under review

துரைசாமிக் கவிராயர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
m (Madhusaml moved page துரைசாமிக்‌ கவிராயர்‌ to துரைசாமிக் கவிராயர் without leaving a redirect: Removed Zero width non-joiner in title)
 
(No difference)

Latest revision as of 08:39, 25 July 2023

துரைசாமிக்‌ கவிராயர்‌ (1800-1900) இசைவாணர். கீர்த்தனங்களும்‌ தோத்திரப்‌ பாடல்களும்‌ படைத்தார். பழனியாண்டவர்‌ கீர்த்தனை முக்கியமான படைப்பு.

வாழ்க்கைக் குறிப்பு

சென்னை, ராயபுரத்தில் சாமியப்பக் கவிராயருக்கு மகனாக 1800-ல் துரைசாமிக்‌ கவிராயர்‌ பிறந்தார். அவரது பரம்பரை கவி பாடுவதில் வல்லமை பெற்றதால் 'கவிராயர்’ பட்டம் குடும்பத்திற்கு வழிவழியாக இருந்தது. பழநிமலை முருகனை வேண்டிப் பெற்ற பிள்ளையான துரைசாமிக்‌ கவிராயர்‌ பழநியாண்டவர் மீது பக்தி கொண்டு பல பாடல்களை இயற்றினார். பம்மல்‌ விஜயரங்க முதலியார்‌ இவரை ஆதரித்தார்.

இசை வாழ்க்கை

பழனியாண்டவர்‌ கீர்த்தனை என்ற பெயரில்‌ இவருடைய கீர்த்தனங்களும்‌ தோத்திரப்‌ பாடல்களும்‌ உள்ளன. நூற்றிமூன்று கீர்த்தனங்கள்‌ பாடினார். முந்நூற்றி எண்பத்தியேழு அந்தாதிமாலை இயற்றமிழ்ப்‌ பாடல்களை இயற்றினார். இவருடைய கீர்த்தனப்‌பாடல்‌ தொகுதி பலமுறை(1874, 1876) அச்சானது. சென்னை அருகில்‌ உள்ள சங்கிலி நாச்சியார்‌ பிறந்த தலமாகிய ஞாயிறு தலத்தைக்‌ குறித்து இருபதிகங்கள்‌ பாடினார். இவர்‌ முப்பது இராகங்களுக்கு மேல்‌ பாடினார்‌. இரண்டொரு பதங்களும்‌ உள்ளன. துரைசாமிக்‌ கவிராயருடைய பழனியாண்டவர்‌ கீர்த்தனைகளில்‌ இரண்டு காஞ்சிபுரம்‌ தனக்கோடியம்மாள்‌ பாடினார். திருப்போரூர்‌ முருகன்‌ மீதும்‌ இவர்‌ எட்டு கீர்த்தனங்கள்‌ பாடினார். அவ்வூரின் வேம்படி விநாயகர்‌ மீது ஒன்றும்; திருப்போரூர்ச்‌ சிதம்பர சுவாமிகள்‌ மீது ஒன்றும் ஏனையவை போரூர்‌ முருகன்‌ மீதும்‌ பாடினார். தம்‌ பாடல்களில்‌ இவர்‌ சமய ஆச்சாரியர்களையும்‌, போரூர்‌ சிதம்பர சுவாமியையும்‌ பாடினார்.

இயல்புகள்
  • துரைசாமிக்‌ கவிராயருடைய கிருதிகளில் எளிமையான சொல்லமைப்பும்‌ உணர்ச்சிப்‌ பெருக்கும்‌ உள்ளது.
  • பதங்களில்‌ சிற்றின்பச்‌ சாயல்‌ இல்லை.
  • சில பல்லவிகளில்‌ இராகத்தின்‌ பெயர்‌ வருமாறும்‌, எல்லாக்‌ கீர்த்தனங்களில்‌ இறுதிச்‌ சரணத்தில்‌ தம்பெயர் முத்திரையாக வருமாறும் பாடினார்.
  • இவருடைய பல்லவிகள்‌ யாவும்‌ சிறுசொற்கள்‌ இணைந்து பாடப்பெற்றிருப்பதால்‌ சங்கத வித்துவான்கள்‌ பல்லவிபாடித்‌ திறமையைக்‌ காட்டுவதற்கு இடமளிப்பவை.

பாடல் நடை

  • 1935 - 1940 ஆண்டுகளில்‌ தமிழகமெங்கும் டி.கே. பட்டம்மாள்‌ பாடிய பாடல்:

இராகம்‌ - பியாகடை தாளம்‌ - ரூபகம்‌
பல்லவி: இன்னம்‌ பாராமுக மேனோ
இதுவும்‌ உமக்குநீதி தானோ (இன்னம்‌)
அனுபல்லவி: வன்னத்‌ தோகைமயில்‌ மேல்வரும்‌
வையாபுரி வேல்முருகையா (இன்னம்‌)
சரணம்‌: மானீன்ற வள்ளி மகிழும்‌ மணவாளா
மாதவர்‌ சேவித பங்கய மலாத்தாளா
தேனார்கடம்‌ பணிதோளா
தீரா வீரா சூரசங்காரா (இன்னம்‌)
பின்வரும்‌ கீர்த்தனமும்‌ அக்காலம்‌ மிகப்‌ பிரசித்தமாயிருந்த ஒன்று.

  • பழநியாண்டவர் மீது பாடிய பாடல்:

பல்லவி: மகிமை பொய்யா?
மலைக் குழந்தை வடிவேல் முருகையா (மகிமை)
அனுபல்லவி: உன் மகிமை என் அளவினில் செல்லாதா?
என் மனத்துயரை நின் அருள் வெல்லாதா? (மகிமை)
சரணம்: சமைத்துக் காவடி தன்னில் காட்டிய சாதம்
நின் சன்னிதி வைத்துத் துதி செய்ய
அமைத்து நாள் சென்றும் அப்போது
சமையலான அன்னமாய்க் காட்டும் அதிசயம்..! (மகிமை)

விருது

  • வீராசாமிச்‌ செட்டியார்‌ இவர் பாடல்தொகுப்பிற்கு சிறப்புப்‌ பாயிரம் பாடினார்.
  • இவருடைய கீர்த்தனங்கள்‌ அச்சானபோது, திருத்தணிகை விசாகப்‌ பெருமாளய்யர்‌, காஞ்சி மகாவித்துவான்‌ சபாபதி முதலியார்‌, அட்டாவதானம்‌ வீராசாமிச்‌ செட்டியார்‌ ஆகியோர்‌ சிறப்புப்பாயிரம்‌ அளித்தனர்.

மறைவு

துரைசாமிக்‌ கவிராயர்‌ 1900-ல் காலமானார்.

நூல்கள்

  • கீர்த்தனப்‌ பாடல்‌ தொகுதி
  • பழனியாண்டவர்‌ கீர்த்தனைகள்

உசாத்துணை


✅Finalised Page