பா.வெங்கடேசன்

From Tamil Wiki
Revision as of 18:54, 3 February 2022 by Jeyamohan (talk | contribs)

பா.வெங்கடேசன் ( 1962) தமிழில் கதைகளும் நாவல்களும் எழுதிவரும் எழுத்தாளர். கவிஞர். சமகால அரசியலையும் வரலாற்றையும் இணைத்து ஊடுபிரதித்தன்மையுடன் அவர் எழுதிய நாவல்கள் புகழ்பெற்றவை.

பிறப்பு, கல்வி

பா.வெங்கடேசன் மதுரையில் 13. ஆகஸ்ட்1962ல் பாலசுப்பிரமண்யம், ருக்மிணி இணையருக்கு பிறந்தார். மதுரை தானப்பமுதலி தெரு அரசு துவக்கப்பள்ளியில் ஆரம்பக்கல்வியும் மணிநகர் மங்கையர்கரசி மேல்நிலைப் பள்ளியில் உயர்நிலைக்கல்வியும் பெருங்குடி சரஸ்வதி நாராயணா கலை அறிவியல் கல்லூரியில் பட்டப்படிப்பும் (இளநிலை வணிகவியல்) படித்தார்

தனிவாழ்க்கை

பா.வெங்கடேசன் நித்யாவை 05 நவம்பர்1989 ல் மணந்தார். பரத்வாஜ், கௌஷிக் என இரு மகன்கள். ஓசூர் டி.வி.எஸ் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

இலக்கியவாழ்க்கை

பா.வெங்கடேசனின் முதல் படைப்பு 1979ல் இளமையில் தந்தை வேலை செய்த நிறுவனத்தின் தொழிற்சங்க இதழில் வெளியாகியது. போக்குவரத்து விதிகளை மதிப்பது குறித்தான ஒரு கதை. 1988ல் கணையாழியில் வெளியான பேறு என்னும் கவிதைதான் முதல் படைப்பு. இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் : கநாசுப்ரமணியம், மார்க்வெஸ், மிலன் குந்தேரா, யோஸே சரமாகோ, 1001 இரவு அராபியக் கதைகள், விக்கிரமாதித்யன், மதனகாமராஜன் கதைகள் என்கிறார். தொடக்கத்தில் க.நா.சுப்ரமணியம் மயன் என்னும் பெயரில் எழுதிய கவிதைகளின் பாணியில் கவிதைகளை எழுதினார். பின்னர் ஐரோப்பிய நாவல்களின் தாக்கத்தால் ஊடுபிரதித்தன்மை கொண்ட நாவல்களை எழுதினார். வரலாற்றையும் சமகால அரசியலையும் தனிமனித வாழ்க்கையையும் தனித்தனிக் கதைகளாகப் பின்னி உருவாக்கப்படும் நாவல்கள் அவை.

விருதுகள்

2017 விளக்கு விருது

2018 ஸ்பாரோ விருது

2019 தமிழ்திரு விருது

நூல்கள்