பாமதி மரபு

From Tamil Wiki

பாமதி மரபு (பொயு900 – 980 ) அத்வைத வேதாந்தத்தின் ஒரு துணைப்பிரிவு. வாசஸ்பதி மிஸ்ரர் இந்த சிந்தனைப்போக்கின் முதலாசிரியர். இது அவித்யை என்னும் குறை பிரம்மத்தில் இல்லை, அது ஜீவாத்மாவுக்கு மட்டும் உரியது என வாதிடுகிறது

தோற்றம்

வேதாந்த மரபுக்குள் சங்கரர் உருவாக்கிய அத்வைதம் பிற்காலத்தில் பாமதி மரபு , விவரண மரபு என இரண்டாகப் பிரிந்தது. இப்பிரிவினை சங்கரரின் மரபைச் சேர்ந்தவர்கள் அவருடைய நூல்களுக்கும் அவரது மாணவரின் நூல்களுக்கும் அளித்த விளக்கங்களிலுள்ள வேறுபாடு வழியாக உருவானது. சங்கரர் எழுதிய பிரம்மசூத்ர பாஷ்யத்திற்கு வாஸஸ்பதி மிஸ்ரர் அளித்த விளக்கத்தில் இருந்து பாமதி உருவானது. மண்டன மிஸ்ரரின் மாணவரான வாசஸ்பதி மிஸ்ரர் தன் ஆசிரியரின் கருத்துக்களுடன் சங்கரரின் அவித்யை பற்றிய கருத்துக்களை இணைத்து விளக்கம் அளித்தார்.

பெயர்

வாசஸ்பதி மிஸ்ரரின் மனைவியின் பெயர்தான் பாமதி என்றும், அந்தப்பெயரை அவர் தன் நூலுக்கு அளித்தார் என்றும் ஒரு தொன்மம் உள்ளது. பாமதி என்பதற்கு நூல்சார்ந்து வேறு அர்த்தங்கள் ஏதுமில்லை என்பதனால் இத்தொன்மம் பொதுவாக ஏற்கப்படுகிறது.

தத்துவம்

பாமதி மரபின் விவாதக்களம் விரிவானது. மிகச் சுருக்கமாக, அதன் கொடை என்பது அவித்வை பற்றிய சங்கரரின் கருத்தை விரிவாக்கம் செய்தது. சங்கரர் அவித்யை என்பது பிரம்மம்போலவே தொடக்கம் அற்றது (அனாதி) என்றார். அதை விளக்கும்போது வாஸஸ்பதி மிஸ்ரர் அவித்யை என்னும் அறியாமை, அல்லது பிரம்மமும் பிரபஞ்சமும் வேறுவேறென்னும் பிளவுப்புரிதல், உயிர்களாகிய ஜீவாத்மா வின் ஓர் இயல்பு என்றார். பாமதி மரபின்படி அவித்யை என்பது முழுக்க முழுக்க ஜீவாத்மாவைச் சார்ந்தது, ஜீவாத்மாவின் இயல்பிலுள்ள ஒரு குறை அது, அதற்கும் பிரம்மத்திற்கும் தொடர்பில்லை. முதல்முழுமையான பிரம்மத்தில் அப்படியொரு குறை இருக்கவியலாது.

வாஸஸ்பதி மிஸ்ரரின் பாமதி மரபு மண்டனமிஸ்ரரின் மரபுடன் சங்கரரின் அத்வைதத்தை இணைக்கிறது. மண்டன மிஸ்ரரின் முன்னோடி மரபான பட்டமீமாம்சையுடனும் அடிப்படை இணைவுகளை கொள்கிறது. ஆத்மாதான் அவித்யையும் மையம், உறைவிடம் என்றாலும் ஆத்மாவின் மூலமாகிய பிரம்மம் அவித்யைக்கு அப்பாற்பட்டது, அது தன் ஈஸ்வர வடிவில் அவித்யையை ஆள்கிறது.

அவித்யையின் இயல்புகள் அல்லது பணிகள் இரண்டு, உண்மையை மறைத்தல், மாயையை விரித்தல்.   அவித்யை இரண்டு வகை என பாமதி மரபு சொல்கிறது. மூலஅவித்யை பிரபஞ்சத்தன்மை கொண்டது, மாயைக்கு நிகரானது, ஆகவே தொடக்கமற்றது, முடிவுமற்றது. ஆத்மாக்களில் திகழும் அவித்யை தூல அவித்யை எனப்படுகிறது. அது பிரம்மஞ்சானத்தால் சூரியன்முன் பனி போல் மறைவது. ஜீவாத்மா அவித்யையை உருவாக்குகிறது, அவித்யை ஜீவாத்மா என்னும் தனியிருப்பை உருவாக்குகிறது என்பது ஒரு முரண்பாடு என்னும் வினாவுக்கு அவித்யை, ஜீவாத்மா இரண்டுமே தொடக்கமில்லா முடிவிலிகள் என பாமதி மரபு பதிலுரைக்கிறது.

பாமதி மரபின் ஒரு தரப்பினர் அவித்யை அகன்றால் பிரம்மமே எஞ்சுகிறது, முடிவிலா தூயஅறிவாக. அந்நிலையில் அவித்யை அழிகிறது, ஆனால் அதற்கு முந்தைய நிலைவரை அவித்யை என்பது அந்த மெய்யறிவு இல்லாதநிலையாக, இன்மையாக, நீடிக்கிறது. அவித்யை என்பது இன்மையாதலால் இன்மையின் இருப்பு என்னும் கருதுகோள் பிழையானது, ஆகவே இன்மையின் தொடக்கமென்ன , இன்மையின் காரணமென்ன என்னும் கேள்விகள் பொருந்தாதவை. (குழந்தைபெறாதவளின் மகன் என்னும் உவமை. அது ஓர் இன்மையுருவகம் மட்டுமே. அந்த மகனின் இயல்பு, தோற்றம் பற்றி விவாதிக்கவேண்டியதில்லை)

நூல்கள்

பாமதி மரபின் முக்கியமான ஆசிரியர்கள்- நூல்கள் என இவை குறிப்பிடப்படுகின்றன.

  • வாசஸ்பதி மிஸ்ரர்- பாமதி
  • அமலானந்தர் – கல்பதரு
  • அப்பய்ய தீட்சிதர் -பரிமள
  • லக்ஷ்மிந்ருசிம்ஹர் அபோகா
  • அல்லால சூரி -பாமதி திலக
  • ஸ்ரீரங்கநாதர்- பாமதி வியாக்யாய

தத்துவ இடம்

பாமதி மரபு அத்வைதத்திற்கும் பூர்வமீமாம்சைக்கும் தத்துவார்த்தமான தொடர்பை உருவாக்கியது. பட்டமீமாம்சையின் ஸ்போட என்னும் கருதுகோளுக்கு அத்வைதத்துடனான உறவு அவ்வாறாக அமைந்தது. மீமாம்சையின் இலக்கணவாதம், ஒலிவாதம் ஆகியவை அத்வைதத்துடன் உரையாட வழிவகுத்தது. முழுமுதல் பிரம்மத்தை முன்வைக்கும் பிரம்மவாதம் பாமதி மரபால் தர்க்கபூர்வமாக விளக்கப்பட்டது. பின்னாளில் பாமதி மரபு வலுவிழக்க, விவரண மரபே பரவலாக முன்னெடுக்கப்பட்டது.

உசாத்துணை

THE BHAMATI AND VIVARANA SCHOOLS