standardised

நந்திக் கலம்பகம்

From Tamil Wiki
Revision as of 10:04, 22 April 2022 by Tamaraikannan (talk | contribs)

நந்திக் கலம்பகம் கலம்பக இலக்கியங்களில் ஒன்று. காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன் குறித்துப் பாடப்பட்ட நூல். கலம்பக நூல்களில் காலத்தால் முற்பட்டது நந்திக் கலம்பகம். மூன்றாம் நந்திவர்மனின் காலம் கி.பி. 825-850 என்பதால் நந்திக் கலம்பகத்தின் காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு. காஞ்சி, மல்லை (மாமல்லபுரம்), மயிலை (மயிலாப்பூர்) ஆகிய நகரங்கள் குறித்து இந்நூலில் விரிவாகப் போற்றப்பட்டுள்ளது. இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

பதிப்பு

நந்திக் கலம்பகம் மூலம் மட்டும் வெளியிடப்பட்ட பழைய பதிப்புகள்[1]

  • 1875 - சென்னை புரசைப்பாக்கம் விவேக விளக்க அச்சுக்கூடம்
  • 1927 - சென்னை அடையாற்று நே.தி. கல்லூரித் தமிழாசிரியர் அ.கோபாலையர் அவர்களால் திருத்தப்பெற்று பதிப்பிக்கப்பட்ட பதிப்பு
  • நந்திக் கலம்பகம் மூலமும் உரையும்
  • 1955 - சென்னை திருவல்லிக்கேணி ஸ்டார் பிரசுரம் - டி.கே. சிதம்பரநாத முதலியார் எழுதி வைத்திருந்த கையெழுத்துப் பிரதியின் கண்ட சில பாடல்களுக்கான உரை விளக்கத்துடன் வெளியான பதிப்பு
  • 1955 - பாட்டுடைத்தலைவன் தம்பியருள் ஒருவர் பாடிய நந்திக் கலம்பகம் - பு. சி. புன்னைவனநாத முதலியார், - திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (சென்னை)

அதன் பின்னர் பல பதிப்புகள் வெளிவந்துள்ளன.

நூல் வரலாறு

நந்திவர்மனிடம் இருந்து அரசைக் கைப்பற்றும் எண்ணத்தில் அவனது தம்பியால் ஒழுங்குசெய்யப்பட்டு அறம் பாடுதல் என்னும் முறையில் இப்பாடல்கள் பாடப்பட்டன. அறம் வைத்துப்பாடிய நூலின் பாடலைத் தற்செயலாகக் கேட்ட நந்தி வர்மன் அப்பாடலின் சிறப்பில் மனம் பறிகொடுத்து பாடல் முழுவதையும் கேட்க விரும்பினான். நூல் முழுவதையும் கேட்டால் மன்னன் உடல் எரிந்து இறப்பான் என்பதை அறிந்தும் தமிழின் மீதுள்ள பற்றால் உயிரையும் பொருட்படுத்தாமல், எரியும் பந்தலின் கீழிருந்து கேட்டு உயிர் இறந்தான் என்று கூறப்படுகிறது.

'நந்தி, கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்' - என்னும் சோமேசர் முதுமொழி வெண்பா என்னும் நூலின் வெண்பா வரிகளும், கள்ளாரும் செஞ்சொல் கலம்பகமே கொண்டு, காயம் விட்ட தெள்ளாறை நந்தி -என்னும் தொண்டை மண்டலச் சதகப்பாடல் வரிகளும் இக்கருத்தை சொல்கின்றன. இந்நூலிலும் பல வசைக்குறிப்புகள் இடம் பெறுகின்றன. இக்கதை மறுத்துக் கூறப்படுவதும் உண்டு.

நூல் அமைப்பு

கலம்பக நூலில் தேவர்க்கு நூறும், மறையோருக்குத் தொண்ணூற்றைந்தும், அரசர்க்குத் தொண்ணூரும், அமைச்சர்க்கு எழுபதும், வணிகர்க்கு ஐம்பதும், வேளாளார்க்கு முப்பதும் பாடப்பட வேண்டும் என்பது கலம்பக இலக்கணம்[2]. இந்த அளவினை மீறி கலம்பகங்கள் பாடப்பட்டுள்ளன. நந்திக் கலம்பகத்தில் அகத்திணைச் செய்திகள் அதிகமாகவும் புறத்திணைச் செய்திகள் குறைவாகவும் இடம் பெற்றுள்ளது.

தோள், வகுப்பு, மதங்கு, அம்மானை, காலம், சம்பிரதம், கார், தூது, தவம், மடக்கு, மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, ஊர், வண்டு, தழை, ஊசல் ஆகிய உறுப்புகளோடு பிற்காலத்தில் வந்துள்ள பிச்சியர், கொற்றியார், இடைச்சியார், வலைச்சியார் முதலிய உறுப்புகளும் வருமாறு கலம்பகம் அமைய வேண்டுமென பன்னிரு பாட்டியல் சொல்கிறது[3]. நந்திக் கலம்பகம் கலம்பக நூல்களுக்கு முதல் நூலாகக் கருதப்படுகிறது. என்வே காலத்தால் முந்தைய இந்நூலில் ஒரு சில உறுப்புகளே அமைந்துள்ளன.

அரசர்கள் மீது பாடப்படும் கலம்பகம் தொண்ணூறு பாடல்களால் பாடப்படுவதுதான் மரபு என்றாலும் நந்திக் கலம்பகத்தில் 144 பாடல்கள் இருக்கின்றன. நந்தி வர்மன் மீது பாடப்பட்ட தனிப்பாடல்களூம் இக்கலம்பகத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம் எனப்படுகிறது.

இந்நூலில் நந்திவர்மனின் தெள்ளாறு வெற்றியைப் பற்றிக் கூறும் 16 பாடல்கள் சிறப்பாக கூறுகின்றன. கொற்ற வாயில் முற்றும், விரியலூர், வெள்ளாறு, தெள்ளாறு போன்ற பல்வேறு போர்க்களங்கள் குறித்த செய்திகள் உள்ளன.

செவிவழிக் கதை

நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் குறித்த தகவல்கள் தெரியவில்லை. சில செய்திகள் செவி வழக்காக நிலவுகின்றன.

நந்திவர்மனின் மாற்றாந்தாய்க்குப் பிறந்த ஆண்மக்கள் நால்வர் அவனை எதிர்த்துப் போரிட்டுத் தோற்றனர். இந்நூலில் வரும் ‘தம்பியர் எண்ணமெலாம் பழுதாக வென்ற தலைமான வீரத்துவசன் ‘ எனும் வரி இதனை சொல்கிறது. அதன் பின்னர் அந்த நால்வருள் ஒருவன் மந்திர வித்தையும், மற்றொருவன் தந்திர வித்தையும், வேறொருவன் வாட்போர் செய்யும் திறமையும், பிறிதொருவன் செய்யுளில் அறம் வைத்துப் பாடும் திறமையும் பெற்றனர்.

செய்யுள் இயற்றும் திறமை பெற்றவர் பாடல்களில் நந்திவர்மனைப் புகழ்வதுபோல் ஆனால் இடை இடையே வசைக் குறிப்புகளை வைத்து அறம்பாடி இந்நூலை இயற்றினார். இந்நூல் பாடியபின் துறவு பூண்டு பிச்சை எடுத்து உண்டு வாழத் தொடங்கினார். அவ்வாறு வீதி வழியே வரும்போது தான் இயற்றிய இந்நூலின் பாடல்களைப் பாடுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். அவ்வூரின் கணிகை ஒருத்தியும் அவர் மூலம் இப்பாடல்களைக் கற்று பாடி வந்தாள்.

ஒருநாள் ஊர்க்காவலர், அவள் பாடிய ‘வானுறு மதியை அடைந்ததுன் வதனம் ‘ என்ற பாட்டைக் கேட்டு அப்பாட்டில் நந்திவர்மன் இறந்துவிட்டதாக வரும் வரிகேட்டு அதிர்ச்சியுற்று அரசனிடம் தெரிவித்தனர். அரசன் கணிகை மூலம் பாடிய துறவியை வரவழைத்தான். பாடலின் இனிமையை உணர்ந்த நந்திவர்மன் துறவியிடம் முழுநூலையும் பாடுமாறு கேட்டுக்கொண்டான்.

துறவி தன் வரலாற்றைக் கூறித் நந்திவர்மனிடம் உண்மையைக் கூறினார். ‘பச்சை ஓலைகளால் நூறு பந்தல் அமைத்து மன்னன் அரச கோலத்துடன் அவற்றின் கீழ் வீற்றிருந்து பாடல்களைக் கேட்க வேண்டும். ஒரு பாட்டு முடிந்த உடன் அப்பந்தல் எரிந்து விடும். இறுதிப் பாட்டைக் கேட்க கடைசிப் பந்தலில் விறகுகள் அடுக்கி சிதையில் படுத்துக் கொள்ள வேண்டும். பாட்டு முடிந்ததும் விறகிலும் உடலிலும் தீப்பற்றும். இதற்கு சம்மதமா ‘ என்று துறவி கேட்டார்.

தமிழ்ப்பாடல்களின் மீது பெரும் காதல் கொண்ட நந்தி வர்மன் அதற்கு ஒப்புக்கொண்டான். இறுதிப் பாடல் கேட்ட மன்னன் உயிர் துறந்தான்.

இந்நூலில் நந்திவர்மன் ‘காடவற்கு முந்தோன்றல் ‘ என்று குறிப்பிடப்படுவதால் நூலாரசியரின் பெயர் ‘காடவர் ‘ என்று இருந்திருக்கலாம்.[4]

இலக்கிய நயம்

நந்திக் கலம்பகப் பாடல்களில் வீரம் நகைச்சுவை போன்ற பல்சுவைகளில் ஆன பாடல்கள் இருக்கின்றன. சொல்நயமும் பொருள்நயமும் உள்ள பாடல்களில் மறைபொருளாக பழிப்பது போன்ற வசைச் சொற்களும் இடம்பெற்றுள்ளன.

நந்திவர்மனைப் புகழ்வது போல் அவன் மறைந்து விட்டதாகக் குறிப்பு உள்ள பாடல்:

வானுறு மதியை அடைந்ததுன் வதனம் மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி

கானுறு புலியை அடைந்ததுன் வீரம் கற்பகம் அடைந்ததுன் கரங்கள்

தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள் செந்தழல் அடைந்ததுன் தேகம்

நானுமென் கலியும் எவ்விடம் புகுவேம் நந்தியே நந்தயா பரனே

இப்பாடலில் நேர்ப்பொருளாக மன்னனின் ஒவ்வொரு பண்புக்கும் அதற்கான உவமை கூறப்பட்டுள்ளது. அழகில் நிலவு, பெருமையில் கடல், வீரத்தில் புலி, கொடைச்சிறப்பில் கற்பகம் என அனைத்திலும் சிறப்பானவற்றுக்கு இணையானவன் நந்தி வர்மன் ஒருவனே என்பது போல் அமைந்துள்ளது. மறைபொருளாக ”நந்திவர்மனே , உன் முகம் நிலவை அடைந்து விட்டது ( நந்தி உயிருடன் இல்லை) . உன் புகழ் கடலுக்குள் சென்றுவிட்டது ( உன் புகழ் ஆழ்கடலில் மூழ்கி அழிந்து விட்டது ) . உன் வீரம் புலியை அடைந்தது. கொடை அளித்த உன் கைகள் கற்பக மரத்தை அடைந்தது. இதுவரை உன்னுடன் இருந்த செல்வம் , அதன் வடிவாய் உன் நாட்டில் இருந்த திருமகள் அதை விட்டு நீங்கி அரியிடம் சென்றாள் . உன் உடல் தீயை அடைந்தது. இப்படி அனைத்தையும் இழந்து, உன்னையும் இழந்த பின் நானும் என் விதியும் எங்கு செல்வது” என்று நந்திவர்மனைப்பார்த்து புலவர் கேட்பது போல உள்ளது.

இதேபோல வேறுசில பாடல்களும் அறம் பாடியதற்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படுகின்றன. முதல் பாடலில் ‘உலகுடையான் திருமுடியும் ‘ என்பது நந்திவர்மனின் புகழ்மிக்க முடியைக் குறிப்பதுபோல் வரும் சொற்றொடர். ஆனால் ‘திருமுடியும் ‘ என்பது திரு, முடியும் என்று இரு சொற்களாகி செல்வமானது அழிந்து போகும் எனும் பொருள் கொள்ளலாம்.

ஏழாம் பாடலில் ‘முதல்வனுக்குப் பழுது ‘ என்பது நந்திவர்மனுக்கு கேடு எனும் பொருளை மறைமுகமாகச் சொல்கிறது.

பொழுதுகண் டாயதிர் கின்றது போகநம் பொய்யற்கென்றுந்
தொழுதுகொண் டேனென்று சொல்லுகண் டாய்தொல்லை நூல்வரம்பு
முழுதுகண் டானந்தி மல்லையங் கானல் முதல்வனுக்குப்
பழுதுகண் டாயிதைப் போய்ப்பகர் வாய்சிறைப் பைங்குருகே.

53-ஆம் பாடலில் நந்திவர்மன் ‘கரியாய் நின்ற மன்னா ‘ என்ற வரியால் பாடப்படுகிறான்.

புலவரசைப் புறங்கண்ட புகழ்சேர் கோவே
பூவலயந் தனிற்கரியாய் நின்ற மன்னா

கரி என்பதற்கு சான்று எனப்பொருள் கொண்டு இவ்வுலகத்திற்குச் சான்றாக விளங்குபவனே என்பது இதன் நேர்உரை. ஆனால் இதில் ‘எரிந்து கரியாய் சாம்பலாய் போகும் அரசே ‘ என்ற வசைபொருள் மறைந்திருக்கிறது.

நந்திக் கலம்பகத்தின் நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டாக ஒரு பாடல்:

தலைவனிடமிருந்து தூது வரும் பாணனைத் தலைவி இழித்துரைப்பதாக வருவது பாண் என்னும் உறுப்பு. நந்திக் கலம்பகத்தில் பாணனைத் தலைவி பழிப்பது போல வரும் பாடல்

               ஈட்டுபுகழ்நந்தி பாணநீ எங்கையர்தம்
               வீட்டிருந்து பாட விடிவளவும் – காட்டிலழும்
               பேய் என்றாள் அன்னை பிறர் நரி என்றார் தோழி
               நாய் என்றாள் நீ என்றேன் நான்.

“பாணனே, நீ என் தங்கைகளாகிய பரத்தையர் வீட்டிலிருந்து நேற்றிரவு பாடினாய், அதைக் கேட்ட என் தாய் பேய் அழுகிறது என்றாள். வீட்டிலுள்ள பிறரோ நரி ஊளையிடுகிறது என்றார்கள். தோழி நாய் குரைக்கிறது என்றாள். நீதான் பாடுகிறாய் என்று நான்தான் சரியாகக் கண்டுபிடித்தேன்” என்கிறாள் தலைவி.

உசாத்துணைகள்

அடிக்குறிப்புகள்

  1. பாட்டுடைத்தலைவன் தம்பியருள் ஒருவர் பாடிய நந்திக் கலம்பகம் - பு. சி. புன்னைவனநாத முதலியார் பதிப்புரையில் இருந்து அறியப்படும் பதிப்புகள்
  2. நூறு தேவர், தொண்ணூற்றைந்து பார்ப்பார்க்கு,
    அரசர் தொண்ணூறு, அமைச்சர்க்கு எழுபஃது,
    ஐம்பான் வைசியர்க்கு, ஆறைந்து சூத்திரர்க்கு
    என்ப இதன் இயல்புணர்ந்தோரே

  3. சொல்லிய கலம்பகம் சொல்லில் ஒருபோகு
    முதற்கண் வெண்பா கலித்துறை புயமே
    அம்மனை ஊசல் யமகம் களிமறம்
    சித்து காலம் மதங்கி வண்டே
    கொண்டல் மருள் சம்பிரதம் வெண்துறை
    தவசு வஞ்சித் துறையே இன்னிசை
    புறமேய் அகவல் விருத்தம் எனவரும்
    செய்யுட் கலந்துடன் எய்திய அந்தம்
    ஆதியாக வரும் என மொழிப.

    - பன்னிரு பாட்டியல்

  4. நந்திக் கலம்பகம் - வளவ துரையன்



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.