பி.ஸ்ரீ. ஆச்சார்யா

From Tamil Wiki
Revision as of 06:07, 3 February 2022 by Ramya (talk | contribs) (Created page with "பி. ஸ்ரீநிவாச்சாரி (பி.ஸ்ரீ.) (பி.ஸ்ரீ. ஆச்சார்யா) (ஏப்ரல் 16, 1886 – அக்டோபர் 28, 1981) தமிழறிஞர், இலக்கிய, வரலாற்று வரலாற்றாய்வாளர், பத்திரிக்கை ஆசிரியர், பதிப்பாளர், திறனாய்வாளர், கட்டுரையா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பி. ஸ்ரீநிவாச்சாரி (பி.ஸ்ரீ.) (பி.ஸ்ரீ. ஆச்சார்யா) (ஏப்ரல் 16, 1886 – அக்டோபர் 28, 1981) தமிழறிஞர், இலக்கிய, வரலாற்று வரலாற்றாய்வாளர், பத்திரிக்கை ஆசிரியர், பதிப்பாளர், திறனாய்வாளர், கட்டுரையாளர் எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். கம்பராமாயண ஆய்வு நூல், வைணவ நூல்களின் பதிப்பு, தல புராண ஆராய்ச்சி, வரலாற்று ஆய்வு ஆகியவை தமிழ் இலக்கியத்திற்கு முக்கியமான பங்களிப்பு. தமிழில் ஒப்பிலக்கியம் என்பதற்கு அடித்தளம் இட்டவர் பி.ஸ்ரீ.

பிறப்பு,கல்வி

தூத்துக்குடி மாவட்டம் தென் திருப்பேரையில், பிச்சு ஐயங்காருக்கும் பிச்சு அம்மாளுக்கும் ஏப்ரல் 16, 1886-ல் மூத்த மகனாக ஸ்ரீநிவாச்சாரி பிறந்தார். தாயாரின் ஊரான விட்டலாபுரத்தில் ஆரம்பக்கல்வி பயின்றார். நெல்லையில் உள்ள, தற்போது "மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி" என்று அழைக்கப்படும் இந்துக் கலாசாலையில் கல்வி பயின்றார். பாரதியாரின் ‘இந்தியா’ இதழாலும், அவரின் நட்பாலும் எஃப்.ஏ படிப்பை நிறுத்திவிட்டு விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டார்.

தனிவாழ்க்கை

தங்கம்மாள் என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். இவருக்கு ஒரு மகனும், இரு மகள்களும் பிறந்தனர். வீட்டில் மாணவர்களுக்கு தமிழ், சமஸ்கிருதம் வகுப்பெடுப்பதும் ஓய்வு நேரத்தில் எழுத்தும் தமிழ் ஆய்வும் செய்தார். பி.ஸ்ரீ. கல்லூரிப் படிப்பு முடிந்ததும் காவல்துறையில் துணை ஆய்வாளராக மூன்றரை வருஷங்கள் சேர்ந்திருக்கிறார். அரசியல் காரணங்களுக்காக வேலையை விட்டிருக்கிறார். தன் வாழ்நாளில் குறிப்பிட்ட இடத்தில் நிலையான வேலையில் இருந்ததில்லை.

இலக்கியப்பணிகள்

தமிழ் இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டு திறனாய்வும், ஆராய்ச்சியும் செய்தார். பக்தி இலக்கியத்தின் ஈடுபாடு காரணமாக பி.ஸ்ரீ., திருக்கோயில்களிலும் தலபுராணங்களிலும் பற்றுக் கொண்டிருந்தார். செப்பேடுகள், கல்வெட்டுகள், சிற்பக்கலை போன்றவற்றிலும் புலமை பெற்றிருந்தார். கலைவினோதன், நெல்லை நேசன் என்னும் புனைபெயரில் பி.ஸ்ரீ. எழுதிய கட்டுரைகளும் ஆனந்த விகடன் தினமணி.

ஆனந்த விகடன் இதழில் "கிளைவ் முதல் இராஜாஜி வரை" என்ற தலைப்பில் கட்டுரை எழுதி, பின் அதை நூலாக்கினார். உ.வே.சா., கா.சு.பிள்ளை, வையாபுரிப்பிள்ளை, சேதுப்பிள்ளை, மறைமலையடிகள், பாரதியார், வ.உ.சிதம்பரனார், வ.வே.சு ஐயர், ராஜாஜி, கல்கி, சோமசுந்தர பாரதி, ரசிகமணி டி.கே.சி., மற்றும் பல இலக்கிய அன்பர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர் பி.ஸ்ரீ.

நூல்கள்

பி.ஸ்ரீ. நாலாயிரப்பிரபந்தம் பற்றியும் பன்னிரு ஆழ்வார்கள் பற்றியும் கம்பனைப் பற்றியும் எழுதிய 27 நூல்களும் முக்கியமானவை. வைணவம் பற்றிய நூல்கள் காரணமாய் இருந்திருக்கின்றன. பி.ஸ்ரீ. எழுதிய புத்தகங்களின் பட்டியல் 120க்கு மேல் இருக்கும் என்று பி.ஸ்ரீ.யின் மருமகள் பத்மஜா அனந்தராமன் கூறுகிறார். நாடு, தேசியம் தொடர்பாக 8 நூல்கள், கம்பனைப் பற்றியவை 15, சைவ சமயம் திருமுறை தொடர்பாக 11, பொதுவான சமயநூல்கள் தொடர்பாக 18, வரலாற்று நூல்கள் 8, ஒப்பீடுகள் 10, பிற நூல்கள் 10 என அவை அமைகின்றன. பி.ஸ்ரீ. எளிய சொல்லாட்சி, நகை உணர்வு, தத்துவங்களை எளிமையாக விளக்குதல் போன்ற எழுத்து நடையைக் கையாண்டார்.

பி.ஸ்ரீயின் முதல் நூல் மாறோர் நம்பி என்ற வைணவ அடியவரைப் பற்ற பக்திமணியின் கதை என்ற தலைப்பில் எழுதிய கவிதை நூல். யமுனாச்சாரியார் என்னும் ஆளவந்தார் தாழ்த்தப்பட்ட விவசாயி ஒருவரை ஆட்கொண்ட வரலாறு அந்நூலில் பேசப்படுகிறது.

பன்னிரு ஆழ்வார்களையும் அவர்களின் பாசுரங்களையாம் மூவர் ஏற்றிய மொழி விளக்கு, தொண்டர் குலமே தொழு குலமே, துயில் எழுப்பிய தொண்டர், சூடிக்கொடுத்த சுடர்கொடி, அடிசூடிய அரசு, காதலால் கதிபெற்றவர், அன்பு வளர்த்த அறிவுப்பயிர், ஞானசிகரம், சொந்தமோ காதல் வெள்ளம் என ஒன்பது நூல்களில் எழுதியுள்ளார். இவை தவிர ஆண்டாளைப் பற்றி ஆண்டாள், ஆண்டாள் கும்மி, திருப்பாவை விளக்கவுரை, திருப்பாவை பாடல் விளக்கம் என நான்கு நூல்கள் எழுதியுள்ளார். இவை தவிர பெரியாழ்வார், திவ்வியப் பிரபந்தம், திருவாய் மொழி விளக்கவுரை என வேறு நூல்களும் வெளியிட்டுள்ளார். பி.ஸ்ரீ.க்கு ஆழ்வார்களில் பெரியாழ்வார் பற்றித் தனியாக ஒரு நூல் எழுதியிருக்கிறார். அனந்தவிகடன் பத்திரிகையில் பி.ஸ்ரீ.யின் சித்திர ராமாயணம் வெளிவந்தபோது பரவலாக வாசிக்கப்பட்டது.

பி.ஸ்ரீ. சைவம் தொடர்பாக எழுதிய 11 நூல்களில் மாணிக்க வாசகர் என்ற நூல் குறிப்பிடத்தகுந்தது. அந்த மாணிக்க வாசகரின் வரலாறு, கால ஆராய்ச்சி, வாழ்க்கை, அற்புதங்கள் எனப் பல தலைப்புகளில் அமைந்த இந்நூல் மாணிக்கவாசகரையும் நம்மாழ்வாரையும் ஒப்பிட்டுக் காட்டுகிறது. மாணிக்க வாசகரைக் கல்விச் செல்வராகவும் அநுபூதிக் கவிஞராகவும் நம்மாழ்வாரை அநுபூதிக் கலையை ஞானசிகரத்தில் கண்ட வித்தகராகவும் காட்டினார்.

வரலாற்றுத் துறை

வரலாற்றுத் துறையில் அவர் தீவிரமான படிப்புடையவர். சென்னைத் தமிழ்வளர்ச்சிக் கழகத்திற்காகப் பாண்டியர் செப்பேடு பத்து, பல்லவர் செப்பேடு முப்பது என்னும் இரண்டு நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

திறனாய்வு

தமிழில் ஒப்பிலக்கியம் என்பதற்கு அடித்தளம் இட்ட பெருமை பி.ஸ்ரீ.க்கு உண்டு. கம்பனும் - ஷெல்லியும், பாரதியும் - ஷெல்லியும் என்று தொடங்கி, இலக்கிய ஒப்புமைகள் பல பி.ஸ்ரீ.யால் வெளிவந்தன. கம்பன் கவிதையை இலக்கியத் திறனாய்வு செய்து அதன் மொழி, இலக்கிய, வரலாற்றாய்வு செய்தது பி.ஸ்ரீயின் முக்கியமான பங்களிப்பு. பி.ஸ்ரீ. உடல்நிலை குன்றி படுக்கையில் இருந்தபோது "நான் இரசித்த கம்பன்' என்ற இறுதி நூலை எழுதி முடித்தார்.

பதிப்பாளர்

பண்டைத் தமிழ் நூல்களைப் பதிப்பித்தவர்கள் ஆராய்ந்தவர்கள், வெளியிட்டவர்களில் பெரும்பாலானோர் சைவச் சார்பு உடையவர்கள். ஆழ்வார்கள், கம்பன் பற்றிய ஆய்வு நூல்களில் தெ.பொ.மீ.க்குப் பிறகு ஆச்சார்யா முக்கியப்பங்கு வகிக்கிறார். திவ்வியப் பிரபந்தப் பதிப்பாசிரியர் குழுவிலும் சென்னை மர்ரே ராஜம் கம்பராமாயணப் பதிப்பாசிரியர் குழுவிலும் அண்ணமலைப் பல்கலைக்கழகக் கம்பராமாயணப் பதிப்புக்குழுவிலும் உறுப்பினராக இருந்தார். மனோன்மணியத்தை அவர் பதிப்பித்தார்.

பத்திரிகையாளர்

"கிராம பரிபாலனம்" என்கிற வார இதழைத் தொடங்கினார். செட்டிநாட்டில் மூன்றரை ஆண்டுகள் தங்கி, "குமரன்" பத்திரிகையின் ஆசிரியராக, பல கட்டுரைகளையும் கதைகளையும் தொடர்களையும் எழுதினார். சஞ்சீவி ராவ் நடத்திய Latent Light Culture என்னும் பத்திரிகையில் பி.ஸ்ரீ. எழுதினார். தினமணி, தினமலர், சுடர், சுதேசமித்திரன் போன்ற நாளிதழ்களுக்கும், கல்கி, ஆனந்த விகடன் போன்ற வார இதழ்களுக்கும் கலைமகள், அமுதசுரபி போன்ற மாத இதழ்களுக்கும் கட்டுரைகளை எழுதினார். "தினமணி" நாளிதழில் பதிப்பாசிரியராகப் பணியாற்றியபோது எண்ணற்ற நல்ல நூல்களைத் "தினமணி மலிவு வெளியீடாக' வெளியிட்ட பெருமை பி.ஸ்ரீ.க்கு உண்டு. அவர் "தினமணி'யில் இருந்து ஓய்வுபெற்று, ஆனந்தவிகடனில் பகுதிநேர எழுத்தாளரானார்.

விருதுகள்

  • இவர் எழுதிய "ஸ்ரீஇராமானுஜர்" என்னும் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு 1965-ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.
  • மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் பாராட்டும், பொன் முடிப்பும் வழங்கப்பட்டது.

மறைவு

பி. ஸ்ரீநிவாச்சாரி அக்டோபர் 28, 1981-ல் 96 வது வயதில் காலமானார்.

நூல்கள் பட்டியல்

அல்லயன்ஸ் பதிப்பகம்

  • ஆறுபடை வீடுகள் (6 பாகங்கள்)
  • ஆழ்வார்கள் வரலாறு (8 பாகங்கள்)
  • திவ்யப் பிரபந்தசாரம்
  • அருணகிரிநாதரின் வாழ்க்கை வரலாறு
  • கந்தபுராணக் கதைகள்
  • நவராத்திரியின் கதைகள்
  • ராஜரிஷி விசுவாமித்திரர்
  • தாயுமானவர்
  • தசாவதாரக் கதைகள்
  • துள்ளித் திரிகின்ற காலத்திலே
  • ஔவையார்
  • மூன்று தீபங்கள்
  • ஆண்டாள்
  • மஹாபாரதக் கதைகள்
  • சுடர்க தமிழ்நாடே
  • திருப்பாவை
  • திருவெம்பாவை
  • சிவநேசச் செல்வர்கள் ( 2 பாகங்கள் )
  • அன்புநெறியும் அழகுநெறியும்
  • காதம்பரி
  • கண்ணபிரான்
  • தேசியப் போர்முரசு
  • நாரதர் கதை
  • தங்கக் காவடி

கண்ணதாசன் பதிப்பகம் (விமர்சனங்கள்)

  • ராமனும் முருகனும்
  • மாணிக்கவாசகரும் நம்மாழ்வாரும்
  • கபீர்தாசரும் தாயுமானவரும்
  • காந்தியும் லெனினும்
  • காந்தியும் வினோபாவும்
  • ஆண்டாளும் மீராவும்
  • பாரதியும் தாகூரும்
  • வள்ளுவரும் சாக்ரடீசும்
  • நந்தனாரும் திருப்பாணாழ்வாரும்
  • பாரதி: நான் கண்டதும் கேட்டதும்
  • கலைமகள் காரியாலயம்
  • அன்பு வளர்த்த அறிவுப் பயிர் - ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும்
  • பாடும் பக்த மணிகள் (9 பாகங்கள்)
  • மூவர் ஏற்றிய மொழிவிளக்கு
  • தொண்ட குலமே தொழு குலம்
  • துயில் எழுப்பிய தொண்டர்
  • அடி சூடிய அரசு
  • பகவானை வளர்த்த பக்தர்
  • பெயர் தெரியாத பதிப்பகங்கள்
  • கிளைவ் முதல் ராஜாஜிவரை
  • தமிழ் வளர்ந்த கதை

உசாத்துணை