பாமதி மரபு

From Tamil Wiki

பாமதி மரபு (பொயு900 – 980 ) அத்வைத வேதாந்தத்தின் ஒரு துணைப்பிரிவு. வாசஸ்பதி மிஸ்ரர் இந்த சிந்தனைப்போக்கின் முதலாசிரியர். இது அவித்யை என்னும் குறை பிரம்மத்தில் இல்லை, அது ஜீவாத்மாவுக்கு மட்டும் உரியது என வாதிடுகிறது

தோற்றம்

வேதாந்த மரபுக்குள் சங்கரர் உருவாக்கிய அத்வைதம் பிற்காலத்தில் பாமதி மரபு , விவரண மரபு என இரண்டாகப் பிரிந்தது. இப்பிரிவினை சங்கரரின் மரபைச் சேர்ந்தவர்கள் அவருடைய நூல்களுக்கும் அவரது மாணவரின் நூல்களுக்கும் அளித்த விளக்கங்களிலுள்ள வேறுபாடு வழியாக உருவானது. வாஸஸ்பதி மிஸ்ரர் சங்கரர் பிரம்மசூத்ர பாஷ்யத்திற்கு அளித்த விளக்கத்தில் இருந்து உருவானது. மண்டன மிஸ்ரரின் மாணவரான வாசஸ்பதி மிஸ்ரர் தன் ஆசிரியரின் கருத்துக்களுடன் சங்கரரின் அவித்யை பற்றிய கருத்துக்களை இணைத்து விளக்கம் அளித்தார்.

தத்துவம்

பாமதி மரபின் விவாதக்களம் விரிவானது. மிகச் சுருக்கமாக, அதன் கொடை என்பது அவித்வை பற்றிய சங்கரரின் கருத்தை விரிவாக்கம் செய்தது. சங்கரர் அவித்யை என்பது பிரம்மம்போலவே தொடக்கம் அற்றது (அனாதி) என்றார். அதை விளக்கும்போது வாஸஸ்பதி மிஸ்ரர் அவித்யை என்னும் அறியாமை, அல்லது பிரம்மமும் பிரபஞ்சமும் வேறுவேறென்னும் பிளவுப்புரிதல், உயிர்களாகிய ஜீவாத்மா வின் ஓர் இயல்பு என்றார். பாமதி மரபின்படி அவித்யை என்பது முழுக்க முழுக்க ஜீவாத்மாவைச் சார்ந்தது, ஜீவாத்மாவின் இயல்பிலுள்ள ஒரு குறை அது, அதற்கும் பிரம்மத்திற்கும் தொடர்பில்லை. முதல்முழுமையான பிரம்மத்தில் அப்படியொரு குறை இருக்கவியலாது.