புதுமைப்பித்தன் விவாதம்,மலேசியா

From Tamil Wiki
Revision as of 08:44, 28 June 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "புதுமைப்பித்தன் விவாதம் மலேசியா (1951-1952) மலேசியாவில் புதுமைப்பித்தனின் இலக்கியத் தகுதி பற்றி இதழ்களில் நடந்த ஒரு விவாதம். புதுமைப்பித்தன் கதைகள் ஆபாசமானவை, மக்களுக்கு உதவாதவை எ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

புதுமைப்பித்தன் விவாதம் மலேசியா (1951-1952) மலேசியாவில் புதுமைப்பித்தனின் இலக்கியத் தகுதி பற்றி இதழ்களில் நடந்த ஒரு விவாதம். புதுமைப்பித்தன் கதைகள் ஆபாசமானவை, மக்களுக்கு உதவாதவை என்று குற்றம்சாட்டப்பட்டது. அதற்கு நவீன எழுத்தாளர்கள் மறுப்புரை கூறினர். பின்னாளில் முக்கியமான எழுத்தாளர்களாக மலர்ந்த பலர் இந்த விவாதத்தில் கலந்துகொண்டனர். இந்த விவாதம் நவீன இலக்கியத்தின் அடிப்படைகளை தெளிவுபடுத்த உதவுவதாக அமைந்தது.

பின்னணி

வீ.க.சபாபதி என்னும் மலேசிய எழுத்தாளர் 30 செப்டெம்பர் 1951 அன்று தமிழ் முரசு இதழில் ‘இலக்கியமேதை யார்?’ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார்.30 ஜூன் 1948 ல் புதுமைப்பித்தன் மறைந்தபோது அவர் குடும்பத்திற்கு நிதி திரட்டுவதற்காக கல்கி முதலிய எழுத்தாளர்கள் முயன்றனர். மலேசியாவிலும் தமிழ்முரசு சார்பில் நிதி திரட்டப்பட்டது. அதையொட்டி சென்னையில் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பல இளம்படைப்பாளிகள் புதுமைப்பித்தன் இலக்கியமேதை என்று கூறியதற்கு மறுப்பாகவே வீ.க.சபாபதி இக்கட்டுரையை எழுதினார்.

வீ.க.சபாபதியின் கட்டுரை

வீ.க.சபாபதியின் கட்டுரையின் சாராம்சமான கருத்துக்கள் இவை

  • புதுமைப்பித்தன் குடும்பம் வறுமையில் வாடுகிறது என்றால் நிதி அளிக்கலாம், ஆனால் அதன்பொருட்டு அவரை இலக்கியமேதை என்று கருதவேண்டியதில்லை. தமிழகத்தில் உண்மையாகவே போற்றப்படவேண்டியவர்கள் திரு.வி. கல்யாணசுந்தர முதலியார், சுத்தானந்த பாரதி, மு. வரதராசன் போன்றவர்களே.
  • தொ.மு.சி.ரகுநாதன் நடத்திவந்த முல்லை மாத இதழில் ஒன்பதாவது இலக்கத்தில் புதுமைப்பித்தன் எழுதிய விபரீத ஆசை என்ற கதை உள்ளது, இது ஓர் ஆபாசக்கதை.
  • மணிக்கொடி குழுவினர் அதில் யாத்ரா மார்க்கம் என்னும் பகுதியில் சி. சுப்ரமணிய பாரதியார்ரை ’பாரதி வரகவியா’ என்னும் தலைப்பில் விவாதப்பொருளாக்கியிருக்கின்றனர். பாரதிக்கே அந்த நிலை என்றால் புதுமைப்பித்தனையும் விவாதப்பொருளாக்கலாம். புதுமைப்பித்தனை போற்றும் க.நா.சுப்ரமணியம் போன்றவர்கள் இதற்கு பதில் கூறவேண்டும்
  • புதுமைப்பித்தன் செகாவை காப்பியடிக்க முயன்று தோற்றுவிட்டார்

கட்டுரைக்கு மறுப்புகள்

  • 2 அக்டோபர் 1951 ல் சிங்கைதாசன் (இயற்பெயர் தெரியவில்லை) ‘சிந்தனை செய்திடுக’ என்ற பெயரில் எழுதிய மறுப்புக்கட்டுரை தமிழ்முரசு இதழில் வெளிவந்தது. அது ஆபாசம் என்பது இலக்கியத்தை அளக்கும் அளவுகோல் அல்ல என்றும், இலக்கியத்தின் அளவுகோல் உண்மையே என்றும் ஆகவே புதுமைப்பித்தன் இலக்கியமேதையே என வாதிட்டது. ‘தமிழ்க்கதைப்பாதையிலே ஒரு புதிய பாதையை அமைத்தவர். சிந்தித்துச் சிந்தித்து புதிய கருத்துக்களை அமைத்து பலகோணங்களில் இருந்து தமிழை வளர்த்தவர்’ என புதுமைப்பித்தனை மதிப்பிடுகிறது சிங்கைதாசனின் கட்டுரை
  • வீ.க.சபாபதியின் கருத்துக்களை மறுத்து ஆ.இ.முகமது இப்ராகீம் ‘திருகிம்’ என்னும் புனைபெயரில் ‘யார் குற்றம்?’ என்னும் கட்டுரையை தமிழ்முரசு இதழில் எழுதினார். அதில் புதுமைப்பித்தனின் சமூகநோக்கு கொண்ட பொன்னகரம் போன்ற கதைகளைச் சுட்டிக்காட்டி ஒருகதையை வைத்து புதுமைப்பித்தனை நிராகரிக்க முடியாது என்றார்.
  • 11-நவம்பர் 1951 இதழில்சிங்கப்பூர் எழுத்தாளரான பி. கிருஷ்ணன் (பெ.கிருஷ்ணன்) விவாதங்களுக்கு நேரடியாக மறுப்பு சொல்லாமல் புதுமைப்பித்தனின் கதைகளின் இலக்கியத் தகுதியை விரிவாக நிறுவி, ‘சிந்திக்கட்டும்’ என்ற பெயரில் கட்டுரை ஒன்றை எழுதினார். மலேசிய இலக்கியத்தில் புதுமைப்பித்தன் பற்றி எழுதப்பட்ட நல்ல கட்டுரைகளில் ஒன்று அது. புதுமைப்பித்தன் மீது கொண்ட ஈடுபாட்டால் கிருஷ்ணன் பின்னாளில் புதுமைதாசன் என்ற பெயரில் கதைகள் எழுதினார்
  • பெ.கிருஷ்ணனின் கருத்தை ஆதரித்து கந்தசாமி வாத்தியார் என்னும் பெயரில் சுப.நாராயணன் எழுதிய கட்டுரையில் ஆபாசத்தை அளவுகோலாகக் கொண்டு பார்க்கலாகாது என்று வாதிட்டதுடன் கம்பரசம் என்னும் தலைப்பில் சி.என்.அண்ணாத்துரை எழுதிய கட்டுரைகளை சுட்டிக்காட்டி கம்பன் ஆபாச எழுத்தாளரா என்று கேட்டிருந்தார்.
  • 23-நவம்பர் 1951ல் கொலாலம்பூரைச்சேர்ந்தவரான அ.சேதுராமன் ‘புதுமைப்பித்தன் இலக்கியகர்த்தா’ என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையில் புதுமைப்பித்தனை சிறந்த இலக்கிய ஆசிரியர் என்று போற்றி, இலக்கிய மேதையான டால்ஸ்டாயின் கிறுக்குத்தனங்களைக் கொண்டு அவரை மதிப்பிட முடியுமா என்று கேட்டிருந்தார்.
  • 16 டிசம்பர் 1951 ல் புதுமைப்பித்தன் இலக்கியமேதையே என்னும் கட்டுரையை எம்.எஸ்.மாயத்தேவன் எழுதியிருந்தார். புதுமைப்பித்தனின் புதிய நடை, பார்வை ஆகியவற்றை இக்கட்டுரை குறிப்பிட்டிருந்தது.

கட்டுரைக்கு ஆதரவுகள்

  • 16 டிசம்பர் 1951ல் இர.வெங்கடேசன் என்பவர் வீ.க.சபாபதியின் கட்டுரையை ஆதரித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
  • 19 டிசம்பர் 1951 ல் சிகாமட் ஊரைச் சேர்ந்த புலிக்கடியன் என்பவரும் புதுமைப்பித்தன் இலக்கியமேதை அல்ல என்று எழுதியிருந்தார்
  • 23 டிசம்பர் 1951ல் மூவாரூர் எம்மார்வி என்ற பெயரில் மா.ராமையா புதுமைப்பித்தன் மேதையல்ல என்னும் பொருள்பட கடிதம் ஒன்றை எழுதினார்
  • 28 டிசம்பர் 1951 ல் வீ.க.சபாபதி ‘நான் கண்ட புதுமைப்பித்தன்’ என்ற தலைப்பில் தன் தரப்பை மீண்டும் வலியுறுத்தி ஒரு கட்டுரையை எழுதினார்
  • 30 டிசம்பர் 1951ல் மெ.சிதம்பரம் என்பவர் புதுமைப்பித்தன் மேதை அல்ல என எழுதினார்.

கட்டுரைக்கு மீண்டும் மறுப்புகள்

  • 1 ஜனவரி 1952ல் எம்.எஸ்.மாயத்தேவன் இர.வெங்கடேசன், எம்மார்வி. புலிக்கடியன், வீ.க.சபாபதி ஆகியோருக்கு பதிலளித்து ஒரு கட்டுடை எழுதினார். ‘புதுமைப்பித்தனின் ஒவ்வொரு கதையிலும் ஆபாசம் உள்ளது. ஆனால் அவர் இலக்கியமேதை என்று நிரூபிப்பதும் அந்த ஆபாசம்தான்’ என்று மாயத்தேவன் குறிப்பிட்டார்
  • 13 ஜனவரி 1952ல் எம்.கே.துரைசிங்கம் எழுதிய கட்டுரையில் புதுமைப்பித்தன் இலக்கியமேதையே என வாதிட்டு ‘புரையோடிய புண்ணை பிளந்து புழுக்கள் நெளிதலை எடுத்துக்காட்டும் மருத்துவ எழுத்தாளன்தான் இன்று நமக்குத்தேவை’ என்று கூறினார் ‘எம்.கே.துரைசிங்கத்தின் கட்டுரை புதிய பரிமாணத்துடனும் ஆழ்மாகவும் பன்னூற் பயிற்சியுடனும் ஒப்பீட்டுப் பார்வையுடனும் எழுதப்பட்டது’ என்று இந்த தலைப்பில் ஆய்வு செய்த முனைவர் ஸ்ரீலட்சுமி குறிப்பிடுகிறார்.

கட்டுரைக்கு மீண்டும் ஆதரவுகள்

  • 13 ஜனவரி 1952ல் இர வெங்கசேடன் மீண்டும் தன் தரப்பை வலியுறுத்தி எழுதினார்
  • 18 ஜனவரி 1952ல் வீ.க.சபாபதி மீண்டும் தன் தரப்பை வலியுறுத்தி எழுதினார்
  • 19 ஜனவரி 1952ல் எம்மார்வி என்னும் பெயரில் எழுதிய மா.ராமையா மீண்டும் தன் தரப்பை எழுதினார் .இம்முறை நையாண்டியுடன் எழுதியிருந்தார்.
  • 31 ஜனவரி 1052ல் வெயிலன் என்பவர் ‘இலக்கிய கர்த்தாக்களா?’ என்னும் தலைப்பில் வீ.க.சபாபதியை ஆதரித்து எழுதினார்.

கட்டுரைக்கு மீண்டும் எதிர்ப்புகள்

  • 22 ஜனவரி 1952ல் சுப நாராயணன் கந்தசாமி வாத்தியார் என்றபெயரில் புதுமைப்பித்தன் ஏன் இலக்கியமேதை என்ற பெயரில் விரிவாக எழுதினார். புதுமைப்பித்தனுக்கும் தனக்குமான நட்பு குறித்தும் எழுதியிருந்தார்.
  • 27 ஜனவரி 1952ல் எம்.எஸ்.மாயத்தேவனின் இரு சிந்தனைச் சிற்பிகள் என்ற கட்டுரை வ.ராமசாமி ஐயங்கார் மற்றும் புதுமைப்பித்தனை ஒப்பிட்டு எழுதப்பட்டு வெளிவந்தது.
  • 30 ஜனவரி 1952ல் அ.நெடுஞ்செழியன் உண்மையை மறைப்பவன் இலக்கியமேதை அல்ல என்ற பெயரில் புதுமைப்பித்தன் இலக்கியமேதையே என்று வாதிட்டு எழுதினார்.
  • 2 பிப்ரவரி 1952ல் பெ.கிருஷ்ணன் மீண்டும் ‘புதுமைப்பித்தன் இலக்கியமேதை என்பதில் தவறில்லை’ என்ற கட்டுரையை எழுதினார்
  • 3 பிப்ரவரி 1952ல் ஒன்றேதான் என்னும் கட்டுரையில் எம்.ஏ.கே என்பவர் மா.ராமையாவின் கட்டுரைக்கு மறுப்பு எழுதினார்