நா. பார்த்தசாரதி

From Tamil Wiki
Revision as of 15:27, 14 February 2022 by Thangapandiyan (talk | contribs)
நா.பார்த்தசாரதி (1932 - 1987)

நா.பார்த்தசாரதி (டிசம்பர் 18, 1932 - டிசம்பர் 13, 1987) எழுத்தாளர், இதழாசிரியர், பதிப்பாசிரியர், பத்திரிகையாளர். சிறுகதை, சமூக நாவல், சரித்திர நாவல், கவிதை, நாடகம், கட்டுரை, கேள்வி - பதில், பயண இலக்கியம், விமர்சனங்கள் எழுதியவர். ‘தீபம்’ நா.பார்த்தசாரதி என அழைக்கப்படுபவர்.  

பிறப்பு, கல்வி

நா. பார்த்தசாரதி தமிழ்நாடு, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நதிக்குடி கிராமத்தில் டிசம்பர் 18, 1932ல் பிறந்தார். பள்ளிப் படிப்புக்குப் பிறகு மதுரை தமிழ்ச் சங்கத்தின் பாண்டித்துரை தேவர் பரிசுடன் ‘பண்டிதர் பட்டம்’ பெற்றார். சென்னை பல்கலைக் கழகத்தில் ‘வித்வான்’ பட்டம் பெற்றார். 45 வயதுக்குப் பிறகு, பச்சையப்பன் கல்லூரியில் மாலை நேர வகுப்பில் (1977-1979) படித்து தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம் (M.A. தமிழ்) பெற்றார். சென்னை பல்கலைக் கழகத்தில் தி. முத்துகண்ணப்பரை வழிகாட்டியாகக்கொண்டு ’பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்’ என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்து 30.07.1987ல் ஆய்வேட்டை சமர்பித்தார். ஆனால் முனைவர் பட்டத்தை வாங்குவதற்குள் மறைந்துவிட்டார். ஆங்கிலம், சமஸ்கிருதம், ஹிந்தி ஆகிய மொழிகளைக் கற்றவர்.

தனிவாழ்க்கை

நா. பார்த்தசாரதியின் மனைவி சுந்தரவள்ளி. ஒரு மகன் நாராயணன். நான்கு மகள்கள் பூரணி, பாரதி, மீரா, நித்யா. சிறிது காலம் பள்ளி ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய நா. பார்த்தசாரதி 1959 முதல் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

அரசியல் பணி

காமராஜர் தலைமையிலான ’ஸ்தாபன காங்கிரஸ்’ கட்சியில் நா. பார்த்தசாரதி உறுப்பினராக இருந்தார். காமராஜரின் மறைவுக்குப் பின் கட்சி சார்பற்றவராக மாறினார். 1970-71 ஆண்டுகளில் பாரத பாதுகாப்பு இயக்க மேடைகளிலும் 1978-79 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ். இயக்க மேடைகளிலும் தேசியத்தின் தேவைகள் குறித்து உரையாற்றியிருக்கிறார்.

Image16.png

இதழியல் பணி

கல்கி ஆசிரியர் சதாசிவத்தின் அழைப்பின் பேரில் நா. பார்த்தசாரதி கல்கியின் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். பின்னர் 04.10.1979 முதல் சில ஆண்டுகள் தினமணிக் கதிர் வார இதழுக்கும் கலைக்கதிர் இதழுக்கும் ஆசிரியராக இருந்தார். ஏப்ரல் 1965 ல் கல்கி இதழில் இருந்து விலகிய நா. பார்த்தசாரதி ’தீபம்’ என்ற மாத இதழை ஆரம்பித்தார். ஆசிரியராகவும் நிர்வாகியாகவும் இருந்து 23 ஆண்டுகள், 1987 வரை அதை நடத்தினார். இதன் காரணமாக ‘தீபம்’ நா.பார்த்தசாரதி என்று குறிப்பிடப்பட்டார். தீரன், அரவிந்தன், பொன்முடி, வளவன், மணிவண்ணன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதிவந்தார்.  

பதவி, பயணம்

சாகித்திய அகாடமியின் தமிழ் ஆலோசனைக் குழுவிற்குத் தலைவராகவும் அமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். தேசிய திரைப்பட விழா நடுவர், திரைப்பட நிதி நிறுவன உறுப்பினர், தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்க உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்தவர். ரஷ்யா, போலந்து, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து. ரோம், எகிப்து, குவைத் போன்ற பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்து பயணக் கட்டுரைகள் எழுதினார். அப்பயணக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு இரண்டு புத்தகங்களாக வந்துள்ளன.

Image17.png

இலக்கியப்பணி

நா. பார்த்தசாரதியின் முதல் நாவல் குறிஞ்சி மலர், கல்கியில் இருந்தபோது எழுதியது. சிறுகதைகள், குறுநாவல்கள் அடங்கிய தொகுதிகள் உட்பட மொத்தம் 93 நூல்களை எழுதியுள்ளார். ‘பொய் முகங்கள்’, ‘முள்வேலிகள்’, ‘சுதந்திரக் கனவுகள்’, ‘குறிஞ்சி மலர்’, ‘பொன்விலங்கு’, ‘துளசி மாடம்’, ‘மணிபல்லவம்’, ‘நித்திலவல்லி’, ‘பாண்டிமாதேவி’, ‘ராணி மங்கம்மாள்’ உள்ளிட்ட பல நாவல்கள் குறிப்பிடத்தக்கவை. நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு ஆகியவை தொலைக்காட்சித் தொடர்களாக வெளிவந்தன. ‘குறிஞ்சிமலர்’ நாவலில் வரும் அரவிந்தன், பூரணி ஆகிய கதாபாத்திரப் பெயர்கள் அக்காலத்தில் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றவை. "சாயங்கால மேகங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நாவலாக முதல் பரிசு பெற்றது. நா.பார்த்தசாரதியின் 51 நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

Image18.png

இலக்கிய இடம்

எளிய, சீரான நடைகொண்ட நா.பார்த்தசாரதியின் படைப்புகள் சுயமுன்னேற்றச் சிந்தனைகளும் சமூக சீர்திருத்தக் கருத்துக்களும் கொண்டவை. பெரும்பாலான  கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளன. முக்கிய கதாபாத்திரம் லட்சியவாதம் சார்ந்து படைக்கப்பட்டிருக்கும். நா. பார்த்தசாரதி உடனான அனுபவங்களை சுந்தர ராமசாமி ’நா. பார்த்தசாரதி நினைவோடை’ என்னும் நூலாக எழுதியுள்ளார். அதிக மக்களைக் கவர்ந்து, பிடித்தமானவற்றை பிடித்தமான முறையில் சொல்லி, வாசிக்கச்செய்து, மக்களிடையே பெரும் புகழ் அடைந்திருந்தாலும் நா. பார்த்தசாரதியை வணிக-கேளிக்கை எழுத்தாளராகவே ஜெயமோகன் குறிப்பிடுகிறார் [1].

விருதுகள்

  1. சாகித்ய அகாதமி பரிசு (1971) -  சமுதாய வீதி நாவல்.
  2. ராஜா சர் அண்ணாமலை இலக்கியப் பரிசு  - துளசி மாடம் நாவல் (ஜூன் 1978 முதல் 1979 ஜனவரி வரை ‘கல்கி’ வார இதழில் வெளியான  தொடர்)
  3. தமிழ்நாடு அரசின் பரிசு (சாயங்கால மேகங்கள் நாவல்)

மறைவு

நா. பார்த்தசாரதி டிசம்பர் 13, 1987ல் தனது 55வது வயதில் மாரடைப்பால் காலமானார். அப்போது தனது சுயசரிதையின் இரண்டாம் அத்தியாயத்தை அமுதசுரபி மாத இதழுக்காக எழுதிக் கொண்டிருந்தார்.

படைப்புகள்

Image13.png

சமூக நாவல்கள்

  1. பிறந்த மண்  
  2. கற்சுவர்கள்
  3. நெற்றிக் கண்
  4. நீல நயனங்கள்
  5. நெஞ்சக் கனல்
  6. துளசி மாடம்
  7. பொய் முகங்கள்
  8. பொன்விலங்கு
  9. ஆத்மாவின் ராகங்கள்
  10. நிசப்த சங்கீதம்
  11. குறிஞ்சி மலர்
  12. சமுதாய வீதி
  13. பட்டுப் பூச்சி
  14. சாயங்கால மேகங்கள்
  15. சத்திய வெள்ளம்
  16. சுந்தரக் கனவுகள்
  17. கோபுர தீபம்
  18. மூலக்கனல்
  19. அனிச்சமலர்

குறுநாவல்கள்

  1. மலைச்சிகரம்
  2. டிப்ளமேட்
  3. என்றோ ஒருநாள்
  4. மேகம் மூடிய மலைகளுக்கு அப்பால்
  5. மனக்கண்
  6. பூக்களை யாரும் மிதிக்கக் கூடாது
  7. வரவேற்பு
  8. இலையுதிர் காலத்து இரவுகள்
  9. இன்று புதிதாய்ப் பிறந்தோம்
  10. சில நியாயங்களைப் பற்றிய கதை
  11. நினைவின் நிழல்கள்
  12. தூங்கும் நினைவுகள்
  13. செய்திகள்
  14. பிராயணம்
  15. ஒரு வழிகாட்டிக்கு
  16. கால சமுத்திரம் தன்வழி தெரியவில்லை
  17. மகாத்மாவைத் தேடி
  18. பூப்போல ஒரு பெண்
  19. நாற்பது கோடி ஏழைகள்
  20. நீர்க்கோலம்

சிறு நாவல்கள்

  1. புதுமுகம்
  2. முள்வேலிகள்
  3. சுலட்சணா காதலிக்கிறாள்
  4. சுலபா
  5. பார்கவி லாபம் தருகிறாள்
  6. அநுக்கிரகா
  7. உணர்ச்சிகளின் ஊர்வலம்
  8. பூப்போல மனசு
  9. வெள்ளம் வடிந்தபின்

சரித்திரச் சிறுகதைகள்

  1. ராஜ கோபுரம்
  2. தகடூர் யாத்திரை

சரித்திர நாவல்கள்

  1. பாண்டிமாதேவி
  2. மணிபல்லவம்
  3. கபாடபுரம்
  4. வஞ்சிமாநகரம்
  5. நித்திலவல்லி    
  6. ராணி மங்கம்மாள்

சங்க இலக்கியச் சிறுகதைகள்

  1. புறநானூற்றுச் சிறுகதைகள்
  2. தமிழ் இலக்கியக் கதைகள்

காவிய இலக்கியப் படைப்புகள்

  1. அறத்தின் குரல் (மகாபாரத இதிகாசத்தின் உரைநடை வடிவம்)
  2. வெற்றி முழக்கம் (பெருங்கதை என்ற தமிழ்க் காப்பியத்தின் உரை நடை வடிவம்)
  3. கண்ணன் கதைகள்

சிறுகதைத் தொகுதிகள்

  1. நெருப்புக் கனிகள்
  2. கொத்தடிமைகள்
  3. மங்கியதோர் நிலவினிலே
  4. வேனில் மலர்கள்
  5. ஒரு கவியின் உள் உலகங்கள்
  6. பிரதிபிம்பம்
  7. தலைமுறை இடைவெளி      
  8. காலத்துக்கு வணக்கம்
  9. மூவரை வென்றான்
  10. புதிய பாலம்
  11. கங்கை இன்னும் வற்றி விடவில்லை
  12. வலம்புரிச் சங்கு
  13. இது பொதுவழி அல்ல
  14. தேவதைகளும் சொற்களும்
  15. ஒப்புரவு

கவிதை

  1. மணிவண்ணன் கவிதைகள்
  2. பூமியின் புன்னகை

நாடகம்

  1. புத்த ஞாயிறு
  2. கோதையின் காதல்
  3. வழித்துணை

கட்டுரைத் தொகுதிகள்

  1. சொல்லின் செல்வம்    
  2. மொழியின் வழியே
  3. கவிதைக் கலை  
  4. புதிய பார்வை
  5. கடற்கரை நினைவுகள்
  6. சிந்தனை மேடை
  7. சிந்தனை வளம்  
  8. திறனாய்வுச் செல்வம்
  9. கலித்தொகை பரி பாடற் காட்சிகள்

மொழிபெயர்ப்பு

  1. சரத்சந்திரர்
  2. வீரேசலிங்கம்
  3. நானாலால்

பயணக் கட்டுரைகள்

  1. புது உலகம் கண்டேன்
  2. ஏழு நாடுகளில் எட்டு வாரங்கள்

ஆய்வுக் கட்டுரை

  1. பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்

உசாத்துணை