being created

பிரதாப சந்திர விலாசம்

From Tamil Wiki
Revision as of 21:35, 10 August 2022 by ASN (talk | contribs) (Para Added)
பிரதாப சந்திர விலாசம் : மறு பதிப்பு (1915)

’பிரதாப சந்திர விலாசம்’ 1877-ல் வெளியான சமூக நாடகம். ‘டம்பாச்சாரி விலாசம்’ என்ற நாடகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதே வகையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களுடன் கூடிய பல நாடகங்கள் வெளியாகின. அவற்றுள் ஒன்று பிரதாப சந்திர விலாசம். இதனை இயற்றியவர் ப.வ. இராமசாமி ராஜு. இவர் லண்டனில் ‘பாரிஸ்டர்’ பட்டம் பெற்றவர்.  இந்த நாடகம் தமிழின் முதல் வசனம் மற்றும் பாடல்கள் அமைந்த நாடகமாகக் கருதப்படுகிறது.

நாடகத்தின் நோக்கம்

இந்த நாடகம்  எழுதப்பட்டதன் நோக்கமாக இராமசாமி ராஜு, நூலின் முகவுரையில், "நம்முடைய நாட்டில் அநேகர் இயற்கையாக நல்லறிவு படைத்துக் கல்வி கற்றுத் தேர்ந்து, அவரவர் அதிர்ஷ்டத்துக்கும் முயற்சிக்கும் தக்கபடி மதிப்புள்ள ஸ்திதிக்கு வந்தும், அற்ப வயதிலேயே தங்காலத்தை முடித்து, மனைவி மக்களை வருத்தத்தில் மூழ்த்தி, பந்து மித்திரர்களுக்கெல்லாம் தீராத கிலேசத்தை உண்டாக்கி விட்டுப் போகின்றனர். இந்த விபரீதத்துக்கு பெரும்பாலும் காரணமேதோவென்று ஆராயப் புகின், இந்நூலில் வெளியிட்டு மறுத்திருக்கும் துன்பங்களேயோம். . அந்தோ! வேசையர் முதலிய மாதர்களோடும், ஒயின், பிராந்தி முதலிய சாராய வர்க்கங்களோடும் தம் வாழ்நாளை நமனார்க்குக் கொள்ளை கொடுக்கும் துரதிர்ஷ்டப் பிராணிகளின் தொகை எண்ணி முடியுமோ! ஆகையால் என் சக்தி புத்திகளுக்குத் தக்கபடி யான் லோகோபகாரமாக நினைத்து இயற்றிய இந்த நூலை நடுவுநிலைமையுற்ற மேலோர் நன்கு மதிக்கின், அது யான் இதை இயற்றும் விஷயத்தில் செய்த முயற்சிக்கு ஓர் பயனாகும். கெடுதி விலக்கைக் கருத்தாய்க் கொண்டு. அக்கெடுதியைப் பற்பலவிதமாய் விளக்கிக் காட்டுதல் மூத்தோர் வழக்கம். அப்படியே கீர்வாணம், தமிழ், இங்க்லீஷ் முதலிய பாஷைகளில் அனேக மகாகவிகள் செய்திருக்கின்றனர். அவ்வழியே யானும், யானையுலாவுங் காட்டில் பூனை சென்றாற்போல், தொடர்ந்தனன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

நாடகத்தின் அமைப்பு

காட்சி, அங்கம் என்ற பகுப்புடன் நாடகம் எழுதப்பட்டுள்ளது. முதல் காட்சியில் கட்டியங்காரன் வந்து நாடகத் தலைவரை அறிமுகப்படுத்தி நாடகத்தை ஆரம்பித்து வைக்கிறான். டம்பாச்சாரி விலாசம் போல இசை நாடகமாக இல்லாமல் இசையும் வசனமும் கலந்து  இந்நாடகத்தில் இடம் பெற்றுள்ளது. இதில் நாடகப் பாத்திரங்கள்,   அவரவர் படிப்பு, ஜாதி, சமூகப்படிநிலை இவற்றிற்கேற்ப செந்தமிழிலும், கொச்சை மொழியிலும், ஆங்கிலத்திலும், தெலுங்கிலும், உருதுவிலும், கன்னடத்திலும் வேறுபட்ட பாணிகளில் பேசும் வகையில் வசனம் அமைக்கப்பட்டுள்ளது.

பாவாடை ஜித்தர், இடிமுழங்கி, ஸண்டே மாஸ்டர், குசும்பா மாஸ்டர், ஷோக் சுந்தரம், மத்தாப்பு சுந்தரம், சட்பட், படீல், திருவேங்கடத்தானு எனப் பல பாத்திரங்கள் பல்வேறு வகையில் உரையாடுகின்றனர். நகைச்சுவை ததும்ப நாடக வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாடகத்தின் கதை

மாயோ கவர்னர் ஜெனரல் ஆட்சி செய்த காலத்தில் நிகழ்ந்ததாக இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது. லக்ஷ்மிவிலாசர் என்னும் ஜமீன்தாரின் மகனான பிரதாப சந்திரன், சென்னையில் உயர்கல்வி கற்று, மதிப்பும், மரியாதையும் கொண்டவராக இருக்கிறார். தன்னைப் போன்ற நண்பர்களை இணைத்துக் கொண்டு பல்வேறு பொது நலப் பணிகளைச் செய்து வருகிறார். அப்போது சில தீய நண்பர்களின் தொடர்பால் அவரது வாழ்க்கை தடம் மாறுகிறது. பல்வேறு துன்பங்களைச் சந்திக்கிறார். அவமானம் அடைகிறார்.  பல்வேறு இன்னல்களுக்குப் பின் மனம் திருந்துகிறார். தன் தந்தையுடன் மாயோ பிரபுவின் தர்பாருக்குச் செல்கிறார். அங்கிருந்து வேட்டைக்குச் சென்றபோது மனோன்மணி என்னும் பெண்ணைச் சந்திக்கிறார். அவளை மணம் செய்து கொண்டு ஒழுக்க சீலராக இனிது வாழ்கிறார்.













🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.