பி.ராமன்

From Tamil Wiki
Revision as of 21:02, 2 January 2023 by Jeyamohan (talk | contribs)
பி.ராமன்

பி.ராமன் ( ) மலையாளத்தின் புகழ்பெற்ற நவீனக் கவிஞர். மலையாளக் கவிதையில் எளிமையான வசனபாணியை அறிமுகம் செய்தவர்களில் ஒருவர். பின்னர் இசைத்தன்மைகொண்ட கவிதைகளுக்கு திரும்பச் சென்றார். படிமங்கள் சார்ந்த கவிதைகளை எழுதியவர் தன்னுரைக் கவிதைகளை எழுதலானார். கேரளப் பழங்குடிகளின் மொழியில் அவர்களில் இருந்து வந்த இளைஞர்களை கவிதைகள் எழுதவைத்து அவற்றை மலையாளத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டு ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்கியவர். மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், விமர்சகர்.

பிறப்பு, கல்வி

பி.ராமனின் குடும்பப்பெயர் . கேரளத்தில் பாலக்காடு மாவட்டத்தில் பட்டாம்பி என்னும் ஊரில் பிறந்தார். பட்டாம்பியில் பள்ளிக்கல்வி முடித்தபின் பட்டாம்பி அரசு சம்ஸ்கிருதக் கல்லூரியில் மலையாள இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஆசிரியர்பயிற்சியும் பெற்றார்.

தனிவாழ்க்கை

பி.ராமன் பட்டாம்பியில் அரசு பள்ளியில் மலையாளம் ஆசிரியராகப் பணிபுரிகிறார். மனைவி என்.பி.சந்தியா நாவலாசிரியர். ஒரு மகன் ஹ்ருதய் புகழ்பெற்ற இளம் ஓவியர். மகள் பார்வதி.

இலக்கியவாழ்க்கை

கவிதைகள்

பி.ராமன் மலையாள இலக்கியத்தில் 1990 முதல் கவிதைகள் எழுதினார். 1999 ல் ஆற்றூர் ரவிவர்மா தொகுத்த புதுமொழிவழிகள் என்னும் இளங்கவிஞர்களின் புதியகவிதைத் தொகுதி வழியாக பரவலாகக் கவனிக்கப்பட்டார். அதே ஆண்டில் டி.சி.புக்ஸ் வெளியிட்ட யுவகவிதக்கூட்டம் என்னும் நூலும் அவரை கவனிக்கச்செய்தது. தொடர்ச்சியாக மலையாளத்தின் புகழ்பெற்ற இதழ்களில் கவிதைகள் எழுதினார். மலையாளத்தின் புதியதலைமுறைக் கவிஞர்களில் முதன்மையானவராக அறியப்பட்டார்

இலக்கிய விமர்சனம்

பி.ராமன் மலையாளக் கவிதைகள் பற்றிய உரையாடலை மலையாளத்தில் தொடர்ச்சியாக நிகழ்த்திவருபவர். கவிதையின் செய்யுள்தன்மைக்கு எதிரான நிலைபாடு கொண்டிருந்தார். பின்னர் உரைநடை கவிதையை மிகவும் அன்றாடத்தன்மை கொண்டதாக ஆக்குகிறது என்னும் எண்ணம் கொண்டு கவிதையின் இசையொழுங்கையும் செய்யுள்தன்மையையும் ஏற்பவராக ஆனார். மலையாளத்தின் கவனிக்கப்படாத கவிஞர்களை முன்வைத்து விரிவான ஆய்வுகள் எழுதியிருக்கிறார்

பழங்குடிக் கவிதைகள்

பி.ராமன் கேரளப்பழங்குடி இளைஞர்களை அவர்களின் மொழியிலேயே கவிதைகள் எழுதச் செய்தார். அவற்றை மலையாளத்தில் மொழியாக்கம் செய்து மூலத்தின் மலையாள எழுத்துரு வடிவுடன் நூலாக வெளியிட்டார். அவை மிகப்பரவலான இலக்கியக் கவனத்தைப் பெற்றன. கேரளப்பண்பாட்டின் அறியப்படாத ஒரு தளத்தை மையக்கவனத்திற்கு கொண்டுவந்தன. கோத்ர கவித பிரஸ்தானம் என அழைக்கபப்டும் அவ்வியக்கத்தின் முன்னோடியாக பி.ராமன் கருதப்படுகிறார்.

மொழியாக்கம்

குற்றாலம் , ஊட்டி, ஒகேனெக்கல் ஆகிய இடங்களில் ஜெயமோகன் ஒருங்கிணைத்த தமிழ்-மலையாள கவிதை உரையாடல்களில் பங்கெடுத்தார். பி.ராமனை தமிழ்கவிதைமேல் ஆர்வம்கொள்ளச் செய்த அவ்வரங்குகள் அவருடைய கவிதைசார்ந்த நுண்ணுணர்வை மாற்றியமைத்தன. தமிழ் மொழியை கற்று தொடர்ச்சியாக தமிழ்க் கவிதைகளை மலையாள மொழிக்கு மொழிபெயர்த்தார். ஜெயமோகன் எழுதிய 12 கதைகளை மாயப்பொன் என்னும் தலைப்பில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

தமிழாக்கம்

பி.ராமனின் கவிதைகள் ஜெயமோகன் மொழியாக்கத்தில் வெவ்வேறு மலையாளக் கவிதை தொகுதிகளில் இடம்பெற்றுள்ளன. குரு நித்யா ஆய்வரங்கு என்னும் பெயரில் நிகழ்ந்த தமிழ் மலையாள கவிதைப்பரிமாற்ற அரங்குகளுக்காக மொழியாக்கம் செய்யப்பட்டவை அவை.

விருதுகள்

  • 2001 கேரள சாகித்ய அக்காதமி விருது (கனம் என்னும் கவிதைத் தொகுதி)
  • 2017 தேசாபிமானி கவிதா புரஸ்காரம்
  • 2019 கேரள சாகித்ய அக்காதமி விருது (ராத்ரி பந்த்ரண்டரைக்கு ஒரு தாராட்டு )
  • 2019 அயனம் ஏ.ஐயப்பன் கவிதா புரஸ்காரம்
  • 2022 கே.வி.தம்பி புரஸ்காரம்
  • 2022 மகாகவி பி.குஞ்ஞிராமன் நாயர் சாகித்ய புரஸ்காரம்

உசாத்துணை

பி.குஞ்ஞிராமன் நாயர் விருது ஏற்புரை