standardised

பம்மல் சம்பந்த முதலியார்

From Tamil Wiki
Revision as of 10:17, 22 April 2022 by Tamaraikannan (talk | contribs)
பம்மல் சம்பந்த முதலியார்
பம்மல் சம்பந்த முதலியார்

பம்மல் சம்பந்த முதலியார் (ஞானசம்பந்தம்) (பிப்ரவரி 1, 1873 - செப்டெம்பர் 24, 1964) தமிழ் நாடகங்களை உரைநடை வடிவில் எழுதிய முன்னோடி நாடக ஆசிரியர். தமிழ் நாடக உலகு குறித்த பல நூல்களை எழுதியவர். வழக்கறிஞர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர்.

பிறப்பு, கல்வி

சம்பந்த முதலியார் சென்னையை அடுத்துள்ள பம்மலில் விஜயரங்க முதலியார் - மாணிக்கவேலு அம்மாளுக்கு பிப்ரவரி 1, 1873 அன்று பிறந்தார். இவர் தந்தை வேதரங்கம் முதலியார் 1872-ஆம் ஆண்டு சிவதீட்சை பெற்றவர். அந்த காலகட்டத்தில் பிறந்ததனால் மகனுக்கு ஞானசம்பந்தம் எனப் பெயரிட்டார்.

வேதரங்கம் முதலியார் தமிழ் ஆசிரியராகவும், கல்வித்துறை ஆய்வாளராகவும் இருந்தவர். தமிழ் நூல்களை வெளியிட்டும் வந்தார். அவர்களது வீட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. எனவே சம்பந்தர் இளமை முதலே வாசிப்பின் மீது ஈடுபாடு கொண்டிருந்தார்.

திண்ணைப் பள்ளியில் கல்வியைத் துவங்கிய சம்பந்தம், சென்னை பிராட்வேயில் இருந்த இந்து புரொபரைடரி பள்ளியிலும், பின்னர் கீழ்பாக்கத்தில் இருந்த கோவிந்தப்ப நாயக்கர் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். 1885-ல் முதல் மாணவராக தங்கப்பதக்கம் பெற்றார்.

மாநிலக் கல்லூரியில் பி.ஏ. பட்டபடிப்பு முதல் வகுப்பில் தேறினார். பின்னர் சட்டக்கல்லூரியில் பயின்று 1896-ஆம் ஆண்டு சட்டத் தேர்வில் தேறி சுந்தரம் சாஸ்த்ரியார் என்ற வழக்கறிஞரிடம் பயிற்சியில் சேர்ந்தார்.

தனிவாழ்க்கை

பம்மல் சம்பந்த முதலியார்
பம்மல் சம்பந்த முதலியார்

சம்பந்த முதலியாருக்கு 1890-ல் திருமணம் நடந்தது.

1898 முதல் உயர்நீதி மன்ற வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டு வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார். 1924 முதல் 1928 வரை நீதிபதியாகவும் வேலை பார்த்தார்.

வழக்கறிஞர் ஆவதற்கு முன்னரே சம்பந்த முதலியாருக்கு நாடகத்துறை மீது ஆர்வம் இருந்தது. “ஆந்திர நாடகப் பிதாமகன்” என்றழைக்கப்பட்ட பல்லாரி வி. கிருஷ்ணமாச்சாரியலு என்ற வழக்கறிஞர் சம்பந்தனாரின் நெருங்கிய நண்பர். அவர் தனது அனுபவத்தின் அடிப்படையில் வழக்கறிஞராக வெற்றி பெற வேண்டுமானால் நாடகத்தை ஒதுக்கி விடுமாறு அறிவுரை கூறினார். சம்பந்தனார் வழக்கறிஞராக இருந்து கொண்டே நாடகத்திலும் ஈடுபட விரும்பினார். எனவே நேரத்தை அதற்கேற்ப வகுத்துக் கொண்டு பகற்பொழுதை வழக்கறிஞர் பணிகளுக்கும் மாலை நேரத்தை முழுமையாக நாடகத்துக்குமென ஒதுக்கிக்கொண்டார்.

வழக்கறிஞர் துறையிலும் தேர்ந்தவர் எனப் பெயர் பெற்றார். சர்.சி.பி. ராமசாமி ஐயரின் வேண்டுகோளின் படி 1924-ஆம் ஆண்டு சிறு வழக்கு நீதிமன்றத்தின் நீதிபதியானார்.

சமயப் பணிகள்

பம்மல் சம்பந்த முதலியாரின் குடும்பம் சைவ சமயப் பிண்ணனி கொண்டது. இவரது தந்தை சென்னை ஏகாம்பரேஸ்வர கோவிலுக்கும் பெரிய காஞ்சீபுரம் கோவிலுக்கும் அறங்காவலராக இருந்தார். சிறுவயது முதலே சமயம் சார்ந்த பணிகளில் ஈடுபாடும் பக்தி உணர்வும் நிரம்பியிருந்த சம்பந்தம், 1900-ஆம் ஆண்டு மயிலை கபாலீஸ்வரர் ஆலய அறங்காவலராகப் பணியேற்றார். 24 ஆண்டுகள் அப்பொறுப்பில் இருந்தார். ஆலய நிர்வாகத்தில் கோவில் வரவு செலவுகளை அறங்காவலர் நேரடியாக செய்யாது வங்கிக் கணக்குகள் மூலமாகவே செய்ய வேண்டும் என்பது முதலிய பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார், ஊழல் குறைய வழிவகுத்தார்.

சமூகப் பணிகள்

1898 முதல் சென்னை மதுவிலக்கு சங்கத்தில் சேர்ந்து மதுப்பழக்கத்தை எதிர்த்து மக்களிடம் பேசி வந்தார். 64 ஆண்டுகள் இதன் செயல்பாடுகளில் ஈடுபட்டார்.

தென்னிந்திய விளையாட்டுக் கழகத்தில் உறுப்பினராகவும் பின்னர் துணைத்தலைவராகவும் செயலாற்றினார். சென்னைப் பல்கலைக்கழகத்திலும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் ஆட்சிக் குழுவிலும் இருந்திருக்கிறார். பள்ளிப்பாட நூல் இலக்கியக் கழகத்தில் உறுப்பினராக இருந்து கல்வித்திட்ட மேம்பாட்டுக்கும் பணிபுரிந்திருக்கிறார்.  

நாடகத்துறைப் பணி

சுகுண விலாச சபை நாடகக்குழுவினர்
சுகுண விலாச சபை நாடகக்குழுவினர்
பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடகங்கள்
பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடகங்கள்
பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடகங்கள்
பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடகங்கள்
பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடகங்கள்
பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடகங்கள்

தமிழில் நவீன வடிவில் நாடகங்களை எழுத வேண்டுமென பம்மல் சம்பந்த முதலியார் எண்ணினார். மேலைநாட்டு நாடகங்களையும் வடமொழி நாடகங்களையும் நன்கு கற்றார்.  

1891-ல் சென்னையில் சுகுண விலாச சபை என்ற நாடகக் குழுவைத் தொடங்கினார். முதன்முதலில் 1883-ல் புஷ்பவல்லி என்ற நாடகத்தை உரைநடை வடிவில் எழுதி சென்னை விக்டோரியா ஹாலில் அரங்கேற்றினார். புராண இதிகாச வடிவ நாடகங்களே புகழ் பெற்றிருந்த அக்காலகட்டத்தில் கர்ணன், சிறுத்தொண்டர் போன்ற கதைகளைத் தேர்ந்தெடுத்து உலக நடப்புக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து முயன்று பார்த்தார். அது மக்களிடம் வரவேற்பு பெற்ற பிறகு சமூகக் கதைகளை நாடக வடிவில் எழுதினார்.

பாடல்கள் நிறைந்த நாடக மேடைகளில் பாடல் இல்லாமல் உரைநடையாகவே நாடகங்களை இயற்றியிருக்கிறார். இசை நாடகத்துக்கு இடையே பாடலாக இல்லாமல் பின்னணிக்கு உதவும் வகையில் இடம்பெறச் செய்தார். வசனங்களில் அடுக்குமொழிகளை விடுத்து நேரிடையான எளிய வாக்கியங்களை அமைத்தார்.[1]

பம்மல் சம்பந்த முதலியார் பலவகையான நாடகங்களை எழுதி அரங்கேற்றியிருக்கிறார்.[2]

பேருணர்வு இன்பியல்(Serious comedy)

இவ்வகை நாடகங்கள் இன்பமான முடிவு கொண்டிருந்தாலும் நாடகத் தலைவனும் தலைவியும் பலவகையான துன்பங்களுக்கு உள்ளாகி அலைக்கழிக்கப் படுவார்கள். புஷ்பவல்லி, மெய்க்காதல், இரு சகோதரிகள், போன்ற நாடகங்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.

மென்மை இன்பியல் (Light Comedy)

இன்பியல் கூறாகிய நகைச்சுவையை முதன்மையாகக் கொண்டிருக்கும் வடிவம். சதிசக்தி, வைகுண்ட வைத்தியர், சங்கீதப் பைத்தியம், சோம்பேறி சகுனம் பார்த்தல் போன்ற நாடகங்கள் இவ்வகையிலானவை. நகைச்சுவையிலேயே அங்கதச் சுவை(sattire) மிகுந்த நாடகங்கள் மற்றொரு வகையாகும். சம்பந்த முதலியார் எழுதிய சபாபதி வரிசை நாடகங்கள் அனைத்தும் அங்கத நாடகங்கள்.

நாடக நையாண்டி (Burlesque)

மேடையில் ஏற்கனவே புகழ் பெற்றிருக்கும் நாடகங்களை நேர்மாறாக மாற்றி நடிப்பது நாடக நையாண்டி வகை. அரிச்சந்திரன் என்னும் புகழ்பெற்ற நாடகத்தை சந்திரகரி என்ற பெயரில் மாற்றி பொய்யன்றி ஏதும் பேசாத கதை நாயகனை வைத்து எழுதியது இவ்வகைக்கு ஒரு உதாரணம்.

துன்பியல் (Tragedy)

இந்திய நாட்டு மரபில் முழுவதும் துன்பியல் சுவையில் நாடகங்கள் இயற்றும் வழக்கம் இல்லாதிருந்தது. மேலை நாட்டு நாடகங்களைப் பார்த்து சிலர் துன்பியல் நாடகங்கள் எழுதத் தொடங்கினர். சம்பந்தனார் முதலில் கள்வர் தலைவன் என்ற நாடகத்தை துன்பியல் நாடகமாக எழுதினார். அதன் பிறகு இரு நண்பர்கள், உண்மையான சகோதரன் ஆகியவையும் இந்த வகைமையில் எழுதப்பட்டன.

புராண இதிகாச நாடகங்கள்

தன் நாடக வாழ்வின் முற்பகுதியில் யயாதி, கர்ணன், காலவ ரிஷி போன்ற பல புராண நாடகங்களை எழுதியுள்ளார். கூடுமானவரை நம்பமுடியாதவற்றை நீக்கி எழுதியது அன்று ஒரு புதுமையாகும்.

பெருவழக்கு கதை நாடகங்கள்

சம்பந்தனார் அரிச்சந்திரன், சாரங்கதரன், நல்லதங்காள் போன்ற பெருவழக்கு நாடகங்களை இயற்றினார்.

வரலாற்று நாடகம்

உண்மையாக நடைபெற்ற நிகழ்வுகளை கால உணர்வுடன் நிகழ்த்துவது வரலாற்று நாடகங்கள். புத்த அவதாரம் என்ற ஒரு வரலாற்று நாடகத்தை பம்மல் சம்பந்தம் எழுதினார்.

சமூக நாடகங்கள்

வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை நாடகமாக அமைப்பது. பொன் விலங்குகள் என்ற சமூக நாடகத்தை 1910-ஆம் ஆண்டு சம்பந்தனார் எழுதினார். அதன் வெற்றிக்குப் பிறகு விஜயரங்கம், உத்தம் பத்தினி, தாசிப் பெண் போன்ற பல சமூக நாடகங்களை எழுதினார்.

பம்மல் சம்பந்த முதலியார் ராயல்டி பெற்றுக் கொண்ட ரசீது
பம்மல் சம்பந்த முதலியார் ராயல்டி பெற்றுக் கொண்ட ரசீது
பிறமொழி நாடகங்கள்

வடமொழி, ஆங்கிலம், ஃப்ரெஞ்சு மொழியில் இருந்து தமிழுக்கு சில நாடகங்களை சம்பந்த முதலியார் கொண்டுவந்தார். அமலாதித்தன் (Hamlet), விரும்பிய விதமே (As you like it), வாணீபுரத்து வணிகன் (Merchant of Venice), மகபதி (Macbeth) இவர் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்த நாடகங்களில் குறிப்பிடத்தக்கவை. இவை வெறும் மொழிபெயர்ப்பாக அல்லாமல், மென் தழுவல் என்னும் முறையில் மூல நூலின் அமைப்பு முறைகளையும் கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டு ஆங்கிலப் பெயர்களை தமிழ்ப்படுத்தி தமிழ்நாட்டின் வழக்கங்களுக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து இயற்றியிருக்கிறார்.

நாடக ஆசிரியராக ஆற்றிய பணிகளைத் தவிர நடிகராகவும் இயக்குனராகவும் பல நாடகங்களில் பங்கேற்றிருக்கிறார். பாத்திரப் பண்பு, நாடக அமைப்பு, நடிக்க வேண்டிய முறை ஆகியவை குறித்த அறிதல் இருந்தமையால் சம்பந்தனார் பல்வேறு நேர்நிலை, எதிர்மறை பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார். நாடகம் நூல் வடிவில் சிறப்பாக அமைய நாடக ஆசிரியர் காரணமாவது போல மேடையேறும் போது இயக்குனரின் பங்கு முக்கியமானது. கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்களைத் தேர்ந்தெடுப்பது, நடிகர்களை நுட்பமாகத் தூண்டி தேவையான நடிப்பை பெறுவது, தந்திரக் காட்சிகளை மேடையில் அரங்கேற்றுவது, காட்சிகளுக்கு பொருத்தமான ஒவியங்களைத் பிண்ணனித் திரையில் இடம்பெறச் செய்வது போன்ற பல கூறுகளை கையாண்டு பெயர் பெற்றிருக்கிறார்.

மேல்நாட்டு முறையைப் பின்பற்றி, ’பயிற்றுமுறை நாடகக் குழு’ ஒன்றை ஏற்படுத்தி, ஒத்திகை முதலிய வழக்கங்களை சீர்படுத்தி அதன் வழியாக பலரை பயிற்றுவித்தார்.

விருதுகள்

  • பத்மபூஷண் - 1959
  • சங்கீத நாடக அகாதமி விருது - 1959
  • நாடகப் பேராசிரியர் விருது - 1916

நாடக்ககலை மதிப்பீடு

பம்மல் சம்பந்த முதலியார் காலத்தில் பல விதமான மாற்றங்கள் நாடக மேடையில் வந்தன. புதுமையான காட்சி அமைப்புகளை பலவிதமான உத்திகள் மூலம் அமைத்தனர். மரபை வளர்க்கும் எண்ணம் கொண்டவராக இருந்தாலும் கலையில் பலவிதமான புதுமைகளை செய்து பார்த்தவராக சம்பந்த முதலியார் முன்னோடியாக அறியப்படுகிறார்.

மறைவு

1950 முதல் உலகியல் பொறுப்புகள் அனைத்தையும் மகன் வரதராஜனிடம் ஒப்படைத்துவிட்டு தனிமை வாழ்வு மேற்கொண்டார். முதுமையால் கண்பார்வை குறைபாடு ஏற்பட்டது. அந்நிலையிலும் பல நூல்களை பிறரது உதவியுடன் எழுதினார்.

செப்டம்பெர் 24, 1964 அன்று மரணமடைந்தார். 

வாழ்க்கைப் பதிவுகள்

  • ”என் சுயசரிதை” என்ற பெயரில் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார்.
  • சாகித்திய அகாடமி வெளியிட்ட இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் “பம்மல் சம்பந்த முதலியார்” என்னும் வாழ்க்கை வரலாற்று நூல் ஏ.என். பெருமாள் எழுதி வெளியானது.

படைப்புகள்

வேதாள உலகம்
வேதாள உலகம்
நாடகங்கள்

தமிழ் நாடகத் தந்தை என்றழைக்கப்பட்ட சம்பந்த முதலியார் 94 நாடகங்கள் எழுதியுள்ளார். அவற்றுள் முக்கியமான சில[3]:

  • மனோஹரா (1895 - சுகுணவிலாச சபையிலும், மற்ற இடங்களிலும் 859 முறை நடிக்கப் பட்டது)
  • லீலாவதி சுலோசனா - (50 தடவை சபையிலும், மற்ற இடங்களில் 286 முறையும்)
  • புஷ்பவல்லி (சம்பந்தத்தினுடைய முதல் நாடகம்)]
  • சுந்தரி - (சுகுண விலாச சபையின் முதல் நாடகம்)
  • சாரங்கதரா (198 முறை)
  • கள்வர் தலைவன்
  • காலவ ரிஷி (1899 - 307 முறை மேடையேறியது)
  • காதலர் கண்கள் (1902 - 190 முறை மேடையேற்றம்)
மொழியாக்க நாடகங்கள்
  • விரும்பிய விதமே (As You Like It தமிழாக்கம்)
  • வாணீபுர வணிகன் (Merchant of Venice தமிழாக்கம்)
  • அமலாதித்தன் (Hamlet தமிழாக்கம்)
  • மகபதி (Macbeth தமிழாக்கம்)
  • சிம்ஹலநாதன் (Cymbalene தமிழ்வடிவம்)
  • பேயல்ல பெண்மணியே (La Somnambula தமிழ்வடிவம்)
பிற நாடகங்கள்
  • காளப்பன் கள்ளத்தனம்
  • சாகுந்தலம்
  • மாளவிகாக்கினிமித்திரம்
  • விக்ரமோர்வசீயம்
  • ரத்னாவளி
  • ம்ருச்சகடிகம்
  • யயாதி
  • இரு நண்பர்கள்
  • சபாபதி
  • விஜயரங்கம்
  • சர்ஜன் ஜெனரலின் பிரஸ்கிரிப்ஷன்
  • சதி சுலோசனா
  • சுல்தான் பேட்டை சப் அசிஸ்டண்ட் மாஜிஸ்ட்ரேட்
  • நல்ல தங்காள்
  • ஸ்த்ரீ சாஹசம்
  • விருப்பும் வெறுப்பும்

வெள்ளித் திரையில் வெளிவந்த நாடகங்கள்:

  • காலவ ரிஷி (1932)
  • ரத்னாவளி (1935)
  • மனோஹரா (1936, 1954)
  • லீலாவதி சுலோசனா (1936)
  • சபாபதி (1941)
  • வேதாள உலகம்[4] (1948)

பிற நூல்கள்

  • தமிழ் நாடக வரலாறு
  • நாடக மேடை நினைவுகள் (ஆறு பாகங்கள்) (1932, 1933, 1935, 1936, 1936, 1938) - 1891 தொடங்கி அவருடைய நாடக மேடை அனுபவங்களின் தொகுப்பு
  • நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி (1936) - நடிக்க வருபவர்களுக்கான நூல்
  • நான் கண்ட நாடகக் கலைஞர்கள் (1964) - நாடக உலகின் முன்னோடிகள் பலரைக் குறித்த முக்கிய நினைவுப் பதிவுகள். மராட்டிய நாடகக் கலைஞர்களான சுப்பாராவ், குப்பண்ணாராவ், பஞ்சநாதராவ் போன்றவர்கள் குறித்த அரிய தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன. தமிழில் கிட்டப்பா, கே.பி. சுந்தராம்பாள், டி.கே.சி சகோதரர்கள், சங்கர்தாஸ் சுவாமிகள், எம்.ஜி.ராமச்சந்திரன், சிவாஜி கணேசன் போன்ற பலர் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.
  • பேசும்பட அனுபவங்கள் (1938) - சம்பந்த முதலியாரின் திரைப்படத் துறை அனுபவங்கள்
  • தமிழ்ப் பேசும்படக் காட்சி (1937) - திரைப்படம் தொடர்பான பல தகவல்களை - ஸ்டுடியோ, காமிரா, பலவிதமான ஷாட்கள், குளோஸ் அப் போல பல திரைத்துறை சார்ந்த தொழில்நுட்ப தகவல்களை அறிமுகம் செய்யும் நூல்
  • கதம்பம் (1938) - பதினொரு கதைகளின் தொகுப்பு
  • பல்வகைப் பூங்கொத்து (1958) - ஏழு கதைகளின் தொகுப்பு
  • ஹாஸ்யக் கதைகள் (1936) - ஆறு தலைப்புக்களில் நகைச்சுவைக் கதைகளின் தொகுப்பு
  • தீட்சிதர் கதைகள் (1936)
  • ஹாஸ்ய வியாசங்கள் (1937) - நகைச்சுவைக் கட்டுரைகள்
  • சிவாலயங்கள் - இந்தியாவிலும் அப்பாலும் - ஐந்து பாகங்கள் (1945, 1946, 1948, 1948, 1948)
  • சுப்பிரமணிய ஆலயங்கள் (1947)
  • சிவாலய சிற்பங்கள் (1946)
  • சிவாலய உற்சவங்கள் (1949)
  • என் சுயசரிதை (1963) - தன் வரலாற்று நூல்
  • காலக் குறிப்புகள்[5]

உசாத்துணை, குறிப்புகள்



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.