under review

நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா

From Tamil Wiki
Revision as of 23:03, 1 August 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added; Link Created: Proof Checked.)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கலிப்பாவின் அடிப்படையான உறுப்புகளாகிய தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் ஆகிய நான்கு உறுப்புகளை மட்டும் கொண்டு அமையும் கலிப்பா, நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா எனப்படும்.

நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா இலக்கணம்

“தரவுஒன் றாகித் தாழிசை மூன்றாய்த்

தனிச்சொல் இடைநடந்து சுரிதகம் தழுவி

நிகழ்வது நேரிசை ஒத்தா ழிசை”

- என்கிறது இலக்கண விளக்கம் நூல்.

நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவில், முதலில் ஒரு தரவு வரும். தரவு குறைந்த அளவு மூன்றடி பெறும். அதிக அளவுக்கு வரம்பு இல்லை. எத்தனை அடியும் வரலாம்.

தரவைத் தொடர்ந்து மூன்று தாழிசைகள் ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வரும். தாழிசையின் அடிச்சிறுமை இரண்டடி; அதிக அளவு நான்கடி. தரவை விடத் தாழிசை ஓரடியாவது குறைந்துவர வேண்டும். தரவு மூன்றடி வந்தால் தாழிசை இரண்டடி; தரவு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட அடிகள் வந்தால் தாழிசை நான்கடிக்கு மிகாமல் வரவேண்டும்.

தாழிசைகளைத் தொடர்ந்து ஒரு தனிச்சொல் வரும்.

தனிச் சொல்லுக்குப் பின் சுரிதகம் வரும். அது ஆசிரியச் சுரிதகமாகவோ வெள்ளைச் சுரிதகமாகவோ (வெண்பா) அமையலாம்.

உதாரணப் பாடல்:

(தரவு)

வாணெடுங்கண் பனிகூர வண்ணம்வே றாய்த்திரிந்து

தோணெடுந்தன் தகைதுறந்து துன்பங்கூர் பசப்பினவாய்ப்

பூணொடுங்கு முலைகண்டும் பொருட்பிரிதல் வலிப்பவோ?


(தாழிசை)

சூருடைய நெடுங்கடங்கள் சொலற்கரிய என்பவால்

பீருடைய நலந்தொலையப் பிரிவாரோ பெரியவரே?      (1)


சேணுடைய கடுங்கடங்கள் செலற்கரிய என்பவால்

நாணுடைய நலந்தொலைய நடப்பாரோ நலமிலரே?     (2)


சிலம்படைந்த வெங்கானம் செலற்கரிய என்பவால்

புலம்படைந்த நலந்தொலையப் போவாரோ பொருளிலரே?   (3)


(தனிச்சொல்)

எனவாங்கு


(சுரிதகம்)

அருளெனும் இலராய்ப் பொருள்வயிற் பிரிவோர்

பன்னெடுங் காலம் வாழியர்

பொன்னெடுந் தேரொடு தானையிற் பொலிந்தே!

-மேற்கண்ட பாடல் தரவு, மூன்று தாழிசைகள், தனிச்சொல், ஆசிரியச் சுரிதகத்தால் அமைந்த நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.