பத்மினி ராஜமாணிக்கம்
பத்மினி ராஜமாணிக்கம் (பிறப்பு: பிப்ரவரி 14, 1956) மலேசிய எழுத்தாளர். சிறுகதை, புதுக்கவிதை, கட்டுரை, குறுநாவல் எனப் பல்வேறு துறையில் பங்களித்தவர். இவர் ஒரு பத்திரிகையாளர்.
பிறப்பு, கல்வி
பத்மினி ராஜமாணிக்கம் பிப்ரவரி 14, 1956 அன்று சுங்கை பட்டாணியில் அமைந்துள்ள கோல முடா தோட்டத்தில் பிறந்தார். இவரது தந்தை ராஜமாணிக்கம். தாயார் முனிம்மா. நான்கு சகோதரர்கள் மூன்று சகோதரிகள் உள்ள குடும்பத்தில் ஐந்தாவது பிள்ளையாகப் பிறந்தார். கே.எம்.எஸ் டிவிஷன் கோலமுடா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்தவர் பத்து டூவா இடைநிலைப்பள்ளியில் ஐந்தாம் படிவம் வரை பயின்றார். பின்னர், எம்.சி.இ முடித்து இதழியல் துறையில் டிப்ளோமா பெற்றார்.
தனி வாழ்க்கை
1979 முதல் 1981 வரை சொந்த பாலர்பள்ளியை உருவாக்கி நடத்தியவர் 1982 முதல் பத்திரிகையில் தன் பணியைத் தொடங்கினார். தமிழ் ஓசை, மலேசிய நண்பன், தமிழ்க்குரல், தமிழ் நேசன் ஆகிய நாளிதழ்களிலும் மயில், நாம் ஆகிய சஞ்சிகைகளிலும் வணக்கம் மலேசியா.காம்[1] எனும் இணைய இதழிலும் பணியாற்றியுள்ளார். நவம்பர் 10, 1984 அன்று எழுத்தாளர் அக்கினி சுகுமாரை திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள்.
இலக்கிய வாழ்க்கை
பத்மினி ராஜமாணிக்கத்தின் முதல் கட்டுரை 1970-ல் தமிழ் நேசன் மாணவர் பகுதியில் 'நெருப்புடன் நெருங்கிய பேய்' எனும் தலைப்பில் இடம்பெற்றது. 1976-ம் ஆண்டு தமிழ் நேசனில் 'சேற்றுச் செந்தாமரை' எனும் இவரது முதல் சிறுகதை இடம்பெற்றது. எழுத்துத் துறையில் ஆர்வம் ஏற்பட்டு சிறுகதைகள், தொடர்கதைகள், குறுநாவல்கள், கட்டுரைகள், வானொலி நாடகங்கள், புதுக்கவிதை என தொடர்ந்து எழுதினார். நாளிதழ்களில் பணியாற்றியது இவர் தொடர்ந்து எழுதுவதற்கான சூழலை உருவாக்கிக் கொடுத்தது. இவரது சிறுகதைகள் 'ஆரம்பம் நீதான்' எனும் தலைப்பில் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. கணவர் அக்கினி சுகுமார் மரணத்துக்குப்பின் அவரது படைப்புகளைத் தொகுத்து நூலாக்கினார்.
இலக்கிய இடம்
நாளிதழ்களுக்கு ஏற்ப எழுதப்பட்டதால் இவரது சிறுகதைகளும் நீள்கதைகளும் கவிதைகளும் பொதுவாசகர்களின் வாசிப்பு ரசனைக்கு ஏற்ப அமைந்திருந்தன. ஞாயிறு பத்திரிகையின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியபோது நவீன இலக்கியத்திற்கு இவர் அதிக இடம் கொடுத்து வெகுமக்கள் மத்தியில் இலக்கிய வாசிப்பை ஊக்கப்படுத்தினார்.
விருதுகள்/பரிசுகள்
- புதுக்கவிதை இரண்டாம் பரிசு - கெடா மாநில நவீன இலக்கிய சிந்தனை (1980)
- தமிழ் நேசனின் சிறுகதைக்கானபவுன் பரிசு (1981)
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதையும் தேர்வு பெற்றது (1981)
- தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் கட்டுரை போட்டி - முதல் பரிசு (1995)
- செம்பருத்தி நாவல் போட்டி - இரண்டாம் பரிசு (2002)
- சுற்றுச் சூழல் அமைச்சின் கட்டுரைப் போட்டிக்கான விருது (2002)
நூல்கள்
சிறுகதைத் தொகுப்பு
- ஆரம்பம் நீதான் (2013)
தொகுப்புப் பணி
- இறையாய் இரு கனா - அக்கினி சுகுமார் கவிதைகள் (2022)
உசாத்துணை
- ஆரம்பம் நீதான் – சிறுகதை தொகுப்பு (2013)
- மலேசியத் தமிழ் இலக்கியத் துறையில் பெண்கள் - ந. மகேஸ்வரி (வல்லினம் ஜூன் 2007)
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:36:00 IST