standardised

தூது (பாட்டியல்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 142: Line 142:
* [http://www.tamilvu.org/courses/degree/c012/c0123/html/c01232l1.htm தூது]
* [http://www.tamilvu.org/courses/degree/c012/c0123/html/c01232l1.htm தூது]


[[பகுப்பு:தூது இலக்கியங்கள்]]
[[Category:தூது இலக்கியங்கள்]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
 
[[Category:Tamil Content]]
{{Standardised}}
{{Standardised}}
[[Category:Tamil Content]]

Revision as of 10:07, 22 April 2022

தூது தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒரு வகை இலக்கியம். தூதுவிடும் மரபு குறித்த பாடல்கள் தனிப் பாடல்களிலும், பத்தி இலக்கியங்களிலும், காப்பியங்களிலும் இடம்பெற்று வந்தாலும் பொ.யு. 14-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தூது தனியொரு சிற்றிலக்கியமாக உருவாகியது.

இது பெரும்பாலும் கலிவெண்பாவில் இயற்றப்படும் செய்யுள்.[1]

தோற்றமும் வளர்ச்சியும்

ஒருவர் தன் கருத்தை மற்றவருக்குத் தெரிவிக்க இடையே பிறிதொருவரை அனுப்புவதே தூது. அரசர்கள் பகைவர்களிடமும், புலவர்கள் வள்ளல்களிடமும், தலைவன் தலைவியிடமும், தலைவி தலைவனிடமும் தூது அனுப்பியுள்ளனர். இது குறித்த பாடல்களை தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியத்திலும் காணலாம்.

அதியமான் தொண்டைமான் என்னும் இன்னொரு அரசனுக்கு ஔவையாரைத் தூது அனுப்பியது குறித்த புறநானூற்றுப் பாடல் இருக்கிறது. அகநானூற்றில் காதல் கொண்ட தலைவி கடற்கரையில் ஓடும் நண்டைப் பார்த்து தன் தலைவனிடம் சென்று தன் துயர நிலையை எடுத்து சொல்லுமாறு அமைந்த பாடல் இருக்கிறது.  காவியங்களிலும், பிற்காலத்தில் பக்தி இலக்கியத்திலும் கூட இதுபோன்ற தூது அனுப்பும் பாடல்கள் பாடப்பட்டன. இவை தூது குறித்த பாடல்கள் என்றாலும், தூது அனுப்பும் செயலையே அடிப்படையாகக் கொண்டு அமைந்தவையே தூது இலக்கியங்கள்[2].

தூது வகையில் அமைந்த முதல் இலக்கியம் பொ.யு. 14-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த உமாபதி சிவாச்சாரியாரின் நெஞ்சுவிடு தூது. தன் நெஞ்சத்தைத் தம் ஆசிரியருக்குத் தூதாக அனுப்புவதாக எழுதியிருக்கிறார். இது சைவ சித்தாந்தக் கருத்துகள் கொண்ட நூல்.

அமைப்பு முறை

தூது இலக்கியம் கலிவெண்பா மற்றும் பிற வெண்பாவாலும் இயற்றப்பட்டிருக்கிறது.

தூது இரண்டு வரிகளால் ஆன கண்ணிகளாக பாடப்படுவது. தூது நூல்களில் முதல் நூலான 14-ஆம் நூற்றாண்டில் தோன்றிய முதல் தூது நூல் உமாபதி சிவாச்சாரியாரின் நெஞ்சு விடு தூது கலிவெண்பாவில் எழுதப்பட்டுள்ளது

தூது இலக்கியம் எவ்வகைப் பாடல்களால் அமைய வேண்டும் என்பதை இலக்கண விளக்கம், பிரபந்த மரபியல் ஆகிய பாட்டியல் நூல்கள் குறிப்பிட்டுள்ளது. இவ்விரு நூல்களுக்கு முன்னரும், பின்னரும் தூது இலக்கியங்கள் தோன்றியுள்ளன.

தூது இலக்கணம், கலிப்பாவில் அமைதல் வேண்டும் என்பதை

பயில் தரும்  கலிவெண்பா பாவினாலே

உயர்திணைப் பொருளையும், அஃறிணைப் பொருளையும்,

சந்தியின் விடுதல் முந்தறு தூது எனப்

பாட்டியற் புலவர் நாட்டினர் தெளிந்தே

–    இலக்கண விளக்கம். 874 என்னும் 16-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட இலக்கண விளக்கம் வரையறுக்கிறது.

இருதிணை யுடன்அமை யயலை உரைத்து

தூது சொல விடுவது தூது இவை கலிவெண்

பாவினால் விரித்துப் பகர்(வது மரபே)

–    பிரபந்த மரபியல்

இவ்விரு இலக்கண நூல்களும் “நெஞ்சுவிடு தூது”க்குப் பின்னர் எழுதப்பட்ட இலக்கண நூல்களாகும்.

கலிவெண்பா யாப்பிலேயே பெரும் பகுதியான தூது நூல்கள் இயற்றப்பட்டுள்ளன.

அல்லி மரைக்காயர் என்னும் புலவர் வண்டுவிடு தூது, அன்னம் விடு தூது ஆகியவற்றையும், கனகசபை புலவர் மேக தூதக்காரிகையும், நவநீதகிருஷ்ணதேவன் மீது பாடிய வசன விடு தூதையும் கட்டளைக் கலித்துறை யாப்பில் இயற்றியுள்ளனர். 19-ஆம் நூற்றாண்டில் சரவண முத்துப்பிள்ளை தத்தை விடு தூதை வண்ணப்பாடல்களில் இயற்றியுள்ளார்[3].

19-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “பிரபந்த தீபம்” என்னும் நூல்

தூதின் இலக்கணம் சொல்லும் வகையே

ஆண்பால் பெண்பால் அவரவர் காதலை

பாணன் முதலாகப் பாவைய ரோடும்

கிள்ளை முதலாம் அஃறிணை யோடும்

தூது போவெனச் சொல்லுதல் ஆமே

எனத் தூதாக அனுப்பப்படும் பொருட்கள் குறித்து சொல்கிறதே தவிர யாப்பு அமைப்பைப் பற்றி கூறவில்லை.

வகைகள்

தூதினைப் புறத்தூது, அகத்தூது என இரண்டாக வகைப்படுத்தலாம். தலைவன் தலைவிக்கு இடையே அனுப்பப்படுவது அகத்தூது. அரசர்கள் பிற அரசர்களுக்கு செய்தி அனுப்புதலும், புலவர்கள் புரவலர்களுக்கு தூது அனுப்புவதும் போன்றவை புறத்தூது.

பிரிவும் தூதும்

தொல்காப்பியர் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே பிரிவு நிகழ்வதற்கு உரிய காரணங்களைக் கூறுகிறார். கல்வி கற்கும் பொருட்டு செல்லுதல், மன்னனின் பகைவர்கள் மேல் போர் தொடுத்து செல்லுதல், தூது செல்லுதல் போன்ற காரணங்களுக்காக தலைவன் செல்ல நேரும்போது தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே பிரிவு ஏற்படும் என்று தொல்காப்பியர் கூறுகின்றார். இந்த இடத்தில் தூது செல்லுதல் பற்றி குறிப்பு வருகிற்து.

தொல்காப்பிய அகத்திணை இயலில், பாலை திணையில் பிரிவு பற்றி

ஓதல் பகையே, தூது இவை பிரிவே

என்ற விளக்கம் இருக்கிறது. ஓதல், பகை, தூது போன்ற காரணங்களால் பிரிவு ஏற்படும் எனவும் அவை அந்தணர்க்கும் அரசருக்கும் உரியதாகும் என தொல்காப்பியம் வகுக்கிறது.

இவை தவிர பகை தணிவினைப் பிரிவு, சேந்தற்குற்றுழிப் பிரிவு, துணைவயிற் பிரிவு, நாடுவாவற் பிரிவு, அறப்புறங்காவற் பிரிவு, பொருள் வயிற்பிரிவு முதலான பிரிவுகளும் உள்ளன. இது போல ஏதோ ஒரு காரணத்தால் பிரிவு நிகழும்போது பிரிந்திருப்பவர்களுக்கு இடையே தூது நிகழும்.

இறையனார் அகப்பொருளில் பிரிவு வகைகள் ஆறுவகை என்பதை,

ஓதல் காவல் பகைதணி வினையே

வேந்தர்க் குற்றுழி பொருட்பிணி பரத்தையென்

றாங்கவ் வாறே யவ்வயிற் பிரிவே

–    இறையனார் அகப்பொருள் தூது. 35

என்று கூறுகின்றது.

உயர்திணை தூது

அகப்பாடல்களில் ஊடல் காலத்தில் ஊடல் தீர்க்கும் பொருட்டு தூது செல்பவர்கள் தொல்காப்பியத்தில் வாயில்கள் எனப்படுகின்றனர். அவர்கள் வழியாக சொல்லப்படும் செய்திகள் தூது வகையை சேர்ந்தவை. தலைவனுக்கும், தலைவிக்கும் இடையே தூது செல்பவர்கள் யார் என்பதை தொல்காப்பியம்,

தோழி தாயே பார்ப்பான் பாங்கன்

பாணன் பாடினி இளைஞர் விருந்தினர்

கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்

யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப  - தொல்காப்பியம் - கற்பியல். 52

என்று கூறுகின்றது. தோழி, தாய், பார்ப்பான், பாங்கன், பாணன் என்போர் தூது செல்வர் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. இவை உயர்திணை தூது வகையை சேர்ந்தவை.

அஃறிணை தூது

உயர்திணை தூது தவிர அஃறிணையையும் தலைவன் தலைவிக்கு இடையே தூது செல்லுமாறு பாடும் வழ்க்கம் இருக்கிறது. இவ்விதம் தூது செல்ல அன்னம், கிளி, மான், வண்டு போன்ற உயிரினங்கள் மட்டுமன்றி, காற்று, முகில், தமிழ் என்பனவும் தூது இலக்கியங்களிலே தூது செல்ல அனுப்பப்படுகின்றன.

பெரும்பாலும் பிரிவுத்துன்பம் மிகுந்த நிலையில் தன் காதல் மிகுதியையும், ஆற்றாமையையும் அஃறிணைப் பொருள்களிடம் கூறித் தூது செல்லும்படி தலைவி வேண்டுவாள்.

ஞாயிறு திங்கள் அறிவே நாணே

கடலே கானல் விலங்கே மரனே

புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே

அவையல பிறவும் நுதலிய நெறியால்

சொல்லுந போலவும் கேட்குந போலவும்

சொல்லி யாங்கு அமையும் என்மனார் புலவர் -  தொல்காப்பியம். பொருளியல். செய்யுள். 201

இவை அஃறிணைத் தூது வகையை சேர்ந்தவை. அஃறிணை பொருள்களை தூது விடுவதால் ஏற்படும் பயனை நம்பியகப் பொருள் பாடல் சொல்கிறது

நெஞ்சு நாணு நிறைசோ ரறிவும்

செஞ்சுடர்ப் பருதியுந் திங்களும் மாலையும்

புள்ளும் மாவும் புணரியுங் கானலும்

உள்ளுறுத் யன்றவு மொழிந்தவை பிறவும்

தன்சொற் கேட்குந போலவுந் தனக்கவை

இன்சொற் சொல்லுந போலவு மேவல்

செய்குந போலவுந் தேற்றுன போலவும்

மொய்குழற் கிழத்தி மொழிந்தாங் கமையும்

–    நம்பியகப் பொருள் நூற். 223

அஃறிணைப் பொருள் தன் துயர நிலை கேட்டு, தனக்கு ஆறுதல் கூறுதல் போலவும், தன் ஏவலைக் கேட்டு அதன்படி செய்தல் போலவும், தன்னைத் தேற்றுதல் போலவும் தலைவிக்குத் தோன்றுவதால் அவள் உள்ளத்தில் ஓர் ஆறுதல் உண்டாகிறது என நம்பியகப் பொருள் சொல்கிறது.

தூது நூல்கள்

பொ.யு. 14-ஆம் நூற்றாண்டில் தோன்றிய நெஞ்சுவிடு தூது என்ற நூலைத் தொடர்ந்து அன்னம் விடு தூது, மேகவிடு தூது, பழையது விடு தூது, மான் விடு தூது, கிள்ளை விடு தூது போன்ற நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட தூது நூல்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் சில:

  • அழகர் கிள்ளைவிடுதூது[4] - பலபட்டடைச் சொக்கநாதர்
  • கச்சி ஆனந்த ருத்ரேசர் வண்டுவிடு தூது[5] - கச்சியப்ப முனிவர்
  • காக்கை விடு தூது[6] - பாந்தளூர் வெண்கோழியார், ச.வெள்ளைவாரணார் (தொகுப்பாசிரியர்)
  • காந்தியடிகள் நெஞ்சுவிடு தூது - ந. மு. வேங்கடசாமி நாட்டார்
  • கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது[7] - சுப்பிரதீபக் கவிராயர்
  • சிவஞான பாலைய தேசிகர் நெஞ்சுவிடு தூது - துறைமங்கலம் சிவப்பிரகாசர்
  • சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடு தூது[8] - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  • சேதுபதி விறலிவிடு தூது[9] - சரவணப் பெருமாள் கவிராயர்
  • தமிழ்விடு தூது அல்லது மதுரை சொக்கநாதர் தமிழ்விடு தூது[10] - தி. சங்குப்புலவர்
  • திருத்தணிகை மயில்விடு தூது - முத்துவேலுக் கவிராயர்
  • திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது[11] - கோவை கந்தசாமி முதலியார்
  • துறைசை அம்பலவாண தேசிகர் பொன்விடு தூது - சுந்தரநாதர்
  • நெல்விடுதூது[12]
  • பஞ்சவன்னத் தூது - இணுவில் சின்னத்தம்பிப் புலவர்
  • பத்மகிரிநாதர் தென்றல்விடு தூது[13] - பலபட்டடைச் சொக்கநாதர்
  • பழனி முருகன் புகையிலைவிடு தூது - சீனிச்சக்கரைப் புலவர்
  • மதுரைச் சொக்கநாதர் பணவிடு தூது[14] - அருணாசலக் கவிராயர்
  • மாரிவாயில் (1936) - சோமசுந்தர பாரதியார்
  • முகில்விடுதூது
  • நெஞ்சு விடு தூது[15] - உமாபதி சிவாச்சாரியார்

இவற்றையும் பார்க்கவும்

குறிப்புகள்

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.