பா. மதலைமுத்து

From Tamil Wiki
Revision as of 13:18, 20 November 2023 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மதலைமுத்து (ஜூன் 5, 1942) கவிஞர், எழுத்தாளர். ஆசிரியராகப் பணியாற்றினார். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை , ‘அருட்காவியம்’ என்ற தலைப்பில் நூலாக எழுதினார்.

பிறப்பு, கல்வி

மதலைமுத்து, ஜூன் 5, 1942 அன்று, சேலத்தில், பாப்பண்ணன் - பெரியநாயகியம்மாள் தம்பதியினருக்குப் பிறந்தார். சேலத்திலுள்ள சிறுமலர் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புவரைப் பயின்றார். இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றார். தமிழார்வத்தால் இளங்கலை, முதுகலைத் தமிழ் பயின்றார். பி.எட்., எம்.எட். பட்டங்களைப் பெற்றார்.

தனி வாழ்க்கை

மதலைமுத்து, பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளில் பணியாற்றிய மதலைமுத்து, ஆர் .வி. அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிப் பணி ஓய்வு பெற்றார். மனைவி: ஆரோக்கிய மேரி. இவர்களது மூத்த மகன் அருட்தந்தை வின்சென்ட் பாபு, ஆப்பிரிக்காவில் வேதபோதகராகப் பணியாற்றினார். இரண்டாவது மகன் தமிழ்ச்செல்வன், பெங்களூருவிலுள்ள மென்பொருள் தொழிலகத்தில் பொறியாளராகப் பணியாற்றினார். மகள் பூங்குழலி, தனியார் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

இயல்பிலேயே தமிழார்வம் கொண்டிருந்த மதலைமுத்து, திருச்சியிலுள்ள தூய வளனார் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் ச.சாமிமுத்துவின் தொடர்பால் மேலும் ஊக்கம் பெற்றார். அருட்தந்தை எரோணிமுசு அவர்களின் தூண்டுதலால், இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை ‘அருட்காவியம்’ என்ற தலைப்பில் நூலாக எழுதினார். 2009-ல் ‘விடியா வெள்ளி’ என்ற கவிதை நூலை எழுதினார்.