being created

புதுக்கிராமம்

From Tamil Wiki
Revision as of 17:40, 2 July 2023 by Madhusaml (talk | contribs) (Incorrect stage template removed)

புதுக்கிராமம் ( சீனப் புதுக்கிராமம்) – அவசரகாலப் பிரகடனத்தின்போது (1948- 1960)   உட்புறப் பொதுமக்களைக் கம்யூனிச போராளிகளிடமிருந்து விலக்கும் நோக்கோடு பிரிட்டிஷ் அரசால்  மலாயாவில் முன்னெடுக்கப்பட்ட கட்டாய இடப்பெயர்வு திட்டமாகும்.  இத்திட்டத்தின் காரணமாக சுமார் 6  லட்சம் சீனர்கள் தங்கள் பூர்வீக இடங்களிலிருந்து,  ராணுவத்தால் அமைக்கப்பட்ட முள்வேலி முகாம்களுக்கு இடம் மாற்றப்பட்டனர்.

புதுக்கிராமங்கள்

வரலாற்றுப் பின்னணி

இரண்டாம் உலகப் போருக்குப் (1939-45) பின்னர் மலாயாவில்  கம்யூனிச கிளர்ச்சிகள் அதிகரித்தன. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான தீவிரப் போராட்டங்களை மலாயா கம்யூனிச கட்சி தொடங்கியது.   மலாயாவில் ஆங்கிலேயர் வசம் இருந்த தொழில்துறைகளை முடக்குவதன் வழி ஆங்கிலேய ஆட்சியைப் பலவீனப்படுத்தும் நோக்கத்தோடு கம்யூனிஸ்டு இயக்கம் செயல்பட்டது. அதன்பொருட்டு பல ஈயச் சுரங்கங்களிலும்  ரப்பர் தோட்டங்களிலும் ஊடுருவி நாசம் விளைவித்தனர்.  கம்யூனிச ஆதரவு தரப்பு தொழிற்சங்கங்களைத் தோற்றுவித்து தோட்ட நிர்வாகத்துக்கு நெருக்குதல் தந்தனர்.  மேலும், கம்யூனிச இயக்கத்திற்கு எதிராக செயல்பட்ட ஆங்கிலேய தோட்ட நிர்வாகிகளுக்குப் பல்வேறு மிரட்டல்களை விடுத்தனர்.  இதனால் மலாயா  தோட்ட முதலாளிகள் பலர் அச்சுறுத்தலுக்கு ஆளாகினர்.  சிலர் அவசரமாகத் தோட்டங்களை விட்டு வெளியேறி ஐரோப்பாவுக்குத் திரும்பினர்.

அவசரகாலச் சட்டம்

1948 ஆம் ஆண்டு சுங்கை சிப்பூட்டில் மூன்று ஆங்கிலேய தோட்ட நிர்வாகிகள் கம்யூனிஸ்டு போராளிகளால் கொல்லப்பட்டனர். கம்யூனிச போராளிகள் சிலரை ஆங்கிலேய அரசு கைது செய்து கொன்றதன் எதிர்வினையாக இக்கொலைகள் நடந்தன.

எஃபில் தோட்ட (Elphil Estate) நிர்வாகி A.E. Walker தோட்ட அலுவலக அறையில்  சுட்டுக் கொல்லப்பட்டார். சில நிமிட இடைவெளியில், ஃபின் சூன் (Phin Soon) தோட்ட நிர்வாகி John Allison னும் அவரது உதவியாளர்  Ian Christian என்பவரும் கொலை செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் ஆங்கில ஆட்சியாளர்கள் மலாயா கம்யூனிஸ்டு கட்சியினரின் (MCP) மீது கடும் நடவடிக்கை எடுக்க வழியமைத்தது. கம்யூனிஸ்டு நடவடிக்கைகளை முறியடிக்கும் நோக்கோடு ஜூன் 16, 1948 ல் அரசு அவசரச் கால சட்டத்தைப் (state of emergency) பிரகடனப்படுத்தியது. அவசரகாலச் சட்ட நடைமுறையின்படி நாட்டின் பாதுகாப்பு பொறுப்பு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது.  

அவசரக்காலத்தில் ஈடுபட்ட ராணுவம்

அவசரகாலச் சட்டம் அமலாக்கம் செய்யப்பட்டதன் வழி பொது மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு, உணவுப் பங்கீடு கட்டுப்பாடு, சந்தேக நபர்கள் விசாரணையின்றிச் சிறையில் அடைக்கப்படுதல், பல்வேறு தொழிற்சங்கத் தலைவர்கள் கைது என அரசு தீவிரமாக கம்யூனிஸ்டு அழிப்பில் ஈடுபட்டது. 1949 ஆம் ஆண்டு கம்யூனிஸ் ஆதரவாளர்கள் என்ற  சந்தேகத்தின் பேரில் சுமார் பத்தாயிரம் சீனர்கள் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.  மலாயா கணபதி கைது செய்யப்பட்டு  மே 4,1949-ல் தூக்கிலிடப்பட்டார். அவரோடு களப்பணிகளில் ஈடுபட்ட  தீவிர தொழிற்சங்கச் செயல்பாட்டாளர்களும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

கம்யூனிஸ்டுகளின் கொரிலா தாக்குதல்

ஆகவே மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் சின் பெங் தன் குழுவினருடன் காட்டுக்குள் பதுங்கினார். அவர்   மலாயா  தேசிய விடுதலைப் படையைத்  Malayan National Liberation Army (MNLA) தோற்றுவித்து கொரிலா தாக்குதல் முறையில் பிரிட்டிஷ் ராணுவத்துக்குக் கடும் நெருக்கடிகளைக் கொடுத்தார். சின் பெங்குடன் இணைந்த பல MNLA படையினர் இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஆங்கிலேயே ஆதரவுடன் ஜப்பானியர்களுக்கு எதிராக தலைமறைவுப் போரில் ஈடுபட்ட  Malayan Peoples' Anti-Japanese Army (MPAJA) படையினராவர். பிரிட்டிஷ் ராணுவம்  முன்பு கொடுத்திருந்த ஆயுதங்களையும் பயிற்சியையும் கொண்டே அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போர் தொடுத்தனர். அதேபோல்,   ஜப்பானிய ஆதிக்கத்தை நிறுத்த உதவிய கம்யூனிஸ்டு படையையே, பிரிட்டிஷ் போருக்குப் பின்னர் தங்கள் எதிரியாக முத்திரை குத்தி அவர்களை அழிக்கப் பல்வேறு முயற்சிகளை எடுத்தனர்  என்பது வரலாற்று முரண். இரண்டாம் உலகப்போரினால் கடும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருந்த பிரிட்டன் அரசு, மீண்டும் ஒரு போர் நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்காது என்பதைக் கருத்தில் கொண்டே, மலாயாவில்   கம்யூனிஸ்டு போராளிகளுக்கு எதிரான ஆயுத நடவடிக்கையை, ராணுவம் ‘போர்’ என்று வகைப்படுத்தாமல் ‘அவசரகாலம்’ என்று வகைப்படுத்தியது.    ஆயினும் போராளிகளை ஒடுக்க மிக விரிவான போர் வியூகங்களை ராணுவம் உருவாக்கியது.

பிரிக்ஸ் திட்டம்

அவ்வியூகங்களில்  ஒரு பகுதியாக, பரந்த போர் அனுபவம் கொண்ட லெப்டினன் ஜெனரல் சார் ரௌடோன் பிரிக்ஸை ( Leftenan-Jeneral Sir Rawdon Briggs) 1950 ஆம் ஆண்டு மலாயாவுக்கு வரவழைத்து திட்டம் வரையப்பட்டது. அவர் கம்யூனிஸ்டு போராளிகள் வனத்தில் பதுங்கிவாழ கிராமப்புற மக்கள் மற்றும் பூர்வ குடிகளின் உதவியைப் பெறுவதைக் கடுமையாகக் கருதினார். உட்புற மக்கள் போராளிகளுக்கு உணவுகளையும் பிற உதவிகளையும் மறைமுகமாக செய்துவருவதை முற்றாகத் தடுத்து நிறுத்த நினைத்தார். அதன் அடிப்படையிலேயே அவர் தன் கட்டாய மறுகுடியேற்றத்  திட்டத்தை  வரைந்தார்.

அவர் முன்மொழிந்த கட்டாய மறுகுடியேற்றத்  திட்டம் அவர் பெயரிலேயே ‘பிரிக்ஸ் திட்டம்’ என்று பெயர் பெற்றது.

பிரிக்ஸ் திட்டம் இரண்டு அடிப்படை நோக்கங்களைக் கொண்டிருந்தது.

1. உட்புறப் பகுதிகளிலும் வனப்பகுதிகளிலும் வாழும் பொது மக்களை கம்யூனிஸ்டு போராளிகளிடமிருந்து பிரித்து வைப்பது

2. பொதுமக்களை கம்யூனிஸ்டு போராளிகளின் ஆளுமையிலிருந்து மீட்பது.

பிரிக்ஸ் இத்திட்டத்தை வரைந்து கொடுத்தாலும் அவர் தன் உடல் நிலை காரணமாக 1951-ல் பணி ஓய்வு பெற்று மீண்டும் சைபெரஸ் திரும்பினார். 1952-ல் அவர் அங்கேயே மரணமடைந்தார். ரௌடோன்  பிரிக்ஸ் வகித்த செயல்திட்ட தலைமைப் பொறுப்பை சார் ஜெரால்ட் டெம்பெலர் ஏற்றுக் கொண்டார்.

சர் ரெளடன் பிரிக்ஸ்

அவசரகாலச் சட்டம் அமலாக்கப்பட்டதில் போராளிகள் தரப்பு கடுமையாக எதிர்வினையாற்றியது. 1951 அக்டோபர் 6, மலாயா உயர் ஆணையர்  ஹென்ரி கர்னி (Sir Henry Gurney),  கம்யூனிஸ்டு போராளிகளால் ஃபிரேசர் மலை பயணத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.   இக்கொலையை பிரிட்டிஷ் அரசு மிகக் கடுமையாகக் கருதியது. சார் ஜெரால்ட் டெம்பெலர் 1952-ல்  மலாயா உயர் ஆணையர் பதவியை ஏற்றார். அவர் மிகத்தீவிரமாக பிரிக்ஸ் திட்டத்தைச் செயல் படுத்தினார். கம்யூனிஸ்டுகளை முற்றாக ஒழிக்க அவர்களைப் பொதுமக்களிடமிருந்து தனிமைப்படுத்தும் முயற்சியில் தீவிரமாகச் செயல்பட்டார்.

புதுக்கிராமம்

சர் ஹென்றி கர்னி

கட்டாய மறு குடியேற்ற திட்டம் 5 லட்சம் மக்களைப் பாதித்தது.  அக்கால கட்ட மக்கள் தொகையில் பத்து விழுகாட்டு மக்களை இது உட்படுத்தியது. உட்புறப் பகுதிகளில் வாழ்ந்த சீன சமூகத்தவர்களும் பழங்குடி மக்களுமே  பிரிக்ஸ் திட்டத்தால் அதிக பாதிப்புக்குள்ளாயினர். நான்கில் ஒரு சீனர் கட்டாய இருப்பிட மாற்றத்திற்கு ஆளானார்.  அவர்கள் துப்பாக்கி முனையில் தங்கள் வீடுகளையும் பிற வசதிகளையும் விட்டுவிட்டு நகர்ப்புறங்களிலும் சிற்றூர்களிலும் சாலை ஓரங்களில்,  ராணுவம் அமைத்துத் தந்த முள்வேலி முகாம்களுக்குக் குடிபெயர்க்கப்பட்டனர். முகாம்களில் கடுமையான சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. வெளி ஆட்கள் உட்செல்லவும் உள்ளே இருப்பவர்கள் வெளியில் சென்று வரவும் கடுமையான விதிகள் இருந்தன. சில முகாம்களில் 22 மணிநேர வீடடங்குதல் உத்தரவுகள் விதிக்கப்பட்டன.   இம்முகாம்கள் ‘புதுக் கிராமம்’ (new villages) என்று அழைக்கப்பட்டன. முகாம்வாசிகளைச் சமாதானம் செய்யவும் அவர்கள் பிரிட்டிஷ் வெறுப்பாளர்களாக மாறாதிருக்கவும், புதுக்கிராமங்களில் போதிய உணவு, பள்ளிக்கூடம்,  மருந்தகம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.    ஆயினும் பிற்காலத்திய ஆய்வுகள் புதுக்கிராமத்தின் செயல்பாடுகளை ஜெனிவா உடன்படிக்கை,  மனித உரிமைச் சட்டம் ஆகியவற்றுக்கு  எதிரானதாக குற்றம் சாட்டின. 1954-ல் தீபகற்ப மலாயாவில் சுமார் 450 புதுக்கிராமங்கள் இருந்தன.  அவற்றில் 470,500 மக்கள் வசித்தனர். அவர்களில் 400000 பேர் சீனர்களாவர். ஜின்ஜாங் புதுக்கிராமம் மிகப்பெரிய புதுக்கிராமமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.   முகாம்களில் தங்கவைக்கப்பட்ட பழங்குடி மக்களில் பலர் விநோத நோய்களில் இறந்தனர். இதன் காரணமாக பழங்குடி மக்கள் கட்டங்கட்டமாக அவர்களின் பூர்வீக இடங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.  

பிரிக்ஸ் திட்டத்தின் வெற்றி

பிரிக்ஸ் திட்டம்,  மலாயா காடுகளில் பதுங்கியிருந்து கொரிலா தாக்குதலில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு போராளிகளுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. பொதுமக்களின் உதவிகள் இன்றி போராளிகள் பல சிரமங்களுக்கு ஆளாகினர். கடுமையான உணவுத் தட்டுப்பாடு காரணமாகப் பலர் ராணுவத்திடம் சரண் அடைந்தனர். மேலும் புதிய போராளிகள் வருகையும் நின்று போனது.

புதுக்கிராமங்கள் -இன்று

புதுக்கிராமங்கள்

அவசரகாலம் 1960-ல் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு சில புதுக்கிராமங்கள் கைவிடப்பட்டன. மக்கள் சுதந்திரமாக நடமாட முடிந்தது.  ஆனால் பல புதுக்கிராமங்கள் சீன ஆதிக்கம் மிகுந்த குடியிருப்புகளாகப் புதிய தோற்றம் பெற்றன. மக்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப வீடுகளைச் சீரமைத்துக் கொண்டனர். 70ஆம் ஆண்டுகளில் கோலாலம்பூர், சிலாங்கூர் போன்ற பெருநகரங்களில் இருந்த புதுக்கிராமங்கள் நவீன நகர் உருவாக்கத்திற்காக அகற்றப்பட்டன. தற்சமயம் நூறுக்கும் குறைவான புதுக்கிராமங்கள் நாட்டில் இருக்கின்றன. ஆனால் அவை நவீன வசதிகள் கொண்ட வசிப்பிடங்களாக உள்ளன.

உசாத்துணை

  

     


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.