under review

நீர்வழிப்படூஉம்

From Tamil Wiki
Revision as of 22:54, 20 December 2023 by Madhusaml (talk | contribs) (Finalized)
நீர்வழிப்படூம்

நீர்வழிப்படூஉம் ( 2020) தேவிபாரதி எழுதிய நாவல். தமிழில் நாவிதர்களின் வாழ்க்கையின் பின்னணியில் எழுதப்பட்ட முதல் நாவல். ஆனால் சமூகச்சித்தரிப்பாக இல்லாமல் அச்சூழலில் தனிமனிதர்கள் கொள்ளும் அறநெருக்கடிகளை விசாரிக்கிறது.

எழுத்துவெளியீடு

தேவிபாரதி இந்நாவலை 2020-ல் எழுதினார். முதல் பதிப்பை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டது.

கதைச்சுருக்கம்

குடிநாசுவர்கள் எனப்படும் நாவிதர்களின் வாழ்க்கைப் பின்னணியில் அமைந்துள்ள நீர்வழிப்படூம் என்னும் நாவலில் காரு என்பவரின் இறப்பினூடாக அவருடைய சோக வாழ்க்கையின் சித்திரம் சொல்லப்படுகிறது. செட்டி என்பவருடன் அவர் மனைவி சென்றுவிடுகிறார். அவள் அவனால் கைவிடப்பட்டு திரும்பி வந்தபோது அவர் மீண்டும் ஏற்றுக்கொண்டாலும் உளச்சிதைவுக்கு ஆளாகிறார். அவருடைய இறப்பு வழியாக அந்த ஊர் அவருடைய வாழ்க்கைக்கு ஆற்றும் எதிர்வினைகள் விவரிக்கப்படுகின்றன. காருவை கொத்திப்பிடுங்கிய அதே சமூகம் அவர் மனைவியின் துயரைக் கண்டு அணைத்துக்கொள்கிறது. ஊரும் உறவும் அம்மனைவியுடன் ஒரு தாயம் விளையாட்டில் அமர்கையில் நாவல் நிறைவடைகிறது.

கிராமியச் சூழலில் எழுதப்பட்ட யதார்த்தவாத நாவல் இது எனினும் வட்டாரவழக்கை நம்பாமல் நவீனத்துவ நாவல்களுக்குரிய செறிவான சுருக்கமான மொழியில் எழுதப்பட்டுள்ளது.

இலக்கிய மதிப்பீடு

"புறச்சூழலின் காரணமாக தன்னுடைய அடிப்படைக் கட்டமைப்பை ஒட்டுமொத்த சமூகமும் மாற்றிக்கொண்டிருக்கும் வேளையில் அதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாத மனிதர்களுக்கு நிகழக்கூடியதைச் சொல்லும் படைப்பாக இந்நூலை எடுத்துக் கொள்ளலாம்.பழைய நிலவுடைமைச் சமூகத்திலிருந்து நவீன சமூகமாக இன்றிருக்கும் நிலைக்கு மாற ஆரம்பித்த சென்ற காலகட்டத்தின் கதை இந்நாவல்" என அந்தியூர் மணி இந்நாவல் பற்றி குறிப்பிடுகிறார். "உறவுகளின் அன்பு பாசம் கருணை ஆதியாய உணர்வுகளின் சிதைவுறும் கணங்களைக் கொண்டதாக நாவலின் முற்பகுதி அமைய, சிற்றூர்களின் நாவித சமூகத்தினதும் பண்ணயக்கார சமூகத்தினதும் வாழ்முறையை இடையிலுள்ள பகுதி விளக்குகிறது." என்று தேவகாந்தன் மதிப்பிடுகிறார்.

உசாத்துணை


✅Finalised Page