நா. வானமாமலை

From Tamil Wiki
Revision as of 00:27, 2 April 2022 by Navingssv (talk | contribs) (Created page with "நா. வானமாமலை(07 டிசம்பர் 1917 - 02 பிப்ரவரி 1980) தமிழின் முன்னோடி நாட்டாற்றியல் ஆராய்வாளர், தமிழறிஞர், வரலாற்றாய்வாளர். நா. வானமாமலை தமிழில் வழக்கில் இருந்த நாட்டார் பாடல்கள், கதைகள், பழ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

நா. வானமாமலை(07 டிசம்பர் 1917 - 02 பிப்ரவரி 1980) தமிழின் முன்னோடி நாட்டாற்றியல் ஆராய்வாளர், தமிழறிஞர், வரலாற்றாய்வாளர். நா. வானமாமலை தமிழில் வழக்கில் இருந்த நாட்டார் பாடல்கள், கதைகள், பழமொழிகள், வழக்கங்களை சேகர்த்துப் பதிப்பித்த முன்னோடி ஆய்வாளர்களுள் ஒருவர்.

பிறப்பு, கல்வி

நா. வானமாமலை 7-12-1917 தேதி திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரில் நாராயணன் தாதர், திருவேங்கடத்தம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் சகோதரி வேங்கடம், சகோதிரர் ஆழ்வான். ரஷ்ய புரட்சி நடந்த ஆண்டில் பிறந்ததால் பொது உடைமை இயக்கத்திற்கும் தனக்கும் நெருங்கிய தொடர்புண்டு என நா. வானமாமலை பல சந்தர்ப்பங்களில் சொல்கிறார்.

வானமாமலையின் தந்தை நாங்குனேரி கிராம முன்சீபாக பணியாற்றினார். நாங்குனேரியில் மூத்தவர்களை தாதர் என அழைக்கும் வழக்கம் இருந்ததால், வானமாமலையின் தந்தையை எல்லோரும் முன்சீப் தாதர் என்றழைத்தனர். வானமாமலை பிறந்த வீடு சாத்தாவர் தெரு தென்பகுதியில் ஒரு பெரிய மட்டப்பா வீடாகும்.

பேராசிரியர் வானமாமலை தன் இளமைக் கால கல்வியை நான்குனேரியிலும், ஏர்வாடியிலும் பயின்றார். அவர் தன் உயர்நிலைப் படிப்பை நாங்குனேரி ஜில்லா போர்டு உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். நெருக்கடியான பொருளாதார குடும்பசூழலிலும் அவர் திருநெல்வேலி சென்று இண்டர் மீடியட்டும், மதுரை அமெரிக்கன் கலைக் கல்லூரியில் பி.ஏ. இராசயனப் படிப்பையும் முடித்தார். அதன் பின் சென்னை சைதாப்பேட்டை அரசினர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து எல்.டி. என்ற பட்டப் படிப்பையும் முடித்தார். இவை அனைத்தும் அவருடைய இருபது வயதிற்குள்ளாகவே முடியபெற்றன.

தனி வாழ்க்கை

வானமாமலை பள்ளி பிராயத்திலேயே அவர் தன் சொந்த அத்தை மகளான சீதையம்மாள் என்பவரைத் திருமணம் செய்துக் கொண்டார். சீதையம்மாள் நீண்ட நாட்கள் உயிர் வாழவில்லை. இந்த காலகட்டத்தில் வானமாமலை வேலைத் தேடும் பணியில் ஈடுப்பட்டார். 1942 ஆம் ஆண்டு மதுராந்தகத்தில் இவருக்கு தற்காலிக ஆசிரியர் பதவி கிடைத்தது. அதன்பின் ஜில்லா போர்ட் உயர்நிலைப் பள்ளியில் நிரந்தர ஆசிரியர் பதவி கிடைத்தது. நான்குனேரி, கோவில்பட்டி, தென்காசி ஆகிய இடங்களில் 1948 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.

தென்காசியில் பணிபுரியும் போது அவரது துணைவியான சீதையம்மாள் மரணமடைந்தார். இவர்கள் இருவருக்கும் குழந்தைகள் இல்லை. அதன்பின் 1948 ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த பத்மாவதி என்பவரை மணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவருக்கும் கிருஷ்ணமூர்த்தி, கலாவதி, ராமமூர்த்தி, அருணா அம்மணி, நாராயணமூர்த்தி என ஐந்து குழந்தைகள்.

வானமாமலையின் பொது வாழ்க்கைக்கு இடைஞ்சலாக ஆசிரியர் பணி இருந்த காரணத்தினால் அவர் தன் ஆசிரியர் பணியை 1947 ஆம் ஆண்டு இராஜனாமா செய்தார். அதன் மூலம் வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க எஸ்.எஸ்.எல்.சி, இண்டர் மீடியட் போன்ற வகுப்புகளில் தவறிய மாணவர்களுக்குத் தனித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கவும், ஒரு சுய வேலைக்காகவும் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தெற்கு ரத வீதியில் பயிற்சி நிலையம் ஒன்றைத் தொடங்கினார். இவருக்குத் துணையாக உடன் கே. சீனிவாசன் இருந்தார். இந்நிறுவனம் சற்று பெரிதானவுடன் வண்ணார்பேட்டையில் ஒரு பெரிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. இது “ஸ்டூடன்ஸ் டூடோரியல் இன்ஸ்டிடியூட்” என்ற பெயரில் இயங்கியது. இந்நிறுவனம் பெண்களுக்கென்று 258, திருச்செந்தூர் ரோடு பாளையங்கோட்டையில் ஒரு கிளை துவங்கப்பட்டது. பின்னர் நாகர்கோவில், தக்கலை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் இதற்குக் கிளைகள் இடம்பெற்றன.

வானமாமலை பொது பணியில் ஈடுபடுவதற்கும், பின்னாளில் ”நெல்லை ஆய்வுக்குழு” தொடங்குவதற்கும் “ஆராய்ச்சி காலாண்டிதழ்” கொண்டுவருவதற்கு இந்நிறுவனம் பொருளாதார பிண்புலமாக அமைந்தது.

பொது வாழ்க்கை

அரசியல்

நா. வானமாமலை கல்லூரி படிப்பிற்காக 1936 ஆம் ஆண்டு மதுரை சென்ற போது அவருக்கு தேசிய விடுதலை போராட்டத்தில் ஆழ்ந்த ஈடுபாடு ஏற்பட்டது. தேச அளவிலும், தமிழகத்திலும் கொந்தளிப்பான இக்காலகட்டத்தில் தமிழகத்தில் தேசிய இயக்கம் தவிர பொது உடைமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் தீவிரமாக இயங்கத் தொடங்கிய காலகட்டம்.

வானமாமலை தேசிய இயக்கத்தில் ஈடுபட்டு பின்னர் அதன் இடதுசாரிக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். அக்காலத்தில் பொது உடைமை இயக்கம் தடை செய்யப்பட்டிருந்ததால் அது காங்கிரஸ் சோசியலிஸ்ட் கட்சி என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருந்தது. இக்கட்சி சார்பாக பல இளைஞர் மன்றம் இயங்கி வந்தன வானமாமலை தன்னை இந்த இளைஞர் மன்றத்தோடு இணைத்துக் கொண்டார். இச்சங்கங்கள் வானமாமலையின் இளமைக்கால சமூகப் பார்வையை விரிவுபடுத்தியது.

1947 ஆம் ஆண்டு விவசாய சங்கம் சார்பில் நாங்குனேரியில் நடந்த கூட்டத்தை பேராசியர் ஆர். நல்லகண்ணு அவர்களுடன் சேர்ந்து முன்னால் நின்று நடத்தினார்.

பதிப்பகம்

வானமாமலை 1947 ஆம் ஆண்டு நாங்குனேரி வந்ததும் அங்கு புத்தகம் கிடைக்க சிரமம் இருப்பதை உணர்ந்து ஒரு பதிப்பகம் தொடங்க விரும்பினார். அவர் சங்க உறுப்பினர்களுடன் சேர்ந்து சிறிது பணம் திரட்டி திருநெல்வேலியில் அண்ணாச்சி என்றழைக்கப்பட்ட சிந்துபூந்துறை சோ. சண்முகம் பிள்ளை அவர்களிடமும், சென்னையில் ஜனசக்தி பிரசுலாயத்திடமும் நூல்களை வாங்கி விற்கும் திட்டத்தைச் செயல்படுத்தினார். அந்த அமைப்பிற்கு ”பீப்பிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ்“ எனப் பெயரிட்டார். இது பின்னர் பெயர் மாற்றம் பெற்று நெல்லை புத்தக நிலையம் என்று இயங்கி வந்தது.

இதே காலகட்டத்தில் (1947) வானமாமலை அண்ணாச்சி சோ. சண்முகம் பிள்ளை, தொ.மு.சி. ரகுநாதன், தி.க. சிவசங்கரன் பிள்ளை ஆகியோருடன் இணைந்து “நெல்லை எழுத்தாளர் சங்கம்” என்ற அமைப்பினை உருவாக்கினார். இச்சங்கத்தின் தாக்கத்தாலும், வானமாமலையின் வழிகாட்டுதலாலும் பின்னாளில் தி.க.சி தீவிர விமர்சகனார் எனச் சொல்லப்படுகிறது.

சிறை வாழ்க்கை

1948 ஆம் ஆண்டு நடைபெற்ற சதிவழக்கில் பேராசிரியர். வானமாமலை கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இந்த சதி வழக்கு பொது உடைமைவாதிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளில் ஒன்று. சிறை சென்று மீண்ட வானமாமலை கட்சியை நெல்லையில் ஒழுங்குபடுத்துவதில் மிகுந்த ஆர்வம் கொண்டார். நெருக்கடியான நேரங்களில் அதனை திறம்பட செய்து வெற்றியும் கண்டார். 1954 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தத்துவம், கலை, இலக்கியத் துறைகளில் தன் ஆர்வத்தை திருப்பினார்.