பஞ்சக்கும்மிகள்

From Tamil Wiki
Revision as of 15:41, 20 January 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "பஞ்சக்கும்மிகள் பஞ்சகாலத்தில் மக்கள் பட்ட துயரங்களைப் பற்றிய வாய்மொழிப்பாடல்கள். கும்மி என்பது பெண்கள் கைகொட்டியபடி ஆடும் ஒருவகை ஆட்டம். அந்த ஆட்டத்திற்குரிய பாடல் கும்மிப...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பஞ்சக்கும்மிகள் பஞ்சகாலத்தில் மக்கள் பட்ட துயரங்களைப் பற்றிய வாய்மொழிப்பாடல்கள். கும்மி என்பது பெண்கள் கைகொட்டியபடி ஆடும் ஒருவகை ஆட்டம். அந்த ஆட்டத்திற்குரிய பாடல் கும்மிப்பாடல். அப்பாடலின் யாப்புமுறையை கொண்டு பஞ்சகாலத்தை விவரிப்பவை பஞ்சக்கும்மிகள்.

பஞ்சங்கள்

இந்தியாவில் மழைபொய்த்துப் போய் பஞ்சங்கள் வருவது வழக்கம் என பண்டைய இலக்கியங்கள் காட்டுகின்றன. இறையனார் களவியல் போன்ற நூல்களில் பஞ்சங்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. பொயு 1570ல் தமிழகத்தில் நெல்லை பகுதிகளில் உருவான பஞ்சம் பற்றி ஹெர்னிக்ஸ் என்னும் ஏசுசபை பாதிரியாரின் கடிதங்களில் பதிவுகள் உள்ளன.

பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவை ஆட்சிசெய்ய தொடங்கியபின் பஞ்சங்கள் பெருகின. 1783 ,1792, 1907, 1823, 1854 ஆம் ஆண்டுகளில் பஞ்சங்கள் வந்தமை பற்றிய பதிவுகள் உள்ளன. மழை பொய்த்தல் முதன்மைக் காரணம் எனினும் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் உணவுப்போக்குவரத்துக்கு போடப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள், உணவுத்தானியங்களுக்கு பதிலாக அவுரி முதலிய வணிகப்பொருட்களை பயிரிடும்படி விவசாயிகள் கட்டாயப்படுத்தப்பட்டது, உணவுப்பொருட்கள் ஏற்றுமதியானது ஆகியவை பஞ்சங்களுக்குக் காரணமாக அமைந்தன.

தமிழ் பஞ்சாங்கக் கணக்கின்படி 1876 முதல் 1877 வரையிலான தமிழ் ஆண்டு தாதுவருடம் எனப்பட்டது. அப்போது உருவான பெரும் பஞ்சம் தாதுவருடப்பஞ்சம் எனப்பட்டது. இப்பஞ்சம் 1890 வரை நீடித்தது. தமிழகத்தில் ஏறத்தாழ ஐம்பது லட்சம்பேர் பட்டினியால் மடிந்திருக்கலாம் என கணக்குகள் சொல்கின்றன. இப்பஞ்சகாலத்தில்கூட 1877 ஆம் ஆண்டு 79 லட்சம் பவுன் மதிப்புள்ள உணவுத்தானியங்கள் இந்தியாவில் இருந்து பிரிட்டிஷ் ஆட்சியால் ஏற்றுமதி செய்யப்பட்டன. 1901 ஆம் ஆண்டு 93 லட்சம் பவுன் மதிப்புள்ள உணவுத்தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இது பஞ்சத்தை தீவிரமாக்கியது.

இலக்கியப் பதிவுகள்

இத்தகைய பெரிய பஞ்சத்தைப்பற்றிய இலக்கியப் பதிவுகள் மிகக்குறைவாகவே உள்ளன. இக்காலகட்டத்தில் மரபான தமிழிலக்கியங்களை எழுதும் புலவர்கள் பேணுவாரில்லாமல் அழிந்தனர்.எஞ்சியவர்களும் பக்திப்பாடல்கள் மற்றும் செல்வந்தர்களையும் அரசர்களையும் துதித்து செல்வம் பெற்று வாழ்வதற்குரிய பாடல்களை மட்டுமே எழுதினர்.

சரவணையா என்பவர் எழுதிய மேழி விளக்கம் என்னும் நூலில் கொங்குநாட்டில் ஏற்பட்ட பஞ்சம் பற்றிய பதிவுகள் உள்ளன. தச்சநல்லூர் வள்ளியப்ப பிள்ளை மகன் அழகிய சொக்கநாத பிள்ளை எழுதிய திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி 1927 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது இந்நூல். சிவகங்கை சமஸ்தான வித்வான் பிரமனூர் ,மிராசு கணக்கு வில்லியப்ப பிள்ளை இயற்றிய பஞ்சலட்சணத் திருமுக விலாசம். கலிவெண்பா யாப்பில் 1341 பாடல்கள் கொண்ட பெரிய நூல் இது.

மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிரிட்டிஷ் அரசின்கீழ் நீதிபதியாக பணியாற்றியவர். ஆயினும் பஞ்சம் பற்றிய சில பாடல்களை எழுதியிருக்கிறார். இவை அவருடைய பிரதாப முதலியார் சரித்திரம் நாவலில் இடம்பெற்றுள்ளன. பஞ்சத்திலும் வரிவசூல் கொடுமையாக நடைபெற்றதையும் அவர் கண்டித்துப் பாடியிருக்கிறார்

பஞ்சக்கும்மிகள்

இப்பஞ்சங்களைப் பற்றி நாட்டுப்புறக் கவிஞர்களின் வாய்மொழிப்பாடல்களில் நிறையப் பதிவுகள் உள்ளன.அவையே பஞ்சக்கும்மிகள் எனப்படுகின்றன.

  • அரசர்குளம் சாமிநாதன் இயற்றப்பட்ட தாதுவருஷ பஞ்சக்கும்மி 205 கண்ணிகள் கொண்ட இப்பாடல் க.வெள்ளைவாரணார் அவர்களால் கையெழுத்தில் பதிவுசெய்யப்பட்டது
  • பர்வத சஞ்சீவி என்னும் மலைமருத்தன் இயற்றிய பஞ்சக்கும்மி தஞ்சை சரஸ்வதி மகால் பதிப்பகத்தால் 1985 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. கரிப்புக்கும்மி என்று தலைப்பு அளிக்கப்பட்டது. வித்வான் ந.சீனிவாசம்ன் பதிப்பாசிரியர்
  • குருசாமி என்பவர் இயற்றிய தாதுவருசப் பஞ்சக்கும்மி அத்தியண்ணன் மகன் பொய்ங்காளி என்பவரின் ஆதரவால் உருவானது.
  • வெண்ணந்தூர் அருணாச்சலம் எழுதிய கரவருட பஞ்சக்கும்மி
  • வெண்ணந்தூர் அருணாச்சலம் எழுதிய பரிதாபி வருட பஞ்சக்கும்மி.

மொழிநடை

காட்டில் வதங்கிப் பழுத்திருக்கும் மலைக்

கற்றாழை வெட்டி குருத்தெடுத்து

கடவாய் பிதிரிடிரிடியாகவே கொடிதாகிய

காலங்கழிக்கவென்றேதந்தளைந்து

வேண்டுமட்டும் அதை தின்று உடம்பெல்லாம்

வீங்கியே பாண்டுபோலவே வெளுத்து

விதியோ கெடுமதியோ சனியோ சதியோ பல முதியோர் உயிர்

விட்டவரோ பல லட்சம் கோடியடி

[அரசர்குளம் சாமிநாதன் தாதுவருச பஞ்சக்கும்மி]

உசாத்துணை

பஞ்சக்கும்மிகள் தொகுப்பாசிரியர் புலவர் செ.இராசு