பராங்குசதாசர்

From Tamil Wiki
Revision as of 14:48, 23 February 2022 by Subhasrees (talk | contribs) (பராங்குசதாசர் - முதல் வரைவு)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பராங்குசதாசர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கர்னாடக இசைக் கலைஞர். இவரது பாடல்கள் இசை நிகழ்ச்சிகளிலும் பஜனை கூடங்களிலும் புகழ்பெற்றவை.

இளமை

பராங்குசதாசர் 1828 ஐப்பசியில் (சர்வதாரி ஆண்டு) சைவவேளாள குலத்தில் பிறந்தார். தந்தை பரகாலர். இவரது இயற்பெயர் தெரியவில்லை.

தனிவாழ்க்கை

வேதவல்லியை மணந்து ஆளவந்தான் என்ற மகனைப் பெற்றார். இவர் திருவல்லிக்கேணியில் வாழ்ந்த அதிதங்கி திருவேங்கடாசாரியாரை தன் குருவாக வரித்துக்கொண்டவர்.பராங்குசதாசர் என்னும் பெயரை இவர் குரு இவருக்கு அளித்தார்.

இசைப்பணி

இவருடைய கீர்த்தனைகள் அரி பஜனைக் கீர்த்தனம் என்ற பெயரில் பலமுறை அச்சாகி இருக்கிறது. முதல் பதிப்பில் 31 கீர்த்தனங்கள் தொகுக்கப்பட்டு, பின்னர் 69 சேர்க்கப்பட்டு, 100 கீர்த்தனைகளாக வெளிவந்தன. பல பாடல்கள் நெஞ்சுக்கு உரைப்பது போல எழுதப்பட்டவை. அவற்றுள் ஒன்று:

ராகம்: நாதநாமக்கிரியை, த்ரிபுட தாளம்

பல்லவி:

ராம நாமத்தைச் சொல் மனமே - இந்த

அனுபல்லவி:

நாமத்தால் நமனை வெல்லலாமென்று தினமே - (ராம நாம)

சரணம்:

காமாந்தகாரத்தை நீக்கும் - நமது

கருத்திலிருக்கும் கோரிக்கையளித்துக் காக்கும்

பாமர குணங்களைப் போக்கும் - பொல்லாப்

பாச பந்தங்களறுத்துச் சத்பக்தனாயாக்கும் (ராம நாம)

பாடல்கள்

அவர் இயற்றிய கீர்த்தனைகளில் சில:

  • ஓடிவா ராமையா என்முன் - ராகம் முகாரி - அடதாளம்
  • இருந்தென்ன போயென்ன இவ்வுலகத்தில் - ராகம் பெஹாக் - ஆதி தாளம்
  • ஸ்ரீரகுபதியுந்தன் திருமலரடிகளை - ராகம் நாதநாமக்கிரியை - ஆதி தாளம்

வாழ்க்கைப் பதிவுகள்

இவரது வரலாற்றை பராங்குசதாசர் வைபவ சங்கிரகம் என்ற பெயரில் 47 கண்ணிகள் கொண்ட ஒரு சிந்துப் பாடலாக வகுளாபரணதாசர் என்பவர் பாடியிருக்கிறார். இது 1874ல் பதிப்பிக்கப்பட்டது.