தி.ஜானகிராமன்

From Tamil Wiki
Revision as of 16:08, 27 February 2022 by SathishKorea (talk | contribs)

//This page is being created by User:SathishKorea//

தி. ஜானகிராமன் , நன்றி விகடன்

தி. ஜானகிராமன் (28 பிப்ரவரி 1921 - 18 நவம்பர் 1982) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். "சக்தி வைத்தியம்" என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். தமிழின் மிகப்புகழ் பெற்ற நாவல்களான `மோகமுள்', `அம்மா வந்தாள்', `மரப்பசு', `உயிர்த்தேன்', `நளபாகம்' போன்றவற்றை எழுதியவர். முறையான சங்கீதப் பயிற்சி பெற்றிருந்த எழுத்தாளர். சங்கீதம் பற்றிய விரிவான நுண் தகவல்கள் பலவற்றை தன் கதைகளில் எழுத்தாக்கியவர். இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம் முதலியவற்றிலும் ஈடுபாடு மிக்கவர்.

பிறப்பு, கல்வி

தி.ஜானகிராமன் 1921-ஆம் வருடம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள மன்னார்குடிக்கு அருகிலுள்ள தேவங்குடி கிராமத்தில் பிறந்தார். அவருடைய தந்தை தியாகராஜ சாஸ்திரிகள் நல்ல சமஸ்கிருதப் புலமையும், சங்கீத ஞானமும் கொண்டவர் மேலும் இராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற இதிகாசங்களை உபன்யாசம் செய்பவராகவும் இருந்திருக்கிறார். தி.ஜா வின் குடும்பம் தேவன்குடியிலிருந்து இடம்பெயர்ந்து கும்பகோணம், தஞ்சை போன்ற ஊர்களில் கொஞ்சகாலம் வசித்தபின், வலங்கைமானுக்கு அருகிலிருக்கும் கீழவிடையல் என்ற கிராமத்தில் நிலைபெற்றது.

ஜானகிராமனின் தஞ்சாவூரிலும், கீழவிடையலுக்கு அருகிலிருந்த கருப்பூரிலும் பள்ளிக்கல்வி பெற்றார். கும்பகோணம் அரசினர் கல்லூரியில் இன்டர்மீடியட்டும், பி.ஏ.வும் பயின்றார், சென்னையில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலும் படித்துப் பட்டம் வாங்கினார்.

தனிவாழ்க்கை

ஆசிரியர் பயிற்சிப்படிப்புக்குப் பின் 11 ஆண்டுகள் பள்ளியாசிரியராக வேலை பார்த்தார். இதில் ஓர் ஆண்டு கும்பகோணத்திலும், ஓர் ஆண்டு சென்னையிலும், 9  ஆண்டுகள் தஞ்சை மாவட்டத்திலுள்ள அய்யம்பேட்டையிலும், குத்தாலத்திலும் பணியாற்றினார். ஜானகிராமனின் சில சிறுகதைகள் இந்த ஆசிரியர் வேலையைப் பின்புலமாகக் கொண்டிருப்பவை.

1954-இல், தன்னுடைய 33-ஆவது வயதில், அகில இந்திய வானொலியின் சென்னை பிரிவில், கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பதவியேற்று, 1968 வரை – பதினான்கு ஆண்டுகள் சென்னையில் வாழ்ந்தார். 1968-இல் பதவி உயர்வு பெற்று டில்லி வானொலி நிலையத்துக்கு மாற்றம் பெற்றார். அங்கு உதவித் தலைமை கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணிபுரிந்தவர், பின்பதவி உயர்வு பெற்று 1974 - 1981 வரை தலைமைக் கல்வி அமைப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  எனினும் அவரது சிறப்பான சேவையைப் பாராட்டி அவரை Emeritus Producer என்ற பதவி கொடுத்து ஆகாசவாணி கெளரவித்தது. அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்றபின் அசோகமித்திரனுக்குப் பின், ’கணையாழியி’ பத்திரிகையின் கெளரவ ஆசிரியராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றியிருக்கிறார்.

ஜானகிராமனுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உண்டு. 1982-இல் ஜானகிராமன் தன்னுடைய 61-ஆவது வயதில் சென்னையில் காலமானார்.