நாரண துரைக்கண்ணன்

From Tamil Wiki
Revision as of 07:31, 1 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "நாரண துரைக்கண்ணன் (1906- ) தமிழில் கதைகளும் நாவல்களும் எழுதிய எழுத்தாளர். விடுதலைப்போராட்ட வீரர். தொடக்ககால இதழாளர்களில் ஒருவர், எழுத்தாளர் சங்கச் செயல்பாட்டாளர். சுயமரியாதை இயக...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

நாரண துரைக்கண்ணன் (1906- ) தமிழில் கதைகளும் நாவல்களும் எழுதிய எழுத்தாளர். விடுதலைப்போராட்ட வீரர். தொடக்ககால இதழாளர்களில் ஒருவர், எழுத்தாளர் சங்கச் செயல்பாட்டாளர். சுயமரியாதை இயக்க ஆதரவாளர்.

பிறப்பு கல்வி

நாரண துரைக்கண்ணன் 1906ஆம் ஆண்டு ஆகஸ்டு 24ஆம் நாள் க.வே.நாராயணசாமி - அலமேலு அம்மையாரின் மகனாகப் பிறந்தார்.பெற்றோர் இட்ட பெயர் நடராஜன். ஆனால், வீட்டில் செல்லமாக அழைத்த ‘துரைக்கண்ணு’ என்ற பெயரே நிலைத்துவிட்டது. முதலில் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும், பிறகு திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். குப்புசாமி முதலியா என்னும் ஆசிரியரிடம் மரபானமுறையில் தமிழ் கற்றார். திருவல்லிக்கேணி கெல்லட் உயர்நிலைப்பள்ளியின் ஆசிரியர் மைக்கேலிடம் ஆங்கிலம் கற்றார். மறைமலை அடிகளாரிடம் முறையாகத் தமிழ் பயின்றார்.

தனிவாழ்க்கை

1932 ஆம் ஆண்டு,​​ தன் 25வது வய​தில் மீனாம்​பாளை மணந்தார். சென்னை அடிசன் நிறுவனத்திலும் அச்சகங்களிலும் தொடக்கத்தில் இவர் பணியாற்றினார். ஜீவா பதிப்பகம் என்ற இவரின் சொந்த பதிப்பில் ஏற்பட்ட இழப்பின் காரணமாக, அக்கடனை அடைக்கத் தன் சொந்த வீட்டை விற்றிருக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

நாரண துரைக்​கண்​ண​னின் முதல் கட்​டு​ரை ‘சரஸ்​வதி பூஜை' 1924-ஆம் ஆண்டு சுதேசமித்திரன் இத​ழில் வெளியாகியது. 1932ல் ஆனந்தபோதினி இதழில் ‘அழகாம்பிக்கை’ என்ற முதல் சிறுகதையை எழுதினார். மை வண்ணன், வேள், துலாம், தராசு, திருமயிலைக் கவிராயர், துரை, லியோ என வெவ்வேறு புனைப் பெயர்களில், கதை, தொடர்கதை, அரசியல் தலையங்கம், விமர்சனங்கள், விவாதங்கள், நாடகங்களை எழுதி வந்தார். இவ்வாறு பல்வேறு பெயர்களில் எழுதிவந்தாலும் ‘ஜீவா’ என்ற இவரது புனைப் பெயர்தான் பிரபலமாக அறியப்பட்டது.

அரசியல்

தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார். 1948ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு மாநாட்டுக் குழுத் தலைவராகச் செயல்பட்டுள்ளார். ஈ.வே.ராமசாமி, சி.என்.அண்ணாத்துரை, பாரதிதாசன் ஆகியோர் பற்றி ஆய்வுக்கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

இதழியல்

நாரண துரைக்கண்ணன் பரலி சு.நெல்லையப்பர் பரிந்துரையில் ‘லோகோபகாரி’ வார இதழின் ஆசிரியரானார். 1932ஆம் ஆண்டு ‘ஆனந்த போதினி’ இதழின் ஆசிரியர் ஆனார். தேச பந்து, திராவிடன், தமிழ்நாடு ஆகிய பத்திரிகைகளிலும் பணியாற்றியுள்ளார். 1932-ல் ‘ஆனந்த போதினி’ இதழின் ஆசிரியர் பொறுப்பேற்றார். ர். 1934-ல் பிரசண்ட விகடன் இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.

அமைப்புப்பணிகள்

நாரண துரைக்கண்ணன் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர், சென்னை கம்பர் கழகச் செயலாளர், முற்போக்கு எழுத்தாளர் சங்க தலைவர், தென்னிந்தியப் பத்திரிக்கையாளர் பெருமன்றத் தலைவர், தமிழ்க் கவிஞர் மன்றத் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்தார்.

மறைவு

1996ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 22ஆம் நாள் தன் 90ஆம் அகவையில் மரணத்தைத் தழுவினார்.

நூல்கள்

பதினைந்துக்கும் மேற்பட்ட நாவல்கள்,சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள், கட்டுரைகள், ஆராய்ச்சிகள், மொழிபெயர்ப்புகள் உட்பட 130 நூல்களை இவர் எழுதியுள்ளார். இவ​ரது நூல்​கள் அர​சு​டைமை ஆக்​கப்​பட்​டுள்ளன.

  1. புதுமைப்பெண்; அருணோதயம், சென்னை.
  2. வள்ளலார் (நாடகம்)
  3. அருட்கவி அமுதம் (பக்திப்பாடல் தொகுப்பு)
  4. திருவருட்பா பற்றிய நூல்
  5. உயிரோவியம் (புதினம்)
  6. உயிரோவியம் (நாடகம்)
  7. நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன்? (புதினம்
  8. தாசி ரமணி (தே​வ​தா​சி​கள் என்ற இழுக்கை சமூ​கத்​தில் இருந்து களைய வேண்​டும் என்ற கிளர்ச்சி நாட்​டில் பர​விய காலத்​தில் எழு​தப்​பட்ட புதினம்)
  9. தீண்டாதார் யார்? (நாடகம்)
  10. காதலனா? காதகனா? (மாணவர் சீர்கேட்டைச் சுட்டிக்காட்டும் புதினம்)
  11. இலட்சிய புருடன்
  12. வேலைக்காரி