under review

பினாங்கு தண்ணீர்மலை நகரத்தார் ஸ்ரீ தண்டயுதபாணி ஆலயம்

From Tamil Wiki
Revision as of 03:58, 18 November 2022 by Navin Malaysia (talk | contribs) (Created page with "thumb பினாங்கு தண்ணீர்மலை நகரத்தார் ஶ்ரீ தண்டாயுதபாணி ஆலயம், மலேசியாவில் பழமை மிக்கதாகவும், பாரம்பரிய விழுமியங்களை உடையதாகவும் விளங்கும் முருகன் ஆலயம் ஆகும். தண்ணீர்ம...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Mya02 005.jpg

பினாங்கு தண்ணீர்மலை நகரத்தார் ஶ்ரீ தண்டாயுதபாணி ஆலயம், மலேசியாவில் பழமை மிக்கதாகவும், பாரம்பரிய விழுமியங்களை உடையதாகவும் விளங்கும் முருகன் ஆலயம் ஆகும். தண்ணீர்மலை மலைக்கோயிலுக்குக் கீழே பிரதான சாலைக்கு மறுபுறம் அமைந்திருக்கும் இந்த ஆலயம் வரலாற்றுப் பின்னணி உடையது. இதைக் கோயில் வீடு எனவும் அழைக்கின்றனர்.

ஆலய அமைவிடம்

வாட்டர்பால் ரோடு, ஜாலான் கெபுன் பூங்கா, 10350, பினாங்கு எனும் முகவரியில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு வருவதற்கு பொது பேருந்துகள் உள்ளன.

ஆலய வரலாறு

172 ஆண்டுகள் வரலாற்றினை உடையது இந்த ஆலயம். 1818-ஆம் ஆண்டு பினாங்கிற்கு வணிகம் செய்வதற்கு வந்த செட்டியார் சமூகத்தினர் பின்னர், ஆகஸ்டு 9-ஆம் திகதி 1850- ஆம் ஆண்டு பினாங்கு வீதியில் 138- என்ற என்ற எண் கொண்ட வீட்டில் முருகப்பெருமானை நிறுவி வழிபடத் தொடங்கியுள்ளனர். இது ஒரு தங்க உற்சவ சிலையாகும்.

அதன் பின்னர், 1954- ஆம் ஆண்டு பினாங்கு வாட்டர்பால் ரோட்டில் 5 ஏக்கர் நிலம் ஒன்றை வாங்கி, தண்ணீர்மலை முருகன் ஆலயம் அமைத்து 1857-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ஆம் திகதி குடமுழுக்குச் செய்துள்ளனர். இந்த ஆலயம் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் வேதாந்தத் திருமடமாகிய கோவிலூர் ஆதினத்தின் தலைவராக அப்போது விளங்கிய ஞானப் பேரொளி தவத்திரு வீரப்ப சுவாமிகள் அவர்கள் வரைந்து கொடுத்த அமைப்பின்படி கட்டப்பட்டதாகும். நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் மடலின்வழி அவரிடத்தில் வேண்டுகோள் விடுத்து, ஆலயத்தின் அமைப்பு வரைபடத்தைப் பெற்றுப் பின்னர் இந்த ஆலயத்தை நிறுவியுள்ளனர்.

ஆலய அமைப்பு

Mya02 001.jpg

பினாங்கு நாட்டுக்கோட்டை செட்டியார்கள் தமிழகத்தின் காரைக்குடியிலிருந்து கட்டிடக் கலைஞர்களைக் கொண்டு வந்து செட்டிநாட்டு நகரத்தார் கட்டிடச் சாயலில் இந்த ஆலயத்தை நிறுவியுள்ளனர். இந்த ஆலயம் சொக்கட்டான் காய் ஆட்டத்தளம் போல அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட நேர் கோடுகள் மற்றும் குறுக்கு நேர் கோடுகள் கொண்டு கூட்டல் குறி அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. முருகப்பெருமானின் கருவறை கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அதனுள் முருகப்பெருமான் நின்றக் கோலத்தில் காட்சியளிக்கிறார். கையில் தண்டம் பிடித்துள்ளார். இக்கோயிலில் கருவறை, உட்பிரகாரம், வெளிப்பிரகாரம், நந்தவனம், அர்த்த மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 1995-ஆம் ஆண்டு வரை பினாங்கின் மிகப்பெரிய இந்துக் கோவிலாகவும் இது விளங்கியுள்ளது.

ஆலயத்தின் மண்டபங்கள் அனைத்தும் பர்மாவிலிருந்து கொண்டு வரப்பட்ட தேக்கு மரங்களினால் அமைக்கப்பட்டுள்ளன. மண்டப மேல் பகுதியில் உள்ள தேக்கு மரப்பலகைகளின் மீது ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அதோடு, புகழ்ப்பெற்ற ஓவியரான ரவிவர்மாவின் ஓவியங்கள் தஞ்சாவூர் ஓவிய பாணியில் ஆலய முழுமையும் வைக்கப்பட்டுள்ளன. முருகப்பெருமானுக்கு நேராக ஒரு வேலும் வைக்கப்பட்டுள்ளது. ஆலய நுழைவாயிலின் இரு மருங்கிலும் திண்ணை வைக்கப்பட்டுள்ளது. முகப்பின் மேலே ஆறுமுகக்கடவுள் வள்ளி தெய்வானையோடு மயில் மீதமர்ந்துள்ள சுதை சிற்பம் வைக்கப்பட்டுள்ளது.

ஆலய பூசை முறை

காலையில் காலசாந்தி பூசையும், மதியம் உச்சிக்கால பூசையும், மாலையில் சாயரட்சை பூசையும், இரவில் அர்த்தசாம பூசையும் முருகப்பெருமானுக்குச் செய்து வைக்கப்படுகின்றன. காலை 6.15 பூசை தொடங்கி மதியம் 12.30-க்கு ஆலயம் திருக்காப்பு இடப்படுகிறது. பின்னர், மாலை 4.15-க்குப் பூசைகள் தொடங்கி இரவு 8.45-க்கு மீண்டும் திருக்காப்பு இடப்படுகிறது.

கோயில் விழாக்கள்

Mya02 007.jpg

அருள்மிகு தண்ணீர்மலை நகரத்தார் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் சில விழாக்கள் சிறப்பாகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

தைப்பூசம்

இந்த ஆலயத்தின் முதன்மை திருவிழாவாக தை மாதம் பூச நட்சத்திரத்தில் நடைபெறும் தைப்பூசத் திருவிழா திகழ்கிறது. மூன்று நாட்கள் இந்த விழாவை ஆலயத்தில் கொண்டாடுகின்றனர். 1935-ஆம் ஆண்டு வரை ஐந்து நாட்களுக்கு நடைபெற்ற தைப்பூசத் திருவிழா பின்னர் மூன்று நாட்களுக்குக் குறைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதன் மூன்றாம் நாள் செட்டிப்பூசம் என செட்டியார்களுக்குச் சிறப்புச் செய்யும் விதமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் முருகப்பெருமான் வெள்ளி இரதம் ஏறி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். பினாங்கு அரசாங்கம் இந்த விழாவிற்கான நாளைப் பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

கந்தர் சஷ்டி திருநாள்

வள்ளித் திருமணத்தோடு சேர்த்து ஏழு நாட்கள் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

சித்திரை பூசை விழா

தமிழ் ஆண்டு பிறப்பான சித்திரை முதல் நாளில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இதற்கடுத்து வரும் பௌர்ணமியில் சித்திரை பௌர்ணமி பூசை விழாவும் கொண்டாடப்படுகிறது. அன்று மகேஸ்வர பூசை செய்து அன்னதானம் வழங்கப்படுகிறது.

ஆடி ஆமாவாசை

இந்த நாளிலும் மகேஸ்வர பூசை செய்து அன்னதானம் வழங்கப்படுகிறது.

கார்த்திகை மாத விழாக்கள்

இந்த மாதத்தில் பெரிய கார்த்திகையில் மகேஸ்வர பூசை நடத்தி, கோயில் முழுக்க தீபங்களை ஏற்றி வைக்கின்றனர். சொக்கப்பனையும் கொளுத்தப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரங்களில் சங்கு நீராட்டும் சண்முக அர்ச்சனையும் நடைபெறுகிறது.

வெள்ளி ரதம்

இந்த வெள்ளி இரதம் 128 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 1894- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழகத்தின் காரைக்குடியில் செய்யப்பட்ட இந்த வெள்ளி இரதம் 'எஸ்.எஸ்.ரோனா; எனும் கப்பலின் வாயிலாக பினாங்கிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இரதத்தோடு உபரிப் பாகங்களாக நான்கு சக்கரங்களும் ஒரு முக்கணையும் வந்துள்ளன. 99 ஆண்டுகள் செயல்பட்டு, 1994- ஆம் ஆண்டு இதற்கு புது சக்கரங்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்த வெள்ளி ரதம் 25 அடி உயரமும், 10 ½ அடி அகலமும் கொண்டது. இதன் சக்கரத்தைத் தவிர ஏனைய முழுப் பகுதிகளும் கனமான வெள்ளிக் கவசத்தால் பூட்டப்பட்டுள்ளன. இதை வருடா வருடம் மெழுகு பூசி மெருகேற்றுகிறார்கள்.

தனி சிறப்புகள்

இவ்வாலயம் தென்கிழக்காசியாவின் முதல் தண்டபாணி ஆலயமாகக் கருதப்படுகிறது. இங்குள்ள முருகனின் வலது தொடையில் மச்சம் ஒன்று உள்ளது.

ஆலய நிர்வாகம்

1960- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10- ஆம் திகதி நிறுவப்பட்ட நாட்டுக்கோட்டை செட்டியார்கள் அறவாரியத்திலிருந்து ஆலய அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். கோயில் சொத்துகளைப் பராமரித்தல் போன்ற செயல்களை இவர்களே ஏற்று நடத்துகின்றனர்.

மேற்கோள்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.