நவவேதாந்தம்

From Tamil Wiki
Revision as of 12:47, 10 April 2024 by Jeyamohan (talk | contribs) (Created page with "நவவேதாந்தம் (புதுவேதாந்தம்) : இந்திய வேதாந்த மரபின் நவீன வடிவம். வேதாந்தம் காலப்போக்கில் சாதிய அமைப்புடனும், இந்திய ஆசாரவாதத்துடனும், இந்து வழிபாட்டு முறைகளுடனும் சமரசம் செய்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

நவவேதாந்தம் (புதுவேதாந்தம்) : இந்திய வேதாந்த மரபின் நவீன வடிவம். வேதாந்தம் காலப்போக்கில் சாதிய அமைப்புடனும், இந்திய ஆசாரவாதத்துடனும், இந்து வழிபாட்டு முறைகளுடனும் சமரசம் செய்துகொண்டு அதன் அடிப்படைகளை தவறவிட்டுவிட்டது என்று எண்ணிய ஞானிகளால் அதன் தத்துவ அடிப்படைகள் சமரசமில்லாமல் வலியுறுத்தப்பட்டமையால் உருவானது. பின்னர் அவர்களின் மாணவர்களால் இந்திய வேதாந்தத்தை நவீன காலகட்டத்தின் மானுடவிடுதலைக் கருத்துக்களுடனும், சமூக மறுமலர்ச்சிக் கருத்துக்களுடனும், நவீன ஐரோப்பிய தத்துவக் கருத்துக்களுடமும் இணைத்து விரிவாக்கம் செய்வதன் வழியாக விரிவாக்கப்பட்டது. இந்திய மறுமலர்ச்சியில் நவவேதாந்தம் பெரும் பங்களிப்பாற்றியது.

தத்துவம்

மரபான வேதாந்தம் காலப்போக்கில் இந்தியச் சாதியமைப்புடனும், ஆசாரவாதத்துடனும் சமரசம் செய்துகொண்டது. வேதாந்தத்தை அது ஓர் உயர்நிலை தத்துவமாக மட்டுமே வைத்துக்கொண்டு நடைமுறையில் ஆசாரவாதம், வழிபாட்டுமுறைகள் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தது. நவவேதாந்தம் வேதாந்தத்தின் இரண்டு அடிப்படைக் கருத்துக்களை முதன்மைப்படுத்தியது. ’தூய அறிவு’ மற்றும் ‘அனைத்தும் ஒன்றே’ என்னும் இரு தரிசனங்கள் அவை. ஆகவே அறிதல்கள் வழியாகச் சென்று ஆத்மஞானம் அல்லது கேவலஞானம் என்னும் தூயதன்னறிதலையே முன்வைத்தது. அதன் விளைவாக ஆலயவழிபாடு, சடங்குகள் போன்றவற்றை அது நிராகரித்தது. அவற்றை இரண்டாம்நிலையானவை என வகுத்தது. அனைத்தும் பிரம்மமே என்று அத்வைதம் கூறுவதனால் உயிர்களிடையே வேறுபாடில்லை, மானுடரிடையேனும் வேறுபாடில்லை. சங்கரரின் மனிஷாபஞ்சகம் போன்ற படைப்புகளின் சாராம்சம் அதுவே. ஆகவே நவவேதாந்தம் மானுடரிடையே பிரிவினையை நிராகரித்தது. உயிர்க்கொலையையும் மறுத்தது.