under review

தென்னிந்திய தொழிலாளர் நிதியம்

From Tamil Wiki
Revision as of 20:22, 24 July 2022 by Navin Malaysia (talk | contribs) (Created page with "thumb தென்னிந்திய தொழிலாளர் நிதியம் என்பது தென் இந்தியாவில் இருந்து தொழிலாளர்களை,  மலாயாவின் தொடுவாய் மாநிலங்களுக்கு  தோட்டப் பாட்டாளிகளாக கொண்டுவரும் பணியை இலகுவாக்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Thozilazi 02.jpg

தென்னிந்திய தொழிலாளர் நிதியம் என்பது தென் இந்தியாவில் இருந்து தொழிலாளர்களை,  மலாயாவின் தொடுவாய் மாநிலங்களுக்கு  தோட்டப் பாட்டாளிகளாக கொண்டுவரும் பணியை இலகுவாக்கும் பொருட்டு ஆங்கில முதலாளிகளால் உருவாக்கப்பட்ட நிதி இருப்பு. 1907 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம் தொடக்கத்தில் தமிழர் குடிநுழைவோர் நிதியம் (Tamil Immigration Fund) என்றே அழைக்கப்பட்டது.  பின்னர் 1912க்குப் பின் அது இந்திய குடிநுழைவோர் நிதியம் (Indian Immigration Fund) என்று பெயர் மாற்றம் பெற்றது. 1958 தொழிலாளர் சட்ட வரைவுக்குப் பின் அது தென்னிந்திய தொழிலாளர் நிதியம் (South Indian Labour Fund) என்று பெயர் மாற்றம் பெற்றது. 1999 ஜூலை 12ல் இந்நிதியம் மலேசிய அரச ஆணைக்கேற்ப கலைக்கப்பட்டது. அதன் சொத்துகளை மலேசிய அரசாங்கம் கையகப்படுத்தியது.

வரலாறு

19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் பிரிட்டனில் தொழில்துறை புரட்சி மற்றும் பெரிய அளவிலான உற்பத்தியின் வளர்ச்சி ஆகியவை காலனி நாடுளில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தன. பிரிட்டனில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான மூலப்பொருட்கள் மற்றும் சந்தைகளை வழங்குவதற்கான ஆதாரங்களுக்காக காலனி நாடுகள் மாற்றப்பட்டன.  ஆகவே காலனி நாடுகளில் பெரும் முதலாளிகள் தங்கள் முதலீட்டை செலுத்தவும் மூலப்பொருள் உற்பத்தியை பெருக்கவும் கட்டற்ற முதலீட்டு சலுகையை  (laissez-faire) பிரித்தானிய அரசாங்கம் வழங்கியது. அதன் பொருட்டு காலனி நாடுகளில் ஏற்பட்ட தொழிலாளர் பற்றாகுறையைப் போக்க தென்னிந்தியாவில் இருந்து இலங்கை, குயானா, மொரீசியஸ், தென் ஆப்பிரிக்கா என பல்வேறு நாடுகளுக்கு தமிழர்கள் உடல் உழைப்பு தொழிலாளர்களாக கொண்டு செல்லப்பட்டனர்.

தமிழர்கள் தொழிலாளர்களாக கொண்டுவரப்பட்ட முறைகள்

ஒப்பந்த முறை
Thozilazi 03.jpg

ஆரம்ப கட்டங்களில், மலாயாவிற்குள் இந்தியர்களின் நுழைவு ஒப்பந்தத் தொழிலாளர் முறை எனப்படும் முறையின் மூலம் நிர்வகிக்கப்பட்டது. இது முதலில் l820 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அமைப்பின் கீழ், தொழிலாளர்கள் தங்கள் மலாயாவிற்கு பயணக் கட்டணத்திற்கு நிதியளிக்கும் ஒரு முதலாளியுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, பொதுவாக ஐந்து ஆண்டுகளுக்கு முதலாளியுடன் வேலை செய்ய கடமைப்பட்டுள்ளனர். ஒப்பந்த தொழிலாளர் முறை மிகவும் ஒடுக்குமுறையாக காணப்பட்டதால் நீண்ட காலம் நீடிக்கவில்லை. அழைத்து வரப்பட்ட தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்பட்டனர். வயல்களில் கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்பட்டது. சிலர் நோய்வாய்ப்பட்டதால் ஊதியம் வழங்கப்படவில்லை. 1868 ல், இந்த முறை நிறுத்தப்பட்டு கங்காணி அமைப்பு என்று அழைக்கப்படும் மற்றொரு முறையால் மாற்றப்பட்டது.

கங்காணி அமைப்பு

'கங்காணி' அமைப்பின் மூலம், இந்தியாவில் இருந்து தொழிலாளர்களைப் பெற விரும்பும் முதலாளிகள் ஒரு கங்காணியை (தொழிலாளர் முகவர்) சொந்த ஊருக்கு அனுப்பி தொழிலாளர்களைப் பெற வேண்டும். தொழிலாளர்கள் அந்தந்த முதலாளியின் தோட்டத்திற்கு வரும் வரை ஆகும் செலவுகளை முதலில்  அந்த கங்காணியே  ஏற்க வேண்டும். தொழிலாளர்கள் கங்காணிகளின் மேற்பார்வையில் பணியமர்த்தப்பட்டனர்.  பிறகு, அதற்கான மொத்தமான ஊதியத்தை கங்காணி,  முதாலாளிகளிடம் இருந்து பெருவார்.

நன்கு அறியப்பட்ட கங்காணிகளால் தொழிலாளர்கள்  கையாளப்படுவதால்  கங்காணி அமைப்பு வெற்றிகரமாக இந்தியாவிலிருந்து அதிகமான தொழிலாளர்களைக் கொண்டுவந்தது. பெரும்பாலோர் குடும்பங்களாக வந்தனர். இதன் மூலம் புதிய சூழ்நிலை மற்றும் பணியிடத்திற்கு ஏற்ப அவர்களுக்கு எளிதாக இருந்தது.  அதே சமயம் தோட்ட முதலாளிகள் தொழிலாளர்களை கொண்டுவருவது பராமரிப்பது போன்ற செலவுகள் மிக அதிகமாக உயர்ந்தன. மேலும் தொழிலாளர்கள் கொண்டுவருவதில் ஏற்பட்ட சிக்கல்களையும் செலவுகளையும் தோட்ட முதலாளிகள் சமளிக்க முடியாமல் திண்டாடினர். ஆகவே இந்த சிக்கலை குறைக்க ஒரு ஏற்பான எளிய நடைமுறையை அவர்கள் சிந்தித்தனர்.

Thozilazi 05.jpg

இந்நிலைமை, தமிழர் குடியேற்ற நிதியம் மற்றும் குடிவரவுக் குழுவை நிறுவ வித்திட்டது.  அதோடு அரசாங்கம் மிகவும் திறமையான ஆட்சேர்ப்பு முறைக்கு மாற நிர்ப்பந்தித்தது.

மேலும் United  Planter's Association, Johore Planter's Association, Malay Peninsula Agricultural Association போன்ற தோட்ட முதலாளிகள் சங்கங்களும் தமிழ் தொழிலாளர் இறக்குமதியில் இருக்கும் சிக்கல்களை பிரித்தானிய அரசு கலைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தன. ஆகவே மலாய் ஒருங்கிணைந்த மாநிலங்களின் ஆளுநர் வில்லியம் டெய்லர்  முன்மொழிவுக்கு ஏற்ப, மெட்ராசில் குடிவரவு முகவர்களை நிறுவுதல்; குடியேற்றக் நிர்வாக குழுவின் நியமனம் மற்றும் சட்டத்தை அறிமுகப்படுத்துதல் ஆகிய திட்டங்கள் ஏற்கப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டன.

மேலும் அவர், தமிழ் தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் அனைத்து முதலாளிகளும் தொழிலாளர் வரியை  செலுத்துவதை கட்டாயமாக்கும் ஒரு சட்ட வரைவை அவர் முன்மொழிந்தார். மேலும் அந்த வரியை தமிழ் தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான செலவை ஈடுசெய்ய பயன்படுத்தக்கூடிய நிதியாக மாற்றும் திட்டத்தையும் முன்மொழிந்தார்.  ஏப்ரல் 14, 1907ல் குடியேற்ற பொறுப்பு நிர்வாக குழுவினர் கூட்டத்தில் அதன் உறுப்பினர்களில் ஒருவரான ஜோன் துனர் கருத்துப்படி தமிழ் குடியேற்றவாசிகள் நிதியம் தொடங்கப்பட்டது. இதன் பொருட்டு தமிழ் குடிநுழைவுவோர் ஆணையம்  ஜனவரி 1, 1908ல் அதிகாரப்பூர்வமாக  பிறப்பிக்கப்பட்டு அதன் விதிகளுக்கு ஏற்ப நிதியம் கையாளப்பட்டது. “மெட்ராஸ் மாகானத்தில் இருந்து கொண்டுவரப்படும் 14 வயதுக்கு மேம்பட்ட, தோட்ட தொழிலாளிகள், சாலை பணியாளர்கள், ரயில் தண்டவால பணியாளர்கள், சாக்கடை நிர்மானிப்பு, கட்டிட நிர்மானிப்பு போன்ற வேலைகளில் ஈடுபடுவோர் அனைவரையும் உட்படுத்திய நிதியமாக இது அமைந்தது.    நிதியின் முதல் வரவாக மலாய் ஒருங்கிணைந்த மாநிலங்களின் தொகையாக 50000 டாலரும்  ஜொகூர் மாநில அரசின் சார்பாக 5000 டாலரும் கடனாக பெறப்பட்டன.  இத்தொகை முதல் மூன்று மாதங்களுக்கு தமிழ் தொழிலாளிகளை நாட்டுக்குள் கொண்டுவரும் பயணச்செலவை ஈடுகட்ட திட்டமிடப்பட்டது. இதன் வழி தமிழ் குடியேற்றவாசிகள் நிதியத்தின் முதன்மை பணி,  தோட்ட முதலாளிகள் சிக்கலின்றி பெரிய எண்ணிக்கையில் தொழிலாளர்களைக் கொண்டுவரும் வாய்ப்பை உருவாக்குவதாக அமைந்தது.  

பெயர் மாற்றமும் நிதியத்தின் பணியில் விரிவாக்கமும்
Thozilazi 04.jpg

இந்நிதியம் 1912 ஆம் ஆண்டு  ‘இந்திய குடிநுழைவோர் நிதியம் (Indian Immigration Fund) என்று பெயர் மாற்றம் பெற்றது. மேலும் தொழிலாளர் சட்டத்தின் கீழ் இந்நிதியம் நிர்வகிக்கப்பட்டது. தென் இந்தியாவிலிருந்து மலாயாவுக்கு கொண்டுவரப்படும் தொழிலாளிகளில் மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் போன்ற பல்வேறு இனத்தவரும் கலந்து இருப்பதை உணர்ந்த ஆங்கில அரசு இந்த பெயர் மாற்றத்தை செய்தது. இதன் விளைவாக நிதியத்தின் பணிகள் மேலும் விரிவு செய்யப்பட்டன. முன்பு கப்பல் பயணச் செலவை மட்டுமே ஏற்ற நிலையில் மாற்றம் வந்தது. தொழிலாளிகள் தங்கள் வீட்டில் இருந்து நாகப்பட்டின தொழிலாளர் முகாம்களுக்கு செல்லும் ரயில் செலவு உட்பட அவர்களின் காத்திருக்கும் காலத்தின் உணவுச் செலவும் கப்பல் பயணத்தின் உணவுச் செலவும், மேலும் பினாங்கில் புறமலையில் தனிமை படுத்தப்படும் கால உணவு, பணி செய்யும் தோட்டத்திற்கு சென்று சேறும் ரயில் செலவு, தொழிலாளர் முகவர்கள் முதலாளிகளுக்கு அனுப்பிய தந்தி செலவு,  என எல்லா செலவுகளையும் நிதியத்தின் வழி ஈடுகட்டப்பட்டது. மேலும் தொழிலாளிகள் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல முடிவு செய்தால் குடும்பத்துடன் அவர்கள் மீண்டும் தங்கள் கிராமத்திற்குத் திரும்பிச் செல்லும் முழு செலவையும்  நிதியம் வழி பெற வழி செய்யப்பட்டது.

நிதியத்தின் முக்கியத்துவம்
  • தமிழ் தொழிலாளர்களுக்கு இலவச பயண சீட்டு கொடுப்பதன் வழி அவர்களை கவர்வது
  • தொழிலாளர்களின் சம்பலத்தில் வரி விதிக்கப்படுவதில்லை
  • தொழிலார்களின் மற்ற செலவுகளுக்கு ரூ12 க்கு மேல் பிடித்தம் செய்யக் கூடாது.
  • தென் இந்திய தொழிலாளர்களின் வேலை தேர்வும் அவர்களை மலாயாவுக்கு கொண்டுவரும் முறையும் முறை படுத்தப்பட்டதன் வழி முதலாளிகள் கூடுதல் வருமானம் ஈட்ட வழி செய்யப்பட்டது.
  • 1909 ஆம் ஆண்டு நிதியத்தின் செலவில், ஆவடியிலும் நாகப்பட்டினத்திலும்  நவீன தொழிலாளர் முகாம்கள் கட்டப்பட்டன. ஆவடியில் புதிய மருத்துவமனையும் தனிமைபடுத்தும் கூடமும் கட்டப்பட்டன. இந்த முகாம்களில் 2000 பேர் தங்கும் வசதி செய்யப்பட்டிருந்தது. இங்கு தொழிலாளராக பதிந்து கொண்டு உடல் ஆரோக்கிய உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டுமே மலாயாவுக்கு தொழிலாளர்களாக கொண்டுவர அனுமதிக்கப்பட்டனர்.   

1938-ஆம் ஆண்டு கங்காணி முறை நிருத்தப்பட்டது. ஆகவே மலாயாவில் தென்னிந்திய தொழிலாளர்கள் வரவு குறையத்தொடங்கியது. மேலும் உலகபோர்களின் காரணமாகவும் தொழிலாளர் வருகை பாதிக்கப்பட்டது. இந்தியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் காரணமாக மலாயாவுக்கு கொண்டுவரப்படும் தொழிலாளிகளின் நலனில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.  தென்னிந்திய தொழிலாளிகள் மலாயாவுக்கு வருவது குறைந்த பின்னர் நிதியம் தன் செலவுகளைக் குறைத்துக் கொண்டது. ஆவடி, நாகப்பட்டனம் போன்ற இடங்களில் கட்டப்பட்ட தொழிலாளர் முகாம்கள் விற்கப்பட்டன. அதன் வழி பெற்ற பணம் நிதியத்தில் சேர்க்கப்பட்டது.  1941ஆம் ஆண்டு நிதியத்தில் 5 முதல் 6 மில்லியன் டாலர் சொத்து இருந்ததாக மதிப்பிடப்படுகின்றது.

மலாயாவிலிருந்து முதுமையடைந்தோ நோயின் காரணமாகவோ மீண்டும் தமிழகம் செல்ல விரும்பும் தொழிலாளிகளை அது இலவசமாக அனுப்பும் சேவையை வழங்கிக் கொண்டிருந்தது. 1945 முதல் 1948 வரை 8017 தொழிலாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும்  நிதியத்தின் உதவியுடன் இந்தியாவுக்கு திரும்பினர்.   1948 முதல் 1999க்கு இடைப்பட்ட காலத்தில் 27399  தோட்ட தொழிலாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும் தென்னிந்திய தொழிலாளர் நிதியத்தின் உதவியில் இந்தியாவுக்கு திரும்பியிருக்கின்றனர்.

மேலும் ஆதரவற்றிருக்கும்  தோட்ட தொழிலாளர்களையும் முதியோரையும் பராமரிக்கும்  நிறுவனங்களுக்கு  நிதியம் பொருளாதார உதவி செய்தது.  அவற்றில் மலாயாவின் பல நகரங்களில் இயங்கிய கான்வென்ட்களின் ஆதரவற்றோர் இல்லங்கள், பினாங்கு ராமகிருஷ்ண ஆதரவற்றோர் இல்லம், பூச்சோங் தூய வாழ்க்கை சொசைட்டி, மான்ட்ஃபோர்ட் சிறுவர் இல்லம், பினாங்கு செயின்ட் நிக்கோலஸ், புலாவ் பினாங்; பினாங்கு  ஏழைகளின் சிறிய சகோதரிகள், புலாவ் பினாங் மற்றும்  தைப்பிங் இந்தியர் குழந்தைகள் நல இல்லம் போன்றவை குறிப்பிடத்தக்கன.

ஆகஸ்டு 31, 1958ல் இந்திய குடிநுழைவோர் நிதியம்  முற்றாக கலைக்கப்பட்டு அதன் சொத்துகள அனைத்தும்  தென்னிந்திய தொழிலாளர் நிதியத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.  செய்யப்பட்டது.  ஆயினும்  புதிய அமைப்பு  முதிய தோட்ட தொழிலாளர்களின் நிலையில் கவனம் செலுத்தி வந்தது. 1913 ஆம் ஆண்டு முதல் கோலாலம்பூர் செர்கூலர் சாலையில் (பெக்கெலிலிங் சாலை) அமைக்கப்பட்ட முதியோர் இல்லம் தொடர்ந்து இயங்கி வந்தது.  அந்த இல்லத்தில் வசித்த முதியவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5 வெள்ளி நிதி உதவியும் தீபாவளி கிருஸ்மஸ் போன்ற பண்டிகைக் காலங்களில் சிறப்பு உதவிகளும் கொடுக்கப்பட்டன. மேலும் நிபோங் தெபால், பினாங்கில்  செல்வந்தர் என். எஸ் டி ஆறுமுகம் பிள்ளை நன்கொடை அளித்த 15 ஏக்கர் நிலத்தில்  அமைந்திருந்த முதியோர் இல்லத்தையும் தென்னிந்திய தொழிலாளர் நிதியம் நிர்வகித்துக் கொண்டிருந்தது. அந்த இல்லம் 1966 முதல் இயங்கிக் கொண்டிருந்தது.  முதியோர் இல்லங்களில் தங்க விரும்பாமல் தாங்கள் தொழில் செய்த தோட்டத்திலேயே தங்கள் முதுமையைக்கழித்த தொழிலாளர்களுக்கு மாத படித்தொகை வழங்கப்பட்டது.

மேலும் தென்னிந்திய தொழிலாளர் நிதியம் 1962 முதல்,  தோட்ட தொழிலாளர்களின் வாரிசுகளில் சிறப்பான கல்வி தேர்ச்சி பெற்று உயர் கல்வி பெரும் மாணவர்களுக்கு கல்விக் கொடை வழங்கி ஊக்குவித்தது.  

எனினும் மலேசியாவில்  ஏற்பட்ட பல்வேறு அரசியல் மாற்றங்களின் காரணமாக தென்னிந்திய தொழிலாளர் நிதியம் தனித்து விடப்பட்டிருந்தது. தென்னிந்திய வம்சாவளியினருக்கான மிகப்பெரிய முதலீட்டைக் நிதியம் கொண்டிருந்தாலும் அதை பயன்படுத்த அரசு முன்வரவில்லை.  அது வங்கி நிரந்தர சேமிப்பில் கிடைந்தத வருமானத்தை மட்டுமே நம்பியிருந்தது. ஆகவே நிதியத்தின் பொருளாதார நிலை மெல்ல குறைந்து கொண்டிருந்தது. இதன் விளைவாக 1987முதல் கல்வி உதவிகளை அது நிறுத்திக் கொண்டது. 1996 முதல் முதியோர் இல்லங்களில் புதியவர்களை எடுப்பதையும் நிறுத்திக் கொண்டது.  1998-ல் நிபோங் தெபால் முதியோர் இல்லத்தில் 22 பேர் மட்டுமே தங்கியிருந்தனர்.

1907 ஆம் ஆண்டு தமிழ் தொழிலாளிகளின் நிதியமாக அது தொடங்கப்பட்ட போது கொண்டிருந்த நோக்கம் (இந்திய தொழிலாளிகளை கொண்டுவருவதும் மீண்டும்  அனுப்புவதும்)பிற்காலத்தில் இல்லாமலாகிவிட்ட நிலையில் தென்னிந்திய தொழிலாளர் நிதியத்தின் தேவை கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அப்போதைய பிரதமர் மகாதீர் முகமது அந்த நிதியம் பற்றிய ஆய்வுகளை தீவிரமாக தொடங்கினார்.   1992 ல்  தொழிலாளர் அமைச்சர்  டத்தோ லிம் ஆஹ் லெக் தென்னிந்திய தொழிலாளர் நிதியம் காலாவதியாகிவிட்ட நோக்கங்களைக் கொண்ட நிறுவனம் என்று கருத்து கூறினார்.  அமைச்சரவை மார்சு 26,  1996ல் தென்னிந்திய தொழிலாளர் நிதியத்தை கலைக்கும் முடிவை எடுத்தது. அரசின் முடிவை இந்திய பிரதிநிதித்துவ கட்சியான ம.இ,கா ஏற்றுக் கொண்டது.  அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நிதியத்தின் பாதுகாப்பில் இருந்த முதியவர்கள் சமூக நல அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டனர். நிதியத்தின் கையிருப்பு அரசாங்க கருவூலத்துக்கு மாற்றப்பட்டது.  நவம்பர் 18, 1999 தென்னிந்திய தொழிலாளர் நிதியம் சட்டப்படி கலைக்கப்பட்டது.  

சர்சைகள்

Thozilazi.jpg

அரசாங்கத்தின் முடிவால் இந்திய சமூகம் கடும் அதிருப்தி கொண்டது.  தென்னிந்திய தொழிலாளர் நிதியத்தை கலைப்பதை விட அதன் சொத்துகளை சமூகத்துக்கு நன்மை தரும் வகையில் மாற்றி அமைந்திருக்க வேண்டும் என்று கருத்து கூறப்பட்டது.  இளைஞர் மணிமன்றம், திராவிடர் சங்கம், இந்து சங்கம், மலேசிய இந்து இளைஞர் இயக்கம் போன்ற அமைப்புகள் பிரதமரிடம் மகஜர் வழங்கினர். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் நாடாளுமன்றத்தில் கடுமையான கண்டணங்களை பதிவு செய்தார்.  

நிபோங் தெபாலில் முதியோர் இல்லம் இயங்கிய நிலத்தில் அரசாங்கம் இளையோர் தொழில்கல்வி கல்லூரி ஒன்றை அமைத்தது. மனிதவள அமைச்சின் பார்வையில் இயங்கும் அந்த கல்வி கூடத்துக்கு, என் எஸ் டி ஆறுமுகம் பிள்ளை தொழில் நுட்ப கல்லூரி (Institut Latihan Perindustrian Arumugam Pillai) என்று பெயர் சூட்டியது.

இணைய இணைப்புகள்

  • https://ejournal.um.edu.my/index.php/SARJANA/article/view/11041/7611
  • http://web.usm.my/kajh/vol27_1_2020/kajh27012020_06.pdf
  • http://www.commonlii.org/my/legis/consol_act/silfa1999394/
  • https://dapmalaysia.org/all-archive/English/2005/mar05/bul/bul2646.htm


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.