under review

பரவர் புராணம்

From Tamil Wiki
Revision as of 10:11, 18 December 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (category and template text moved to bottom of text)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பரவர் புராணம் (1909) கிறித்தவ இலக்கிய நூல்களுள் ஒன்று. ’பரவை’ என்னும் கடலை ஒட்டி வாழும் பரதவர்களின் வரலாற்றையும், அவர்கள் கிறிஸ்தவ மதத்தை ஏற்றது பற்றியும் கூறுகிறது. இதனை இயற்றியவர், த. அருளப்ப முதலியார்.

பிரசுரம், வெளியீடு

பரவர் புராணம், 1909-ல் மதுரை விவேகபாநு அச்சியத்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டு வெளியானது. இதனை இயற்றியவர், த. அருளப்ப முதலியார்.

நூல் அமைப்பு

பரவர் புராணம், 9 இலம்பகங்களைக் கொண்டுள்ளது. அவை,

  • சிருட்டியிலம்பகம்
  • கலப்பிராயவிலம்பகம்
  • பலபாஷவிலம்பகம்
  • இந்துமதம் வந்த விலம்பகம்
  • சந்திர வம்சம் பரத வம்சமான விலம்பகம்
  • சந்திர வம்சத்தார் பாண்டியரான விலம்பகம்
  • பாண்டியர் பரவரான விலம்பகம்
  • பரவர் கிறிஸ்துவரான விலம்பகம்
  • ஜாதித் தலைவர் இலம்பகம்

இந்நூலில் 807 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தொடக்கத்தில் இறை வாழ்த்தாக ‘சேசுநாதர் வணக்கச் செய்யுள்’ இடம் பெற்றுள்ளது. அது, ‘ஒருகருணை யீரியல்பு மூன்று வேத முயர் நான்கு சுவிசேச மைந்து காயம்’ எனத் தொடங்கி இயேசுவின் பெருமையைப் பேசுகிறது. பாடல்களுக்கான உரையையும் ஆசிரியரே எழுதியுள்ளார்.

நூல் பற்றிய செய்திகள்

இந்நூல், பரவர் எனப்படும் பரதவர் குல வரலாற்றைக் கூறுவதால் ‘பரவர் புராணம்’ என்ற பெயரைப் பெற்றது. பரவர் குலத்தைச் சாராத, கத்தோலிக்கக் கிறித்தவ மத்தைச் சார்ந்த த. அருளப்ப முதலியார் 1909-ல், இந்நூலை இயற்றினார்.

பரவர் புராணம் நூல் பற்றிப் பேராசிரியர் நா. வானமாமலை, தனது ‘தமிழ்நாட்டில் சாதி சமத்துதவப் போராட்டக் கருத்துக்கள்’ என்ற நூலில், “பண்டைக்கால இதிகாச மன்னர்களோடு தங்களைத் தொடர்புபடுத்திக்கொண்டு ஒரு புதிய புராணத்தை இந்நூலாசிரியர் இயற்றினார். இதன் பின்னர் 1535-37 ஆண்டுகளில் பரதவர் கிறிஸ்தவரானதும், போர்த்துக்கீசியர் உதவி பெற்று முத்துச் சலாபம் நடத்தியதும், அவர்கள் உதவியால் தங்களுக்குள் ஒரு சாதித் தலைவரை ஏற்படுத்திக்கொண்டு, அவரையே பரத பாண்டியர் என்னும் பெயரோடு ஆளுகையற்ற அரசராகக் கொண்டதும், அவரது வம்ச பரம்பரை விவரங்களும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. இந்நூலில் பரதவர் சாதிச் சிறப்புக்கு அவர்கள் செல்வர்களது சிறப்பே காரணம் என்ற கருத்தே வலியுறுத்தப்படுகிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.

மதிப்பீடு

கிறிஸ்தவ இலக்கியங்களில் இயேசுபெருமானையோ, பிற இறைத் தூதர்களையோ, இயேசு போதனைகளின் சிறப்பையோ பாடாமல், பரதவர்களான கிறித்தவர்களின் உயர்வை, சாதிப் பெருமையை, வரலாற்றைக் கூறும் நூலாகப் பரவர் புராணம் அமைந்துள்ளது. இதிகாச நிகழ்வுகளுடன் தம் சாதியைத் தொடர்புபடுத்திக் கொள்ளும் போக்கு இந்நூலில் காணப்படுகிறது. இந்நூல் பற்றி, பேராசிரியர் நா. வானமாமலை, “இந்துப் புராணக் கதைகளை ஒப்புக்கொண்டு தங்கள் சாதியாருக்கு அரசவம்சத்தில் உயர்ந்த பதவியைப் பெறப் புதுக்கதைகளை இந்நூல் படைக்கிறது.” என்று மதிப்பிட்டுள்ளார்.

உசாத்துணை

  • தமிழ்நாட்டில் சாதி சமத்துதவப் போராட்டக் கருத்துக்கள், பேராசிரியர் நா. வானமாமலை, மக்கள் வெளியீடு, சென்னை – 600 002, முதல் பதிப்பு, 1980.
  • பரவர் இணையதளம்


✅Finalised Page