கு வந்தவர்.  

பிறப்பு கல்வி

புலியூர் முருகேசன் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த டி.செட்டியூரிலுள்ள ஆனைப்பட்டி எனும் ஊரில் பழனியப்பன் - காமாட்சி தம்பதியருக்கு மே 5, 1970 அன்று பிறந்தார். இவருக்கு நான்கு வயது இருக்கும்போது, இவரது குடும்பம்  ஆனைப்பட்டியிலிருந்து கரூர் மாவட்டத்திலுள்ள புலியூருக்கு இடம் பெயர்ந்தது.  தனது ஊரின் பெயரான புலியூரை தன் இயற்பெயருக்கு முன்னால் சேர்த்து புலியூர் முருகேசன் என்று அறியப்படுகிறார்.

புலியூரிலுள்ள கவுண்டன்பாளையம் நடுநிலைப் பள்ளி, கரூரிலுள்ள பசுபதீஸ்வரா உயர்நிலைப் பள்ளி மற்றும் கரூர் நகர்மன்ற மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலையிலுள்ள அரசு கல்லூரியில்  வேதியியல் துறையில் பி. எஸ். சி பட்டப்படிப்பை படிக்கத் தொடங்கி சூழல் காரணமாக படிப்பை நிறைவுசெய்ய முடியாமல் பாதியிலேயே கைவிட்டார்.

தனி வாழ்க்கை  

புலியூர் முருகேசனின் மனைவியின் பெயர் செல்வராணி. இவர்களுக்கு பாரதி மார்க்ஸ் மற்றும் பகத்சிங் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கொசுவலை ஏற்றுமதி வியாபாரம், எல். ஐ. சி முகவர் என பல பணிகளை செய்தவர். சமைப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர், தற்போது வசித்து வரும் தஞ்சாவூரில் தோழர் மெஸ் என்ற அசைவ உணவகத்தை நடத்தி வருகிறார்.

படைப்புலகம்

புலியூர் முருகேசன்

தன் ஆரம்ப காலங்களில் அதிகம் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த புலியூர் முருகேசன், 1991-ஆம் ஆண்டு தன் முதல் கவிதை தொகுப்பான "ஒரு தோழியின் வாசலில்" வெளியிட்டார். தொடர் இலக்கிய வாசிப்பிலும், கவிதை எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தவர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் சிறுகதைகளால் ஈர்க்கப்பட்டு, பின் தீவிரமாக சிறுகதைகளை எழுதத்துவங்கினார். இவரது "சிங்கம் ப்ராஜெக்ட்" என்ற முதல் சிறுகதை  2013-ஆம் ஆண்டு 'குறி' எனும் சிற்றிதழில் வெளியானது. அதை தொடர்ந்து இவரது ஏனைய சிறுகதைகள் உயிர்எழுத்து, உயிர்மை, நிலவெளி, காமதேனு, குங்குமம், ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகளிலும் வெளியாயின. முதல் நாவல் "உடல் ஆயுதம்" 2019-ஆம் ஆண்டு உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

விவாதங்கள்

புலியூர் முருகேசன் "பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு" என்ற சிறுகதைத் தொகுப்பை 2014-ல் வெளியிட்டார். அதிலிருந்த "நான் ஏன் மிகை அலங்காரம் செய்து கொள்கிறேன்" என்ற சிறுகதை புலியூரில் வாழ்ந்த ஒரு குறிப்பிட்ட சாதியினர் மத்தியில் கருத்தியல் வேறுபாட்டை ஏற்படுத்தியது. அதன் காரணமாக அவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு, புலியூரில் வாழும் சூழலை இழந்து  குடும்பத்துடன் தஞ்சாவூருக்கு இடம் பெயர்ந்தார். மேலும் புலியூரிலிருந்து வெளியேற்றப்பட்ட பின் தொடர் கனவுகளால் அலைகழிவதாகவும் அதையே தன் படைப்பூக்கமாக கொள்வதாகவும் பதிவு செய்திருக்கிறார்.

மதிப்பீடு

புலியூர் முருகேசன் போர்கேசின் பாதிப்பு உள்ள எழுத்தாளர் என தன்னை அடையாளப்படுத்திக்கொள்பவர்.  அரசியல்மயப்படுத்தப்பட்ட சமகால கருத்துகளை அதிகமும் தன் புனைவிலக்கியத்தில் கையாள்பவர். "கொந்தளிப்பு மற்றும் எல்லாவற்றையும் அரசியலாக பார்ப்பது அவருடைய இயல்பு" என எழுத்தாளர் ஸ்டாலின் சரவணன் அவர் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

நூல் பட்டியல்

கவிதைத் தொகுப்பு

  1. ஒரு தோழியின் வாசலில், சூரியன் பதிப்பகம்,1991

சிறுகதைத் தொகுப்புகள்

  1. பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு, ஆம்பிரம்  பதிப்பகம், 2014
  2. மக்காச் சோளக் கணவாய், உயிர்மை பதிப்பகம், 2017
  3. இழவு வீட்டுக் கதைகள், குறி வெளியீடு, 2019

நாவல்கள்

  1. உடல் ஆயுதம், உயிர்மை பதிப்பகம், 2015
  2. மூக்குத்தி காசி, உயிர்மை பதிப்பகம், 2017
  3. படுகைத் தழல், உயிர்மை பதிப்பகம், 2018
  4. பாக்களத்தம்மா. நந்தி பதிப்பகம், 202

பரிசுகளும், விருதுகளும்

  1. நெருஞ்சி இலக்கிய விருது- 2018 - ("மூக்குத்தி காசி" நாவலுக்காக)
  2. சௌமா விருது - 2019 -("படுகைத் தழல்" நாலுக்காக)
  3. கந்தர்வன் சிறுகதை விருது - 2019 -  ("நாகையா திருடித் தின்ற நடுத்தோட்டம்" என்ற சிறுகதைக்காக)

உசாத்துணை

  1. எழுத்தாளர் புலியூர் முருகேசன், எழுத்தாளுமைகள் படைப்புகளும் பணிகளும், 27 June 2021
  2. சமத்துவத்தை நோக்கிப் பேசுவதுதான் இலக்கியம்!- புலியூர் முருகேசன் பேட்டி, இந்து தமிழ் திசை, 08 March 2021
  3. ஒடுக்கப்பட்டோரின் நிலங்கள் கைமாற்றப்பட்ட கதையாடலே`படுகைத் தழல்’!’’ - புலியூர் முருகேசன், விகடன் 04 Jan 2019
  4. புலியூர் முருகேசன் தாக்கப்பட்ட விவகாரம், வா. மணிகண்டன், நிசப்தம் 26 Feb 2015
  5. மாற்று வரலாறு பேசுவோம், ஆதவன் தீட்சண்யா, வல்லினம் 1 May 2015