being created

பி.எம். மூர்த்தி

From Tamil Wiki
Revision as of 19:04, 29 May 2022 by Parimitaa KM (talk | contribs) (Created page with "thumb|''பி. எம். மூர்த்தி'' பி.எம். மூர்த்தி (பிறப்பு: ஜூன் 19, 1960) நாடறிந்த கல்வியாளர். பொதுத் தேர்வுகளில் தமிழ்மொழி படைப்பிலக்கியத்தை அறிமுகம் செய்தவர். தமிழ்மொழி இ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பி. எம். மூர்த்தி

பி.எம். மூர்த்தி (பிறப்பு: ஜூன் 19, 1960) நாடறிந்த கல்வியாளர். பொதுத் தேர்வுகளில் தமிழ்மொழி படைப்பிலக்கியத்தை அறிமுகம் செய்தவர். தமிழ்மொழி இலக்கியப்  பாடத்தைத்  தேர்வுப் பாடமாக நிலைநிறுத்தியதில் பெரும்பங்காற்றியவர்.

பிறப்பு, கல்வி, வேலை

பி.எம். மூர்த்தி ஜூன் 19, 1960-ல்  கெடா மாநிலத்தின் சுங்கை பட்டாணியில் பிறந்தார். தந்தை பரசுராமன், தாயார் முனிச்சி தர்மன். மூன்று சகோதரர்கள் இரு சகோதரிகள் கொண்ட குடும்பத்தில் இவர் இரண்டாவது பிள்ளையாவார்.

இவர் தன் ஆரம்பக் கல்வியைப் பீடோங் ஆங்கிலப் பள்ளியில் தொடங்கினார். பின்னர் ஐந்தாம் படிவம் வரை பீடோங் இடைநிலைப் பள்ளியில் பயின்றார். ஸ்ரீ கோத்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் 1981 - 1983 வரை பயிற்சி பெற்றார். இவர் மொழி, இலக்கியத்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.

இவர் 1984 - 1995 வரை பகாங் மற்றும் கூட்டரசு வளாகப்  பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்னர் தலைமையாசிரியராகப் பதவியேற்றார். 1998 முதல் மலேசிய கல்வி அமைச்சின் தேர்வு வாரியத்தில்  தமிழ்ப்பிரிவுத் தலைவராகவும் பின் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார். 2014-ல் சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டக் கல்வி அலுவலகத்தின் மொழிப்பிரிவு அதிகாரியாகப் பொறுப்பேற்று, 2017-ல் விருப்ப பணி ஓய்வு பெற்றார்.

தனிவாழ்க்கை

இவர் மனைவியின் பெயர் தமிழரசி. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இலக்கியச் செயல்பாட்டாளர்

தொடக்கத்தில் மலாய் ஆங்கில கதைப் புத்தகங்களை விரும்பி வாசித்தார்.  மு.வரதராசரின் நூல்கள் இவரை தமிழ் இலக்கியத்தின் பக்கம் ஈர்த்தன. தொடர்ந்து இவரின் தமிழ் இலக்கிய வாசிப்பு விரிவடைந்தது. தான் வசித்த சுங்கை பொங்கோ தோட்டத்தில் மாணவர்களுக்காக சிறு நூல் நிலையம் அமைத்தது இவரின் இலக்கிய  வாழ்க்கையின் முதல் படி எனலாம். இலக்கியச் செயல்பாட்டாளராக அவர் தன்னை வடிவமைத்துக் கொண்டார்.

1998ஆம் ஆண்டு, மாணவர்களின் குறைந்த ஆதரவால்  தேர்விலிருந்து எஸ்.பி.எம் தமிழ் இலக்கியத்தை நீக்க கல்வி அமைச்சு முடிவெடுத்தது. அச்சூழலை மாற்றி அமைக்க குழு ஒன்றை அமைத்து நடவடிக்கையில் இறங்கி, இலக்கியப் பாடத்தை மீட்டவர் பி.எம்.மூர்த்தி.

நாடு முழுவதிலுமுள்ள இலக்கிய ஆசிரியர்களை அடையாளம் கண்டு, உமா பதிப்பகத்தின் உதவியுடன் வழிகாட்டிப் புத்தகங்களை வெளியிட்டார். பின் இந்து இளைஞர் பேரணியின் துணையுடன் இலக்கியப் பாடநூல்கள் அச்சிடப்பட்டுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன.

இலக்கியப் பாட முன்னெடுப்புக்காக 2008-ல் மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம் (இலக்கியகம்) எனும் பதிவுபெற்ற இயக்கத்தை தோற்றுவித்தவரும் இவர்தான். இன்றளவும் இவ்வமைப்பின் காப்பாளராகவும் ஏடலராகவும் இருந்து வருகிறார்.    

இவரின் முயற்சியினால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆசிரியர்களுக்கு இலக்கியப் பாடம் குறித்த பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டன. இதன் விளைவாக 500க்கும் குறைவாக இருந்த மாணவர்கள் எண்னிக்கை படிப்படியாக  உயர்ந்து 2007ஆம் ஆண்டில் 4700 தொட்டது.

அதுபோல 2010-ல் எஸ்.பி.எம். தேர்வில் ஐந்தாம் படிவ மாணவர்கள் அதிக பட்சம் பத்து பாடங்கள் மட்டுமே எடுக்க முடியுமென்று கல்வி அமைச்சு அறிவித்தது. தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் ஆகிய இரண்டில் ஒன்றை மட்டுமே மாணவர் எடுக்க இயலும் என்ற நெருக்கடியில் இலக்கியப் பாடம் எடுப்போரின் எண்ணிக்கை மீண்டும் சரிவை எதிர்நோக்கியது.  இதற்கும் பி.எம்.மூர்த்தி தீர்வு கண்டார். தமிழ்ப்பாடமும் தமிழ் இலக்கியமும் இடைநிலைப்பள்ளிகளில் நிலைக்கச் செய்தார்.

மேலும் இரண்டு லட்சம் ரிங்கிட் அரசு மானியத்தில் மாணவர்களுக்கு இலவசமாக இலக்கியப் பாடநூல்களைப் பெறுவதற்கும் பி. எம். மூர்த்தியின் முயற்சி வழிவகுத்தது.

2005-ல் பி.எம்.மூர்த்தி தமிழ்மொழித் தேர்வுத்தாள்களில்  கொண்டுவந்த  மாற்றங்கள் பள்ளிகளில் கற்றல் கற்பித்தலில் பெரியதொரு மாற்றத்தினைக் கொண்டுவந்தது.  இடைநிலைப் பள்ளிக்கான கருத்துணர்ப் பகுதியில் மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ, நகைச்சுவைத் துணுக்குகள் போன்றவை இடம்பெற்றன.

2005ஆம் ஆண்டு முதல் தேர்வுகளில் படைப்பிலக்கியதைக் கட்டாயமாக இடம்பெறச் செய்தார். இது ஆரம்பப் பள்ளி, இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களையும் மாணவர்களையும் சிறுகதை வாசிப்பு மற்றும் சிறுகதை எழுதுவதில் திசை திருப்பியதில் முதல் விசையாக அமைந்தது.

இதன் தொடர்ச்சியாகவே 2013ஆம் ஆண்டிலிருந்து இலக்கியகம் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதரவோடு சிறுவர் சிறுகதை, இளையோர் சிறுகதை எழுதும் போட்டிகளையும் நடத்தின.

2019-ல் தீரச்சிறுவர்கள் தொடர் எனும் தலைப்பில் சிறுவர் நாவல்களை பி.எம் பதிப்பகம் வழி வெளியிடும் பணியிலும் ஈடுபட்டார்.

பிற ஆளுமை

பி.எம். மூர்த்தி தோட்டக்கலையில் பெரும் ஈடுபாடுள்ளவர். பல்வேறு தாவரங்களைப் பயிரிட்டுப் பராமரித்து வருகிறார்.

இலக்கிய இடம்

பி.எம்.மூர்த்தி 2005-ல் தேர்வுமுறையில் அறிமுகப்படுத்திய படைப்பிலக்கியம் புதிய தலைமுறை சிறுகதை எழுத்தாளர்கள் உருவாகுவதற்கு வழிகோலியுள்ளது. அதோடு மலேசியாவில் சிறுவர் இலக்கியம் மறுமலர்ச்சி காண வித்திட்டவர்.

வாழ்கை வரலாறுகள்

மீண்டு நிலைத்த நிழல்கள், ம. நவீன்

உலகத் தமிழ் களஞ்சியம், உமா பதிப்பகம்

பி.எம். மூர்த்தி (இலக்கியகத்தின் தந்தை), கலைஞன் பதிப்பகம், சென்னை

உசாத்துணை

மீண்டு நிலைத்த நிழல்கள், (ஆண்டு, ம. நவீன் ) (பக். 308-332)

உலகத் தமிழ் களஞ்சியம், (ஆண்டு, உமா பதிப்பகம்)

பி.எம்.மூர்த்தி (இலக்கியகத்தின் தந்தை), ( ஆண்டு, கலைஞன் பதிப்பகம், சென்னை)


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.