நா.காமராசன்

From Tamil Wiki
Revision as of 00:33, 10 March 2022 by Jeyamohan (talk | contribs)

நா. காமராசன் (1942 - 2017) தமிழ்ப் புதுக்கவிஞர், திரைப்பாடலாசிரியர். வானம்பாடி கவிதை இயக்கத்தின் கவிஞர்களில் ஒருவர். மரபுக்கவிதையில் இருந்து நவீனக்கவிதைக்கு வந்தார்.

பிறப்பு, கல்வி

1942-ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் போ. மீனாட்சிபுரத்தில் நாச்சிமுத்து, இலட்சுமி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். போடிநாயக்கனூரி தொடக்கக் கல்வி கற்றபின் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழிலக்கியம் பயின்றார்.

தனிவாழ்க்கை

காமராசன் தேனி மாவட்டம், உ. அம்மாபட்டியில் வசிக்கும் தா. பொம்மையன் மகள் லோகமணியை மணந்தார். தைப்பாவை என்ற மகளும், தீலீபன் என்ற மகனும் உள்ளனர்.முதுகலைப் பட்டம் பெற்ற இவர் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்புத் துறையில் அதிகாரியாகவும் பணியாற்றியவர். எம்.ஜி.ராமச்சந்திரன் முதல்வராக இருந்தபோது தமிழ்நாடு கதர் வாரிய துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.1991-இல் தமிழ் நாட்டு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினராக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார்

இதழியல்

காமராசன் சோதனை என்னும் இதழை நடத்தியிருக்கிறார்

அரசியல்

காமராசன் 1964ல் தியாகராசர் கல்லூரியில் பயில்கையில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார். திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினராக இருந்த காமராசன் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து 1990-இல் மாநில மாணவர் அணி மற்றும் மாநில இலக்கிய அணி செயலாளர் உட்பட வெவ்வேறு கட்சிப்பதவிகளை வகித்தார்.

திரைவாழ்க்கை

எம்.ஜி.ராமச்சந்திரனால் 1975ல் பல்லாண்டு வாழ்க என்னும் திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டார். 34 படங்களுக்கு பாடல்கள் எழுதியிருக்கிறார். பஞ்சவர்ணம் என்னும் படத்துக்கு வசனம் எழுதினார்.

மறைவு

நா. காமராசன் 24 மே 2017 ல் சென்னையில் காலமானார்.

விருதுகள்

  1. கலைமாமணி விருது
  2. சிறந்த பாடலாசிரியர் விருது
  3. பாரதிதாசன் விருது

நூல்கள்

கவிதைகள்
  1. கறுப்புமலர்கள்
  2. சூரியகாந்தி
  3. தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும்
  4. சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்
  5. மலையும் ஜீவநதிகளும்
  6. கவியரசு நா. காமராசன் கவிதைகள்
  7. மகாகாவியம்
  8. கிறுக்கல்
  9. சுதந்திர தினத்தில் ஒரு கைதியின் டைரி
  10. ஆப்பிள் கனவு
  11. அந்த வேப்பமரங்கள்
  12. பெரியார் காவியம்
  13. பட்டத்துயானை
  14. காட்டுக்குறத்தி
  15. சிகரத்தில் உறங்கும் நதிகள்
  16. பொம்மைப்பாடகி
  17. ஞானத்தேர்
கதைகள்
  1. நரகத்திலே சில தேவதைகள்
திறனாய்வு
  1. நாவல்பழம்