under review

பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்

From Tamil Wiki
Revision as of 17:11, 24 January 2022 by Ramya (talk | contribs)


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.


பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் (Pinnathur Narayanasamy Ayyar, 1862 செப்டம்பர் 10 - 1914 சூலை 30), தமிழறிஞர்; உரையாசிரியர்; நினைவாற்றல் கலைஞர்; கவிஞர்; தமிழாசிரியர். மொழிபெயர்ப்பாளர்.

தனி வாழ்க்கை

திருவாரூர் மாவட்டத்தில், திருத்துறைப்பூண்டியில் பின்னத்தூர் என்ற சிற்றூரில் அப்பாசாமி ஐயர் என்னும் வேங்கடகிருட்டிணன், சீதாலட்சுமி தம்பதியருக்கு மூத்த மகனாக செப்டம்பர் 10, 1862ல் பிறந்தார். தந்தை மருத்துவ நூல் புலவர். இவருடைய இயற்பெயர் இலட்சுமி நாராயண அவதானிகள். இவருடன் பிறந்தவர்கள் மூன்று தம்பிகளும் மூன்று தங்கைகளும்.

நாராயணசாமி தனது தொடக்கக்கல்வியை கிருட்டிணாபுரம் முத்துராம பாரதியரின் திண்ணைப்பள்ளியில் பெற்றார். சமஸ்கிருதம் மற்றும் வேதம் கற்றார். தமிழ் இலக்கண, இலக்கியங்களை மரைக்காட்டில் தங்கியிருந்த ஈழத்துப் புலவர் பொன்னம்பலம் பிள்ளை என்பவரிடம் கற்றார். இவர் 1899 ஆம் ஆண்டு முதல் 1914 ஆம் ஆண்டு வரை கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

இந்த வரிசையில் உள்ளவர் தஞ்சை மாவட்டம் பூண்டி வட்டத்தில் உள்ள பின்னத்தூர் அப்புசாமி அய்யர். இவர் பரம்பரை வைத்தியர்; வடமொழி அறிந்தவர்; தினமும் வேதபாராயணம் செய்பவர். இவருடைய மனைவி சீதாலட்சுமி. இந்தத் தம்பதிகளுக்கு 1862ஆம் ஆண்டு அ. நாராயணசாமி அய்யர் பிறந்தார். பிற்காலத்தில் இவர் சொந்த ஊரான பின்னத்தூர் என்ற பெயராலேயே அழைக்கப்பட்டார். அப்புசாமி அய்யர் தன் மகனுக்கு இளமையிலேயே சமஸ்கிருதத்ததையும் அவதானக் கலையையும் கற்றுக்கொடுத்தார். நாராயணசாமி ஆரம்பக்காலத்தில் வேதாத்தியானமும் செய்தார். ஆனால் நாராயணசாமிக்கு அவதானக்கலை முழுவதுமாய்க் கைவரவில்லை. அதைவிட அவருக்குத் தமிழ் படிப்பில்தான் ஈடுபாடு இருந்தது.

பின்னத்தாரில் திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்திய கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதியிடம் நாராயணசாமி சில ஆண்டுகள் பயின்றார். பின் நாராயணசாமி அய்யரிடமும் தமிழ் இலக்கணம் படித்தார். தானே முயன்று பல நூல்களைக் கற்றார். யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலரின் மருமகனும் வித்துவசிரோன் மணியுமான பொன்னம்பலம் பிள்ளை வேதாரண்யத்தில் சில ஆண்டுகள் வசித்தபோது அப்பகுதி மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தார். அப்படிக் கற்றவர்களில் பின்னத்தூர் நாராயணசாமி அய்யரும் ஒருவர். இவர் பொன்னம்பலம் பிள்ளையிடம், சிலப்பதிகாரத்தைப் பாடம் கேட்டிருக்கிறார்.

பின்னத்தூர் 37 வயதில்தான் (1899) கும்பகோணம் டவுண் பள்ளியில் பணிக்குச் சென்றார். இந்த ஆண்டிலிருந்து இறுதிச் காலம்வரை இங்கேயே பணிபுரிந்தார். இவர் 50 வயதில் நீரிழிவு நோயால் தாக்கப்பட்டு 1914ஆம் ஆண்டில் தன் சொந்து ஊரிலேயே மறைந்தார்.

இலக்கிய வாழ்க்கை

சிறந்த தமிழறிஞர், உரையாசிரியர், நினைவாற்றல் கலைஞர், கவிஞர், ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் என்று பன்முகத் திறன் கொண்டிருந்தார். பழையது விடுதூது, நீலகண்டேசுரக் கோவை, மாணாக்கராற்றுப் படை, இயன்மொழி வாழ்த்து, தென்தில்லை உலா, தென்தில்லைக் கலம்பகம், இராமாயண அகவல் போன்றன இவருடைய முக்கியமான இலக்கியப் படைப்புகள்.

வாசிப்பு

மன்னார்குடியில் உள்ள ஆங்கிலப் பள்ளியின் தமிழ்ப் பண்டிதர் நாராயணசாமிப் பிள்ளை என்பவர் நிகழ்த்திய ராமாயண சொற்பொழிவைக் கேட்ட பிறகு நாராயணசாமிக்கு தமிழின் மீதும், ராமாயணத்தின் மீதும் நாட்டம் பிறந்தது. முதன் முதலில் சுந்தரகாண்டம் படித்தார். தொடர்ந்து நிறைய படித்தார். ஆசான் உதவி இல்லாமல் ஏராளமான தமிழ் நூல்களைத் தானே கற்றுத் தேர்ந்தார். ஆனாலும் சில இடங்களில் தனக்கு ஏற்பட்ட ஐயங்களைத் தீர்த்துக்கொள்ள சிறந்த ஆசிரியரைத் தேடினார். திருமறைக்காட்டில் வசித்து வந்த ஈழத்துப் புலவர் பொன்னம்பலப் பிள்ளை என்பவரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரிடம் மாணவராகச் சேர்ந்தார். அவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற தமிழறிஞர் ஆறுமுகநாவலரின் உறவினரிடம் தொல்காப்பியம், சிந்தாமணி, சிலப்பதிகாரம், கந்தபுராணம், ராமாயணம் உள்ளிட்ட தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார்.

இலக்கியப் படைப்புகள்

இயன்மொழி வாழ்த்து

இவர் இயற்றிய இயன்மொழி வாழ்த்து என்ற நூல் புதுக்கோட்டை சமஸ்தானம் இராஜமார்த்தாண்ட தொண்டைமான் என்பவர் பற்றியும் அவரது நாட்டின் பரிபாலன முறை பற்றியும் வாழ்த்திப் பாடுவது. இந்நூலின் முதல்பகுதி தொண்டைமானின் நாட்டின் ஐந்து திணை நிலங்கள் பற்றியும் இரண்டாம் பகுதி புதுக்கோட்டை நகர மக்கள் பற்றியும் கூறுகிறது. 19ஆம் நூற்றாண்டைய புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இயல்பான செய்திகளைச் சித்திரிப்பது பெருமை இந்நூலுக்கு உண்டு. புதுக்கோட்டைச் சாலையில் கல்லாலான தெரு தூண்கள் நின்றன. இதில் இருந்த கண்ணாடிவிளக்கை ஏற்ற பணியாளர் இருந்தனர். இதுபோன்ற செய்திகள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாஞ்சாலக்குறிச்சி கட்டபொம்மன் புதுக்கோட்டையில் தங்கியபோது ஆங்கிலேயரின் வேண்டுகோளுக்கிணங்க கட்டபொம்மனையும், ஊமைத் துரையையும் பிடித்துக்கொடுத்தவர் விஜயரகுநாத தொண்டை என்ற செய்தி இந்நூலில் பெருமையாகவே விவரிக்கப் படுகிறது. இதுபோலவே மருது சகோதரர்களை பிடிக்க புதுக்கோட்டை அரசர்கள் உதவினார்கள் என்ற செய்தி பெருமையாய்க் கூறப்படுகிறது. இப்படி ஒரு கருத்து பாமரர்களிடம் இருந்தது என்பதையும் ஆங்கிலேயர்களின் விசுவாசிகளாக ஒரு கூட்டம் இதை நியாயப்படுத்தியது என்பதையும் இயல்பாகவே இந்நூல் விவரிக்கிறது.

மாணாக்கராற்றுப் படை

பின்னத்தூரார் இயற்றிய மாணாக்கராற்றுப் படை என்ற நால் பழைய ஆற்றுப்படை இலக்கிய மரபின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதில் கும்பகோணம் டவுண் உயர்நிலைப்பள்ளி மையப்படுத்தப்படுகிறது. முக்கியமாக ஏழை மாணவர்களை இப்பள்ளிக்கு ஆற்றுப்படுத்துவது இதன் சிறப்பு. இந்நூல் கடின நடையுடையது.

மொழிபெயர்ப்பு

சமஸ்கிருத மொழியில் காளிதாசன் எழுதிய ‘பிரகசன’ என்ற நாடக நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார். காளிதாசனின் பிரகசன நாடகத்தை மொழிபெயர்த்திருக்கிறார். இது அச்சில் வரவில்லை. இதுபோன்று இவர் வடமொழியிலிருந்து மொழிபெயர்த்து எழுதிய வேறு நூல்களும் அச்சில் வரவில்லை.

உரைகள்

குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு நூல்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு உரை எழுதினார். இவை இனிய நடை, திணை, இலக்கண விளக்கம், இலக்கணக் குறிப்பு, பாடல், பாடல் பொருள் விளக்கம், சொல்விளக்கம், எடுத்துக்காட்டு, உள்ளுறை, துறைவிளக்கம், மெய்ப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கி இருப்பதோடு, ஒவ்வொரு பாடலடிக்கும் தெளிவான விளக்கமும் இடம்பெற்றுள்ளது. திருக்களர் ஸ்ரீ பாரிஜாத வனேஸ்வரசுவாமி தலபுராணத்திற்கு உரை எழுதிப் பதிப்பித்திருக்கிறார்.

நற்றிணை உரை =

பின்னத்தூராரின் வாழ்நாள் ஆய்வு நற்றிணை உரைதான். காவல்துறை அதிகாரியாக இருந்த சோமசுந்தரம் பிள்ளை என்பவர் பொருளுதவி செய்தார். சென்னை ராஜதானி கையெழுத்துப் புத்தகசாலையில் உள்ள நற்றிணை ஏடு, உ.வே. சா. கொடுத்த இரண்டு ஏட்டுப் பிரதிகள், மதுரைத் தமிழ்ச் சங்கப்பிரதிகள், கனகசுந்தரம் பிள்ளை என்பவர் கொடுத்த ஏடு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு மூலப்பிரதியை உருவாக்கி இதற்கு உரை எழுதினார். சென்னை சைவ வித்தியாநுபாலன யந்திரசாலையில் அச்சானது. அப்போது இவர் நீரிழிவு நோயால் அவதிப்பட்டார். இவர் இறந்த பிறகுதான் நூல் முழுதும் அச்சாகி வெளிவந்தது. இதன் பிறகு சைவ சித்தாந்த நூல்பதிப்புக் கழகம் பெருமழைப்புலவர் சோமசுந்தரனாரைக் கொண்டு உரை எழுதி வெளியிட்டாலும் சங்க இலக்கிய ஆய்வாளர்கள் பின்னத்தூரார் உரையையே ஆதாரமாகக் கொள்கின்றனர்.

சிறப்புகள்

  • செய்யுளின் திணை, துறை, துறை விளக்கம், இலக்கண விளக்கம் கூறுதல்
  • செய்யுளின் ஒவ்வொரு வரிக்கும் தனித்தனிப் பொருள் கூறுதல்; இதற்குத் தெளிவான பொருள் தருதல்
  • அரிய சொல்லுக்குத் தனியே பொருள் தருதல்; சில சொற்களுக்கு விரிவான விளக்கம் அளித்தல்
  • விளக்க உரையில் மெய்ப்பாடு பயன் போன்ற அகப்பொருள் விளக்கம் தருதல்
  • தன் பொருளுக்கு அரண் சேர்க்கும் வகையில் இலக்கிய மேற்கோள் காட்டுதல்; பாடபேதம் கூறுதல்
  • செய்யுளின் வரிகளைச் செய்யுளின் அமைப்புப்படிக் கூறாமல் கொண்டுகூட்டி பொருள்கோள் வழி தருதல் ஆகியன.

பழைய உரைகாரர்களான நச்சினார்க்கினியர், பரிமேலழகர் போன்றோரை ஒட்டி வடமொழிச் செல்வாக்கைத் தன் நற்றிணை உரையில் படரவிட்டிருக்கிறார் பின்னத்தூரார். பரத்தை தலைவியின் பாங்கிக்குப் பாங்காயினார் கேட்ப விறலிக்குச் சொல்லியது என்னும் கூற்றில் அமைந்த நற்றிணைப் பாடலில் (எண் 176) பரத்தை, "காதலன் என்றுமோ உரைத்திசின் தோழி" என்பாள். இங்கு வரும் தோழியைப் பரத்தையின் தோழியாகவே கொண்டு உரை வகுக்கிறார் அய்யர். பரத்தையின் தோழி விறலி; விறல் - தத்துவம், இவண் சிருங்காரம் முதலாய ஒன்பான் சுவை என்பர். அத்தலைவன் தன் மெய்க்கண்ணே தோன்றுமாறு அவிநயத்தில் புலப்படுத்திக் காட்டவல்லவன்” என்கிறார். இங்கு வடமொழி பாற்பட்டு விளக்கம் அளிக்கிறார். இதை இவரின் சமகாலத்திலும் பின்னரும் மறுத்திருக்கின்றனர். அய்யர் நற்றிணைப் பாடல்களுக்கு உள்ளுறை, இறைச்சி போன்றவற்றைக் காணும் முயற்சியில் நுட்பமாய் முற்பட்டுள்ளார். பழைய உரையாளர்களான நச்சினார்க்கினியர், பரிமேலழகர் போன்றவர்களின் தகுதி அய்யருக்கும் உண்டு என்பதற்கு நற்றிணை சான்று.

கல்வெட்டியல் ஆய்வாளர்

அய்யர் கல்வெட்டியலில் ஈடுபாடுடையவர், அவதானம் செய்பவர். அவதானம் அல்லது கவனம் என்ற கலை மனதைக் கட்டுப்படுத்தும் சித்தர்களின் சிந்தனையிலிருந்து தோன்றியது என்பர். கோயில்கள் குறித்த பழைய வரலாறுகளை ஆராய்வதில் நாட்டம் கொண்டிருந்த இவர், கோயில்களிலும் வேறு பல இடங்களிலும் உள்ள கல்வெட்டுகளைப் படித்தறியும் திறனை வளர்த்துக்கொண்டார். எப்போதும் எதைப் படித்தாலும் மனதில் பதிய வைத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டிருந்த இவர், இவற்றைத் தன் படைப்புகளிலும், உரைகளிலும் பொருத்தமான இடங்களில் வெளிப்படுத்தும் திறமை பெற்றிருந்தார்.

படைப்புகள்

  • நீலகண்டேசுரக் கோவை
  • இடும்பாவன புராணம்
  • இறையனாற்றுப்படை
  • சிவபுராணம்
  • சிவகீதை
  • நரிவிருத்தம்
  • மாணாக்கராற்றுப்படை (1900)
  • இயன்மொழி வாழ்த்து
  • தென்தில்லை உலா
  • தென்தில்லைக் கலம்பகம்
  • பழையது விடு தூது
  • மருதப்பாட்டு
  • செருப்பு விடு தூது
  • தமிழ் நாயக மாலை
  • களப்பாழ்ப் புராணம்
  • இராமாயண அகவல்
  • அரதைக்கோவை
  • வீர காவியம்

உரை

  • குறுந்தொகை
  • நற்றிணை
  • அகநானூறு

மொழிபெயர்ப்பு

காளிதாசனின் “பிரகசன” நாடகம்

இறுதிக்காலம்

நாராயணசாமி நீரிழிவு நோயால் அவதிப்பட்டு பின்னத்தூரில் 1914 சூலை 30 ம் நாள் மறைந்தார். பி.அ.நாராயணசாமி ஐயர் 1914-ம் ஆண்டு ஜூலை மாதம் 52-வது வயதில் மறைந்தார்.

உசாத்துணை

அ.கா. பெருமாள்: ”தமிழறிஞர்” புத்தகம்